|
|
|
2.3 மனித மனத்தின் விந்தைகள்
|
|
மனத்தின் வேகமும்
அது செய்யும் விந்தையும் யார் அறிவார்? வாழ்க்கைப் பயணத்தில் மனம் செய்யும்
விந்தைகளை, நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கின்ற அதன் இயல்பினைக் கலை
வடிவம் கொடுத்துக் கதைகள் ஆக்கியிருக்கிறார் தி.ஜா. இவ்வுலகில் எங்கும்,
எதிலும் ரசிக்கக் கூடிய விஷயங்கள் உள்ளன என்பதை எடுத்துக்காட்டுவன போல் அமைந்துள்ளன.
இவருடைய கதைகள், இவர் கதைகளில் கடமை உணர்வு, கோபம், வெறுப்பு, பாசம், பொறாமை,
அப்பாவித்தனம், சூழ்ச்சி, அன்பு, அகங்காரம் எல்லாமே முழுமையாக எடுத்துரைக்கப்படுகின்றன.
நாமொன்று நினைத்தால்
தெய்வமொன்று நினைக்கும் என்பது போல் அமைந்த கதைகளில் ஒன்றுதான் கண்டாமணி
(யாதும் ஊரே, ப.32). வீட்டிலேயே சமைத்துப் பல பேருக்கு உணவளிக்கும்
தொழிலைச் செய்து வரும் மார்க்கம் என்பவர் மனம் ஒரு நாளில் படும் பாட்டினைச்
சுவைபடச் சொல்கிறது இந்தச் சிறுகதை.
ஒருநாள் பள்ளிக்கூட
விஞ்ஞான ஆசிரியரின் உதவியாளர் பசியோடு வருகிறார். அவருக்கு உபசரித்து உணவளித்த
பின் குழம்பைத் தற்செயலாகக் கிளறிக் கரண்டியைத் தூக்கிய பொழுது அதில் சூட்டில்
வதங்கிய பாம்புக் குட்டி! கணவன், மனைவி இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள்.
"இத்தனைக் காலமா
மானமாக் காலம் தள்ளியாச்சே, இப்படிச் சோதனை செய்கிறாயே", என்று மனைவி தெய்வத்திடம்
முறையிட, மார்க்கம் "பஞ்ச லோகத்திலே கைநீளத்திலே கண்டாமணி வாங்கித் தொங்க
விடறேன், சேதி பரவாமல் இருக்கணும்", என்று வேண்டிக் கொண்டு அதன்படியே கண்டாமணி
செய்து வைக்கிறார். ஊரெல்லாம் அந்த மணியின் அழகையும், அதன் ஒலியையும் புகழ்ந்தார்கள்.
ஆனால் மார்க்கத்திற்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை. மணி அடிக்கும் பொழுதெல்லாம்
அந்த மணி ஓசையில், இறந்து போன ஐராவதமே காட்சி அளிக்கிறார். மணி அலையில் ஐராவதம்
வருவதைப் பொறுக்க முடியாமல் தர்மகர்த்தா வீட்டுக்குப் போகிறார். "செட்டியார்வாள்
அந்த மணியோசை கேட்கிற போதெல்லாம் நாமதான் பண்ணி வச்சோம்னு அகங்காரம் வந்து
நிற்கிறது. அதனால் கண்டாமணியை நான் எடுத்துப் போய்விடுகிறேன். அதே பெறுமானத்துக்குச்
சின்னதாக நாலஞ்சு வெள்ளி மணி பண்ணி வச்சிடலாம்னு பார்த்தேன்" என்கிறார்.
‘வெள்ளிமணி பண்ணி
வையுங்க. வேண்டாங்கல, இதைத் திருப்பி எடுத்துக்கிட்டுப் போவதாவது, யாராவது
கேட்டா சிரிப்பாங்க’ என்று பிடிவாதமாக மறுத்து விடுகிறார். மார்க்கம் சோர்ந்து
வீட்டுக்குத் திரும்புகிறார். கோவிலில் ஒலித்த மணி ஓசை ‘கணார்’ என்று அவர்மீது
அதிர்ந்தது. ‘முழுச்செவிடர்கள் எப்படியிருப்பார்கள் என்று கற்பனை செய்து
பார்க்க முயன்றார் அவர்’ என்று கதை நிறைவு பெறுகிறது. மார்க்கத்தின் சோகத்தை,
பிறரிடம் சொல்ல முடியாத அந்த வேதனையை, முழுச் செவிடர்கள் எப்படியிருப்பார்கள்
என்று கற்பனை செய்து பார்க்க முயன்றார் என்று வேடிக்கையாய் வெளிப்படுத்தும்
தி.ஜா.வின் தனித்தன்மையை இங்கே காணலாம். எதை மறக்க வேண்டும் என்று மார்க்கம்
நினைத்தாரோ அதை மறக்கவே முடியாதபடி தாமாகவே ஒரு செயல் செய்ய நேர்ந்த சூழலை
இவ்வாறு வெளிப்படுத்துகிறது கண்டாமணி.
|
|
2.3.1 செம்மையும் சிறுமையும்
|
|
இவ்வுலகில் ஏமாறுபவர்கள் இருப்பதால்
ஏமாற்றுகிறார்களா, அல்லது ஏமாற்று வித்தகர்களால் ஏமாந்து போகிறார்களா என்பது
இன்றுவரை புரியாத புதிராகத்தான் இருக்கிறது. இந்த ஏமாற்றுக்காரர்களையும்,
ஏமாந்து நிற்கும் அப்பாவிகளையும் இனம் காட்டும் இரண்டு கதைகள். சத்தியமா
(சிவப்பு ரிக் ஷா,ப.118) கடன் தீர்ந்தது (சிவப்பு ரிக் ஷா,ப.15).
“இது ஏதுடா காலண்டர்”
“நான்தாண்டா வாங்கிண்டு வந்தேன்
மண்ணெண்ணைக் கடை நாயக்கர் கிட்டேயிருந்து”
“ரொம்ப நன்னாருக்குடா என்ன விலைடா
இது?”
“விலைக்குக் கொடுக்கமாட்டா தெரிஞ்சவாளுக்கு
மட்டும் இனாமாக் கொடுப்பா.” இப்படி ஒரு அழகான காலண்டருக்குச்
சொந்தக்காரனாக ஆகிவிட்ட சிறுவன் எதிர் வீட்டு நண்பர்களிடம் தான் அதைத் தினமும்
கடையில் பார்த்து ரசித்ததையும், முதலாளி தனக்கு அதைக் கொடுத்து விட்டதையும்
சொல்கிறான். “இது எவ்வளவு அழகா இருக்கு பாருடா, இதைப் பார்த்துக்கிட்டே நிக்கணும்போல்
இருக்குடா” என்று ரசித்துச் சொல்கிறான். நண்பனோ குள்ளநரி, பேச்சை மாற்றிவிட்டு
“நான் ஒன்று சொல்கிறேன். அது மாதிரி செய்வாயா” என்று கேட்கிறான். சிறுவன்
யோசிக்கிறான். பக்குவமாகச் சிறுவனிடம் வார்த்தைகளைப் பேசிவிட்டுத் தான் கேட்பதைச்
சத்தியமாக, சாமி சாட்சியாகக் கொடுப்பதாக வாக்குறுதி பெற்றுக் கொண்டு, காலண்டரைக்
கேட்கிறான். சிறுவன் திடுக்கிட்டாலும் காலண்டரைக் கொடுத்து விடுகிறான்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டே வந்த
தந்தை குமுறுகிறார். சத்தியம் வாங்கிக் கொண்டு காலண்டரை அடித்துக் கொண்டு
போய்விட்டானே என்று பொருமுகிறார். மகனிடம் அவனைப் போலவே தந்திரமாகப் பேசி
அதைத் திருப்பி வாங்கச் சொல்கிறார். சிறுவன் செல்கிறான். தயங்கித் தயங்கி
அவனைப்போலவே வாக்குறுதியெல்லாம் வாங்கிவிட்டு, காலண்டரைக் கேட்காமல் ரப்பர்த்
துண்டைப் பெருமையோடு வாங்கிக் கொண்டு வருகிறான். தந்தையிடம், ‘இது மையெல்லாம்
அழிக்கும்’ என்று பேசுகிறான். தந்தை ‘காலண்டரை ஏன் கேட்கவில்லை’? என்கிறார்.
“எப்படிப்பா கேக்கிறது?”
“அவன் கேட்ட மாதிரியே கேக்கிறது”
“எனக்குப் பயமாயிருக்கு”
“ஏன்?”
“கொடுத்தப்புறம் எப்படீப்பா கேக்கிறது?”
தந்தை பின்னர் மனைவியிடம் அங்கலாய்க்கிறார்.
“இந்த மாதிரி தெய்வங்கள்ளாம் இந்த பூமியிலே ஏண்டி பிறக்கறதுகள்? இது கெட்டிக்கார
உலகமாச்சே!” தந்தையைப் போலவே இக்கதை படிக்கும் நம் உள்ளத்திலேயும் அன்பும்
இரக்கமும் அந்த அசட்டுப் பையன்மேல் ஏற்படுகிறதல்லவா? எதிர்வீட்டுச் சிறுவனிடம்
காணப்படும் ஏமாற்றும் குணம் அவன் பெரியவனாகும் போது எப்படியிருக்கும் என்று
கற்பனை செய்வது போல் எழுதப்பட்ட கதைகள் கடன் தீர்ந்தது
(சிவப்பு ரிக் ஷா) கங்கா ஸ்நானம் (சக்தி வைத்தியம்) ஆகியன.
கடன் தீர்ந்தது
கதையில் வரும் அறுபது வயது சுந்தர தேசிகர் அப்பாவி, ஏமாளி. அயோக்கியன் ராம்தாஸிடம்
ஏமாந்து போகிறார். குழி பதினைந்து ரூபாய் மதிப்புள்ள நிலங்களை நாலரை ரூபாய்க்கு
வாங்கித் தருவதாக ஆசை காட்டி ஏமாற்றி விடுகிறான். ராமதாஸை நம்பிய சுந்தர
தேசிகரிடம் சிறிது சிறிதாக அவர் சொத்தையெல்லாம் விற்கச் செய்து அந்தப் பணத்தையெல்லாம்
வாங்கிக்கொண்டு விடுகிறான். எல்லாவற்றையும் இழந்து நிற்கிறார் தேசிகர். தேசிகருக்கு
ஆறுதல் கூறும் உறவினர் ராமதாஸ் மேல் வழக்குப் பதிவு செய்கிறார். வழக்கு முடியும்
தறுவாயில் ராமதாஸ் பணத்தையெல்லாம் செலவழித்து விட்டு உடல்நலம் குன்றி மரணப்
படுக்கையில் கிடக்கிறான். அப்போது சுந்தர தேசிகர் அவன் வீடு தேடி வருகிறார்.
அவனிடம் “எந்தத் தப்பு, குத்தம் பண்ணினாலும் அதுக்குப் பிராயச்சித்தம் பண்ணி
இந்த உடம்பையும், நெஞ்சையும் வருத்தித்தான் ஆகணும் மனுஷன். இல்லாட்டா பாவம்
பின்னாலே வந்து வந்து அறுக்கும். நம்ம சாஸ்திரங்கள்லே வாங்கின கடனைத் திருப்பிக்
கொடுக்காமச் செத்துப் போகக் கூடாதுன்னு சொல்லியிருக்கு. இப்ப உன் கடனை நீ
தீத்துப்பிடனும், நானும் பாக்கி இல்லேன்னு மனசாரச் சொல்லிடனும். உன் கையில்
இருக்கிறது ஏதாவது கொடு. ஒரு ரூபா கொடுத்தாலும் போதும் உன் கடன் தீந்து போச்சுன்னு
லோகமாதா ஆணையாச் சொல்லிப்பிடறேன்” (சிவப்பு ரிக் ஷா, ப.56) என்கிறார்.
அழுது கொண்டே அவன் மனைவி இரண்டணாவைக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டு “உன் கடன்
தீர்ந்தது” என்கிறார். தன்னை வஞ்சித்ததைச் சகித்துக்கொண்டு பொறுமையாக, பெருந்தன்மையாக
இருப்பதே அரிது. அதைவிட மேலாகச் சென்று, ஏமாற்றியவனைப் பாவம் தொடரக் கூடாது
என்று நினைக்கும் செம்மை மனமுடையவராய் உயர்ந்து நிற்கிறார் சுந்தர தேசிகர்,
மனித மனத்தின் உயர்வை இதைவிடச் சிறப்பாகக் காட்ட முடியுமா?
|
|
2.3.2 பெருமிதமும்
பொறாமையும் |
|
மனித மனத்தின் விசித்திரங்களை எல்லாம் ஓவியங்களாக்கி
இருக்கிறார் தி.ஜா. மனிதனை மனிதன் எந்த அளவுக்கு ஏமாற்றுகிறான் என்று அதன்
எல்லையைத் தொட்டுக் காட்டினாலும் அதன் மறுபக்கத்தையும் காட்டத் தவறுவதில்லை.
அப்பாவித்தனத்தின் எல்லை என்றிருப்பது பெருமிதத்திற்கும் பெருந்தன்மைக்கும்
சாட்சியாக அமைந்து விடுவதைப் பாருங்கள், அப்பா பிள்ளை
(யாதும் ஊரே, ப.82) என்ற கதையில்.
காவிரிக் கரையில் வாழும் குஞ்சு முதியவர். அண்மையில்
தாயைப் பறி கொடுத்தவர். மனிதாபிமானம் மிகுந்தவர். தாயைப் பற்றிய நினைவுகளில்
மூழ்கியிருந்தவரைச் சோகமாக வந்த ஓர் இளைஞன் சந்திக்கிறான். அவரை நமஸ்கரித்து
மிகவும் பணிவாக அவர் மகனுடன் வேலை பார்ப்பவன் என்று கூறுகிறான். முதியவர்
தம் நண்பரின் அண்ணன் மகன் அவன் என்பதையும் தெரிந்து கொள்கிறார். வந்தவன்
கண்களில் நீர் வழிய, ‘குழந்தைக்கு முடியிறக்குவதற்கு அம்மா, மனைவியுடன்
வைத்தீஸ்வரன் கோவில் வந்தேன். வந்த இடத்தில் அம்மா கீழே விழுந்து அடிபட்டதால்
மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். கையில் பணமில்லை யாரையும் தெரியவில்லை’
என்று கலங்கி நிற்கிறான். குஞ்சுவும் அவனுக்கு ஆறுதல் கூறிக் கையில் காசில்லாத
நிலையிலும் பக்கத்தில் கடன் வாங்கி 20 ரூபாய் கொடுக்கிறார். இது போன்ற
சமயங்களில் உதவுவதுதானே மனித இயல்பு என்று, மாலையில் அவர்களுக்கு வேண்டிய
உணவையும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு செல்கிறார். அவன் சொன்ன மருத்துவ
மனையில் அப்படி யாரும் இருக்கவில்லை. பக்கத்தில் இருந்த மருத்துவ மனைகளிலும்
விசாரித்து விட்டு வீட்டுக்குச் செல்கிறார்.
இரவே மகனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். நாலாம்
நாள் அதற்குப் பதில் வருகிறது. “விவரம் யாவும் தெரிந்து கொண்டேன். ராமநாதன்
அளவுக்கு மீறின புத்திசாலி. போன வருடமே அவனை வேலையை விட்டு நீக்கி விட்டார்கள்.
வேலை வாங்கித் தருகிறேன் என்று 30,40 பி.ஏ; எம்.ஏக்களிடம் 100, 200 என்று
வாங்கிக் கொண்டானாம். அவன் அப்பா, சித்தப்பாவின் நண்பர்களிடம் இதேபோல்
கடன் வாங்கிக் கொண்டு போய்விட்டான். கவலைப்பட வேண்டாம். அந்தப் பணம் திரும்பி
வராது. இருபது ரூபாயோடு போயிற்று. இனிமேல் யாராவது கேட்டால் தீர விசாரியாமல்
கொடுக்க வேண்டாம். ராமநாதனுக்கு இன்னும் கலியாணமாகவில்லை. தாங்கள்
வருத்தப்பட வேண்டாம்.” என்ற கடிதத்தைக் கண்டதும் ‘பேஷ்’ என்றார். “நம்
பிள்ளையும் நம்ம மாதிரிதான் இருக்கான்னேன்” என்று கடிதத்தை மனைவிக்கு வாசித்துக்
காட்டினார். தன்னை ஒருவன் ஏமாற்றி விட்டானே என்ற கோபத்தை விடத் தன் மகன்
தன்னைப் போல் இருப்பதில் திருப்தி அடைவதாகக் காட்டுவது தெரிகிறதல்லவா?
இத்தகைய மனிதப் பண்பு உடையவர்கள்தானே மனித வாழ்க்கையின் உயர்வை இவ்வுலகிற்கு
உணர்த்துகிறார்கள்!
இத்தகைய பெருமித உணர்வுக்கு எதிரான பொறாமை உணர்வு
ஒரு மனிதனை எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் கதை பாயசம்
(பிடி கருணை, ப.33).
77 வயது சாமநாது, 7 பெண்களைப் பெற்றும் லட்சாதிபதியாக
வாழ்கின்ற அண்ணன் மகன் சுப்பராயனைப் பார்த்துப் பொறாமைப் படுகிறார். இளவயதில்
வறுமையில் உழன்று படிப்பையே நிறுத்தியவன்; அலைந்து, திரிந்து உழைத்து இன்று
பெரிய மனிதன் ஆகிவிட்டான். ஊரில் அவனுக்குள்ள செல்வாக்கைக் கண்டு பொறாமைத்
தீயில் வெந்து சாகிறார் சாமநாது.
சுப்பராயன் மகள் திருமணத்திற்கு உறவினர் எல்லாரும்
வந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்க்கப் பார்க்க சுப்பராயன் மீது பொறாமை
அதிகரிக்கிறது. திருமணத்துக்கு அழைக்கிறார்கள். நாயனம் வாசிக்கப்படுகிறது.
சாமநாதுக்கு மூச்சு முட்டிற்று. கொல்லைப்புறம் நடந்தார். கடைசிக் கட்டில்
கோட்டை அடுப்புகள் எரிகின்றன. சாக்கு மறைவில் ஒரு பயல் வெள்ளரிப் பிஞ்சு
நறுக்கிக் கொண்டிருக்கிறான். வேறு ஒரு பிராணி இல்லை. ஒரு தவலையில் பாயசம்
மணக்கிறது. வயிறளவு உயரம். ஐந்நூறு அறுநூறு பேர் குடிக்கிற பாயசம். ‘நான்
ஒண்டியாகவே கவிழ்த்து விடுவேன்’ இரண்டு கைகளைக் கொடுத்து மூச்சை அடக்கி
மேல் பக்கத்தைச் சாய்த்தார். பாயசம் சாக்கடையில் ஓடிற்று. அரிவாள் மணையை
எடுத்துக்கொண்டு ஓடி வருகிறான் சிறுவன்.
“எங்கே போயிட்டேள் எல்லோரும் இத்தனை பெரிய எலியைப்
பாயசத்திலே நீஞ்ச விட்டு? இத்தனை பாயசத்தையும் சாக்கடைக்கா படைச்சேள்?
மூடக் கூடவா தட்டு இல்லே?” இந்தக் கூப்பாட்டுக்கு முன் யார் என்ன பேச முடியும்?
பொறாமைப் பேய் எப்படியெல்லாம் ஆட்டம் போடுகிறது என்பதைச் சொல்கிறது இந்தக்
கதை.
|
|
2.3.3 அகங்காரமும்
அப்பாவித்தனமும் |
|
வாழ்க்கையில் வசதிகள் அனைத்தும் வந்து விட்டால்
சிலருக்கு அகங்காரமும் வந்து விடுகிறது. அகங்காரம், ஆணவம் ஆகியவற்றின்
எல்லை அழிவுதான். ஆனால் மனிதன் அகங்காரத்தை விடாமல் அழிவை அழைக்கின்றானே!
பரதேசி வந்தான் (சிவப்பு ரிக் ஷா, ப.105) சிறுகதையில்
வரும் வழக்கறிஞர், இசைஞானம் உடையவர். அனைவராலும் அண்ணா என அழைக்கப்படுபவர்.
இவர் நீர்வீழ்ச்சியைப் போல் வாதாடும்போது நீதிபதியின் தனித்தன்மை, நடுவுநிலைமை
எல்லாம் அமுங்கி ஆற்றோடு போய்விடும். வாழ்க்கையில் சின்னத் தப்பைக் கூட
லேசில் விடமாட்டார். இந்த மனிதர் தம் ஒரே பிள்ளையின் திருமணத்தன்று கம்பீரமாகப்
பந்தி விசாரித்துக் கொண்டிருக்கிறார். பெரிய மனிதர்களுக்கென்று போடப்பட்ட
பந்தியில் கிழப்பருவத்தில் ஒரு பரதேசி உட்கார்ந்திருந்தான். கோபத்துடன்
"கிளப்புடா அந்தக் கழுதையை" என்றார். பசியோடு உணவில் கை வைத்தவனை எழுப்பி
இழுத்து வெளியே தள்ளினார். பசியைக் கிளப்பிவிட்ட எரிச்சல் ஆற்றாமையும்,
கோபமும் தொண்டையை அடைக்க, பசியால் மூச்சு வேகமாக, வயிறு குழைய ஒரே கத்தாகக்
கத்தினான்.
“ஓய் வக்கீலே! நீர் நன்னா இருப்பீரா? இலையில்
உட்கார்ந்தவனை எமதூதன் மாதிரி தள்ளிண்டு வந்தீரே!”
“ஏய்! போறயா நொறுக்கி விடட்டுமா”
“போறேன் போறேன். ஆனால் திரும்பி வருவேன். அடுத்த மாசம் இதே தேதிக்கு உம்ம
வீட்டிலேயே சாப்பிட வரேன். நீர் அழுது கொண்டே போடற சாப்பாட்டுக்கு வரேன்
பார்த்துக்க”
அவன் வாக்குப் பலித்து விடுகிறது. வக்கீலின்
பிள்ளை மாரடைப்பினால் இறந்து போகிறான். வக்கீலின் அகங்காரம் தவிடு பொடியாகிறது.
அடுத்த மாதம் வருகிறான். வக்கீல் அவனிடம் “உம்
வாக்குப் பலித்து விட்டது! நீர் சாபமிட்டீர்” என்கிறார்.
“என் பசி சாபமிட்டது”
“நீர் பெரிய அறிவாளியாக இருப்பீர் போலிருக்கிறது.
ஏன் இப்படிச் சோற்றுக்கு அலைகிறீர்.”
“அறிவு இருந்தால் பிச்சை எடுக்காமல் இருக்க முடியுமா?”
“நீர் சொல்வது எனக்குப் புரியவில்லை”
“எப்படிப் புரியும்? உம்முடைய அகங்காரம் அவ்வளவு
லேசாக, பஞ்சையாக இருக்கிறது. அந்தத் தெம்புக்கு அஸ்திவாரமான அன்பு உம்மிடம்
இல்லை. துளி அன்பை இவ்வளவு பெரிய அகந்தையில் கலந்திருந்தால் அது கம்பீரமாக
நிற்கும். உம்முடைய அகங்காரத்துக்கு நான் சொன்ன வலுவில்லை. இருந்தால் மோட்டார்,
ஆயிரம் வேலி, வைரக்கடுக்கன், இந்தப் பரதேசி எல்லாவற்றையும் சேர்த்து உட்கார
வைத்துக் கண் நிறைய உள்ளம் நிறைய ஆனந்தமடைந்திருப்பீர். மோட்டார், வைரம்
இதற்கப்பால் உம் அகங்காரத்திற்குக் கண் தெரியவில்லை”. அண்ணா சூன்யத்தைப்
பார்த்துக் கொண்டு தேம்பினார். அவருக்கு, வந்தவன் பரதேசியாகத் தோன்றவில்லை,
பரம்பொருளாகவே தோன்றுகிறான். “காலதேவரே உட்காரும்” என்கிறார். மனிதனின்
அகங்காரமும், ஆணவமும் பொடிப்பொடியாவதைச் சித்திரிக்கும் சிறுகதையாகப் பரதேசி
வந்தான் அமைந்து விடுகிறது.
இனி கோவிந்தராவ் என்கிற அப்பாவி மனிதரைப் பார்க்கலாம்.
“கீழே நாலு முழத்தில் ஒரு சிவராயர் கலர் போட்ட அழுக்கு வேஷ்டி, கோடிக்கணக்கில்
இட்டிலிகளுக்கும் தோசைகளுக்கும் சட்னிகளுக்கும் அரைத்துக் கொடுத்த உடம்பு”
(அக்பர் சாஸ்திரி, ப.123). இந்த கோவிந்த ராவ் ஆறு குழந்தைகளுக்குத் தந்தை.
ஏழாவது குழந்தைக்காக மனைவி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறாள்.
ஆம்புலன்சுக்குப் போன் செய்து விட்டுக் காத்துக் கொண்டிருக்கிறார் கோவிந்தராவ்.
இனி ஆம்புலன்சு வந்து வீட்டு வாசலில் நின்று தன் சம்சாரத்தை ராஜோபசரமாக
அழைத்துப் போய் வைத்தியம் செய்கிற பெருமையில் இருக்கிறார். ஆம்புலன்சு
வருவதற்குள் குழந்தை பிறந்து விடுகிறது. ஆம்புலன்சு வந்தபோது இனி வேண்டாமென்று
மறுத்து விடுகிறார். “இந்தத் தடவை ரொம்ப லேட்டாப் போயிடுத்து. இனிமே அடுத்த
பிரசவத்துக்கு இரண்டு நாள் முன்னாடியே சொல்லி வச்சுப்பிடனும் என்கிறார்”
கோவிந்தராவ். இந்த அப்பாவித்தனத்தின் எல்லையைக் கண்டு நம்மால் நகைக்காமல்
இருக்க முடியுமா?
|
|
2.3.4 இசைச்
சுவையும் நகைச்சுவையும் |
|
இசை
ஞானமும், இசையில் ஈடுபாடும் கொண்ட தி.ஜா. அந்த அனுபவத்தையும் கற்பனை கலந்து
கதைகளாக்கியுள்ளார். மொழிக்கு அப்பாற்பட்டது இசையின் தெய்வீகத் தன்மை. இசை
ஈடுபாடும் அதன் இனிமையும் ஆழமும் எல்லாத் தடைகளையும் உடைக்கும் வல்லமை பெற்றவை
என்பதை வாசகர்க்கு உணர்த்தும் வெளிப்பாடுகளே செய்தி (சிவப்பு
ரிக் ஷா,ப.130), இசைப்பயிற்சி (சக்தி வைத்தியம், ப.171)
ஆகிய சிறுகதைகள்.
தமிழ் தெரியாத வெள்ளைக்காரன் போல்ஸ்க்கா,
நாதஸ்வரத்தில் கீர்த்தனைகள் அல்லாமல் திரையிசைப் பாடல்களை வாசிப்பதை ஒத்துக்கொள்ள
முடியாத நாதஸ்வர வித்வான் தங்கவேலு, இரண்டையும் வாசிக்கத் தெரிந்தவனான தங்கவேலுவின்
மகன் இவர்கள் செய்தி சிறுகதையில் வரும் கதை மாந்தர்கள்.
தங்கவேலு தியாகையரின் சாந்தமுலேகாவை
வாசித்த போது வெள்ளைக்கார போல்ஸ்க்கா அந்த இசையில் தன்னையே பறிகொடுத்தவனாய்
‘சாந்தமுலேகா’வையே திரும்பத் திரும்ப வாசிக்கச் சொல்கிறான். கோயில் மணியின்
கார்வையைப் போல் அந்த நிசப்தத்தில் அவன் தலையும், உள்ளமும், ஆத்மாவும் அசைந்து
ஆடிக்கொண்டிருந்தது.
"இதில் ஏதோ ஒரு செய்தி இருக்கிறது.
இந்த உலகம் முழுவதும் ஒரே இரைச்சல். ஒரே கூச்சல். ஒரே அடிதடி. புயல்வீசி
மரங்களை முறிக்கிறது. அலை உயர உயர எழுந்து குடிசைகளை முழுக அடிக்கிறது. இடி
விழுந்து சாலையின் மரங்கள் பட்டுப்போகின்றன. இந்த இரைச்சலில் நான் மட்டும்
அமைதியைக் காண்கிறேன். அரவமே கேட்காத உயரத்திற்கு எழுந்து அங்கே அமைதியைக்
கண்டு விட்டேன்". வெள்ளைக்காரனுடைய இந்தப் பேச்சை மொழி பெயர்த்துச் சொன்ன
போது தங்கவேலு ஆச்சரியப்பட்டுப் போகிறார். "நம்ம தியாகராஜ சுவாமியும் அமைதி
வேணும்னு தானே, சாந்தம் வேணும்னு தானே இந்தக் கீர்த்தனத்திலே ஏக்கத்தோடு
கேட்டிருக்கார்." அமைதி அமைதி என்று கடைசி லட்சியமாக இந்தப் பாட்டு இறைஞ்சுகிறது
என்பதைக் கேட்டு போல்ஸ்காவும் அதிர்ந்து போய்விட்டான். தங்கவேலுவுக்கும்
ஒரு செய்தி கிடைத்து விட்டது என்று கதை நிறைவு பெறுகிறது. இக்கதை மொழிவேறுபாட்டுக்கு
இடையிலும் இசையின் மொழி ஒன்றாகவே இருக்கிறது; இசை ஒன்றுபட்ட உணர்வை உண்டாக்குகிறது
என்பதை எவ்வளவு எளிமையாக உணர்த்துகிறது பாருங்கள்.
இசைப்பயிற்சி
சிறுகதையில் வரும் குப்பாண்டி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன். அவனுடைய
குரல் வளத்தையும், இசை ஞானத்தையும் பார்த்துப் பிரமித்த வித்துவான் மல்லிகை
அவனுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கத் தீர்மானித்து விடுகிறார். "குப்பாண்டிக்குப்
பாட்டுச் சொல்லிக் கொடுக்கப்போகிறீர்களாமே?" என்று ஊரெல்லாம் துக்கம் விசாரிக்கிறது.
"வீட்டுக்குள்ளே வைத்துப் பாட்டுச் சொல்லித் தருவீரா" என்றவுடன் ஆண்டாண்டுக்
காலமான பழக்கம், அச்சம்,குழப்பத்துக்கு இடையில் கொல்லைப் புறத்திலே வைத்துச்
சொல்லிக் கொடுக்கிறார். "மீசையிலே படாம கூழ் குடிச்சாச்சு" என்கிறார் கர்ணம்.
கோபம் தலைக்கேறுகிறது. “நாளைக்கு உள்ள வச்சிண்டு பாடம் சொல்றேனா இல்லையா
பாருங்கடா ஒழிச மக்களா” என்று சுருதிப் பெட்டியை வீசி எறிகிறார். இசையார்வம்
பொய்ச் சம்பிரதாயங்களை மீறிக் கொண்டு செல்லும் என்பதற்கு எடுத்துக்காட்டாக
மல்லிகையின் முயற்சிகளையும், அதில் அவர் படும் துன்பங்களையும் இக்கதையில்
காணலாம்.
|
|
• நகைச்சுவை
|
|
தி.ஜா.வின்
சிறுகதைகளில் நகைச்சுவை இயல்பாக அமைந்திருப்பதைக் காணலாம். முழுவதும் நகைச்சுவையாக
எழுதப்பட்ட கதைகளும் உண்டு.
78 வயதுக்கிழவர் தம் 98 வயதுத்
தந்தையுடன் ஓய்வூதியம் வாங்கச் செல்கிறார். தம்முடைய மகன் (நான்காண்டுகளுக்கு
முன் ஓய்வு பெற்றவர்) காசிக்குச் சென்றிருப்பதால் நான்காம் வீட்டில் இருக்கும்
உதவிப் பதிவாளர் மகனைத் துணைக்கு அழைத்துச் செல்கிறார். அவன் வயது முதிர்ந்த
கிழவர்களுக்குத் துணையாக இருந்து அவர்களை மாட்டு வண்டியில் அழைத்துச் செல்கிறான்.
திரும்பி வரும்போது வண்டி குடைசாய்ந்து விட இளைஞனுக்குப் பலத்த அடி. மருத்துவ
மனைக்குச் சென்று கட்டுப் போட்டுக் கொண்ட அவனுக்குத் துணையாக வந்தார்கள்
கிழவர்கள் என்று முடியும் கதைக்குத் துணை (அக்பர் சாஸ்திரி,
ப.14) என்பது தலைப்பு. இவ்வாறு நகைச்சுவையோடு எழுதும் தி.ஜா.வைப் பாராட்டாமல்
இருக்க முடியாது.
|