2.5 பிற சிறப்புகள்

மனக்கண்ணில் நிறுத்தும்படியான முழுமையான கதைமாந்தர் வர்ணனை, உரையாடல் வழியே கதை சொல்லும் திறன், இயல்பான நகைச்சுவை ஆகியவற்றை முன்பு கண்டோம். பொருத்தமான இடங்களில் உவமைகளையும் பழமொழிகளையும் கையாளுதல், உடல் நல, உளநலக் குறிப்பு போன்ற அனுபவ மொழிகளை ஆங்காங்கு அளித்தல் ஆகியவற்றையும் தி.ஜா. படைப்புக்களின் சிறப்பு இயல்புகளாகக் கூறலாம். ஒரு மதிய நேரத்து வர்ணனையைப் பாருங்கள்.

“நடுப்பகல் ஒரு மணிக்கு மணியடித்ததும் இந்த ஆபீசே அப்படியே போட்டது போட்டபடி குழாயடிக்குக் கை கழுவ ஓடும். அந்த ஒரு மணி நேரத்தில் மகாவிஷ்ணுவே வந்தால் கூட மரியாதை காட்ட மாட்டார்கள்” (ஸ்ரீ ராம ஜெயம் - யாதும் ஊரே, ப.129).

“இந்தப் பஞ்சாயத்து பல்பு எங்காத்துக் காரரும் கச்சேரிக்குப் போறார்னு மினுங்கிண்டிருக்கும்” (கோபுர விளக்கு - யாதும் ஊரே, ப.1)- இது போல் வழக்கில் உள்ள தொடர்களைக் கையாளுவது இயல்பாக அமைந்துள்ளது.

உடல் நலம், உள்ள நலம் காக்கும் அனுபவ மொழிகளைப் பார்ப்போமா?

“புடிகருணையை நெருப்பிலே போட்டு வாட்டி, தோலைத் தேச்சுட்டு, தேனைக் குழைச்சு சாப்பிட்டா கண்ணெரிச்சல், மூலம் இருக்கிற இடம் தெரியாமல் பறந்திடுமாம்” (பிடி கருணை, ப.1).

“கருவேப்பிலைக் குழம்பு, வேப்பம் பூவைச் சாதத்து மேலே வச்சு ஆமணக்கெண்ணையைக் காய்ச்சி அதன் மேலே ஊற்றிச் சாப்பிட்டால் டாக்டருக்கு ஒரு தம்பிடி கொடுக்க வேண்டாம்” (அக்பர் சாஸ்திரி ப.5).

எலும்பு மூடிக் காணப்படும் சிறுவனைத் தேற்ற அக்பர் சாஸ்திரி கூறும் யோசனை. “கொள்ளு தினமும் கொஞ்சம் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைச் சாப்பிட்டு, அந்தச் சுண்டலையும் கொஞ்சம் உப்புப் போட்டுச் சாப்பிட்டால் பையன் அரபிக் குதிரை மாதிரி வலுவானவனாவான்” (அக்பர் சாஸ்திரி, ப.5)

“எல்லாரும் சந்தோஷமா இருக்கணும், எல்லாரும் திருப்தியாயிருக்கணும், எத்தனையோ கிடைக்கும். கிடைக்காம இருக்கும். எத்தனையோ வரும். எத்தனையோ போகும். அதுக்காக சந்தோஷமா இருக்கறதை விடப்படாது. முயற்சி பண்ணி சந்தோஷமா இருக்கக் கத்துக்கணும்” (மாப்பிள்ளைத் தோழன் - பிடி கருணை, ப.140) மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இந்த அறிவுரை ஒரு வழிகாட்டியல்லவா?