3.0 பாட முன்னுரை

சிறுகதை என்னும் நம் பாடத் தொகுதியில் மூன்றாவதாக அமைந்துள்ள அண்ணாவின் சிறுகதைகள் என்னும் பாடத்தை இப்போது பார்ப்போமா?

தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அறிஞர் அண்ணாவின் பங்கினை யாரும் மறுக்க இயலாது. 1.3.67 முதல் 2.2.69 முடிய, தமிழகத்தின் முதல்வராக இருந்து ஆட்சி செய்த பெருமைக்குரியவர். 1934 முதல் 1966 முடிய இவர் படைத்தவை 89 சிறுகதைகள் ஆகும். இவை இவர் நடத்திய இதழ்களிலும், திராவிட இயக்க இதழ்களிலும், மலர்களிலும் வெளிவந்தவை. இவருடைய சிறுகதைகள் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவை அண்ணாவின் சிறுகதைகள் (1969), அண்ணாவின் ஆறு கதைகள் (1968), அண்ணாவின் குட்டிக்கதைகள் என்பனவாம். அண்மையில் பூம்புகார் பதிப்பகம் வெளியிட்ட ‘பேரறிஞர் அண்ணாவின் சிறுகதைத் தொகுதி’ என்னும் நூலில் 108 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இச்சிறுகதைகளைப் படைத்தளித்த அண்ணாவைப் பற்றிய அறிமுகத்திற்குச் செல்வோமா?