3.1 அண்ணா

இவர் நாடறிந்த நல்ல பேச்சாளர். அடுக்குமொழி அண்ணா என்ற அடைமொழி, இவரது பேச்சிலும் எழுத்திலும் எதுகையும் மோனையும் அடுக்கி வந்து அழகு தரும் என்பதை நமக்குக் காட்டும். 15.09.1909 இல் சின்னக் காஞ்சிபுரத்தில் இவர் பிறந்தார். இவர் தந்தை நடராசன். தாய் பங்காரு அம்மாள். வாழ்க்கைத் துணை இராணி அம்மையார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ.ஆனர்சு (பொருளியல்) பட்டம் பெற்றவர்.

பெரியார் ஈ.வெ.ரா.வின் சுயமரியாதைக் கொள்கையால் கவரப்பட்டு அவரோடு நீதிக் கட்சியிலும், பின்னர்த் திராவிடர் கழகத்திலும் இருந்தார். 1949இல் தி.மு.க.வைத் தோற்றுவித்தார். 1957இல் தமிழ்நாடு சட்டமன்றத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையேற்று எதிர்க்கட்சித் தலைவரானார். 1962இல் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். 1.3.67இல் தமிழக முதல்வரானார். 4.4.67இல் சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயரிட்டுப் பெருமை பெற்றார். 1968இல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தினார். 1968இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 2.2.1969இல் அண்ணா இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர் படைப்புகள் இன்றும் அழியாப் புகழ் பெற்று விளங்குகின்றன.

3.1.1 பன்முக ஆற்றல்

எழுத்தாற்றல், பேச்சாற்றல் இரண்டும் கைவரப் பெற்றவர். தமிழ்த் தென்றல் திரு.வி.க.வைப் போல் அனைத்து மேடைகளிலும் அழகு தமிழில் பேச முடியும் எனக் காட்டியவர். மேடைப் பேச்சுக் கலைக்கு மறுமலர்ச்சி அளித்தவர். இவர் சொற்பொழிவுகளில் எதுகையும் மோனையும் இயல்பாய் வந்தன. அரசியல் மேடைகளிலும், தொழிலாளர் கூட்டங்களிலும் சமுதாய மாநாடுகளிலும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழியிலும் திறம்படப் பேசும் வல்லமையால் மக்களை மகிழ்வித்தவர் அண்ணா. தலைவர்களின் ஆங்கிலச் சொற்பொழிவுகளை அழகு தமிழில் மொழிபெயர்த்துப் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் கொடுத்தவர். அண்ணா பெற்றிருந்த இருமொழியின் பேச்சாற்றலைப் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் பாராட்டுவதைப் பாருங்கள்: "தளபதி அண்ணாதுரை ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்போர் ஆங்கிலத்தில் இப்படிச் சொற்களை அளந்து பேசுவோர் தமிழில் இப்படிப் பேசமுடியாது என்றுதான் எண்ணுவர். ஆனால் தமிழில் பேசினாலோ இந்தச் செந்தமிழ்ச் சிங்கம் ஆங்கிலக் காட்டிற்குப் போகுமா என எண்ணுவர்".

• இதழாசிரியர்

விடுதலை, திராவிட நாடு, நம்நாடு, காஞ்சி முதலிய இதழ்களில் பணியாற்றியவர். தாமே சில இதழ்களுக்கும் பொறுப்பேற்று நடத்தியவர். சமகாலச் சம்பவங்கள், அன்றாடச் செய்திகள், உலக நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அழகு தமிழில் தொகுத்துத் தந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் இவர் கருத்துகள் குறிப்பிடத் தக்கவையாக அமைந்தன. ‘தம்பிக்கு’ என மடல் எழுதி மக்கள் உள்ளங்களைக் கவர்ந்தவர். கடித இலக்கியம் என்றும் புதிய இலக்கிய வகையை உருவாக்கியவர். இவருடைய கடித இலக்கியம் 24 தொகுதிகள் வெளிவந்தது, இவை பல பதிப்புகளைப் பெற்றன.

• நாடக ஆசிரியர்

அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு ஆகிய நாடகங்கள் அவரை நாடக ஆசிரியராகப் புகழ் பெற வைத்தன. அவரது நாடகங்களைக் கண்ட எழுத்தாளர் கல்கி, அவரைத் ‘தென்னாட்டு பெர்னார்ட்சா’ என்று பாராட்டினார். ஆங்கில நாடகங்களை ஆழ்ந்து கற்ற அண்ணாவின் நாடகங்களில் திகைக்க வைக்கும் நிகழ்ச்சிகளும் திருப்பு முனைகளும் அடுக்கடுக்காய் வந்து பார்ப்பவரைப் பரவசப்படுத்தும். நாடகங்கள் பாமரர்களுக்கான பல்கலைக்கழகங்கள் என்பதற்கு இவருடைய நாடகங்கள் சிறந்த சான்றாக விளங்கின.

• புதின ஆசிரியர்

சமுதாய அவலங்களைத் தமக்கே உரிய எழுத்து வன்மையால் அழுத்தமாகப் புதினங்களில் புலப்படுத்தினார். ஆங்கிலத்தில் படித்த புதினங்களைத் தமிழில் சுருக்கித் தந்தார். என் வாழ்வு (1940), பார்வதி பி.ஏ. (1945), ரங்கோன் ராதா (1948), கலிங்கராணி (1954), தசாவதாரம், இன்ப ஒளி (1968) முதலிய ஆறு புதினங்களைப் படைத்துள்ளார். 9 குறும்புதினங்களும் இவர் படைத்துள்ளார்.

1930 முதல் 1969 முடிய, தம் எழுத்தால், பேச்சால், அரசியல் மாற்றங்களுக்குப் பெரும் பங்களிப்பைச் செய்தவர் அண்ணா. சிறுகதை, புதினம், நாடகம் என்ற இலக்கிய வகைகளில் சோதனை செய்து அவற்றைச் சமுதாயச் சீர்திருத்தத்துக்குப் பயன்படச் செய்தவர். தமிழ் உரைநடையை வளர்த்தவர். மேடைத் தமிழ் என்ற ஒன்றினைப் பொலிவுறச் செய்தவர். இயல், இசை, நாடகங்களில் ஆழ்ந்த கருத்தைச் செலுத்தியவர். பல்துறை அறிவு, பல்துறை ஆற்றல், எழுத்தாற்றல், பேச்சாற்றல், சிந்தனை ஆற்றல், அறிவுக் கூர்மை, கருத்துருவாக்கத்திறம், கருத்துப் பிரச்சார உத்திகள் இவற்றைக் கொண்ட அண்ணாவைப் பேரறிஞர் என்று அறிஞர் உலகம் பாராட்டுவது பொருத்தமல்லவா !

• சிறுகதைப் படைப்புகள்

படைப்பாற்றல் மிக்க அண்ணா சௌமியன், சமதர்மன், சம்மட்டி, ஒற்றன், ஆணி, பரதன் என்ற புனை பெயர்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார். இவருடைய முதல் சிறுகதையான கொக்கரக்கோ ஆனந்தவிகடன் 11.2.34 இதழில் வெளிவந்தது. பொங்கல் பரிசு 14.1.66 இதழில் வெளிவந்தது. இவருடைய 89 சிறுகதைகள் இவர் நடத்திய இதழ்களிலும், திராவிட இயக்க இதழ்களிலும் வெளிவந்தன. தமிழ்ச் சமுதாயத்தை அரித்துக் கொண்டிருக்கும் சேற்றுப் புழுக்களாக உள்ள சமுதாயக் கேடுகள் அனைத்தையும் சிறுகதைகளில் படம்பிடித்துக் காட்டினார் அண்ணா. சமுதாய அவலங்கள் தரும் பாதிப்பையும் வெளிப்படுத்தினார்.

புலி நகம், பிடிசாம்பல், திவ்யஜோதி, தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில், இரும்பாரம், பவழ பஸ்பம் முதலிய வரலாற்றுச் சிறுகதைகளையும் அண்ணா படைத்துள்ளார்.