அண்ணாவின் மொழி நடை
தனித்தன்மை வாய்ந்தது.
எதுகையும், மோனையும் இவர் நடையில்
இயல்பாய்
அமைவதைக் காணலாம். "அருவியின் சலசலப்பைப் போல் ஓர்
அழகு நடையைத் தமக்கென உருவாக்கியவர்
இவர்.
கற்றோரையும் கல்லாதவரையும் கவருவது இவரது எழுத்து நடை"
என்று எழுத்தாளர் அகிலன் இவர் நடையைப் பாராட்டுகிறார்.
சான்றாக ஒன்றிரண்டைப் பார்ப்போமா?
“சாருபாலா சமூக சேவை செய்து
பிரபல்யமடைந்து
கொண்டிருந்த குமாரி. முகிலுக்கு இணையான குழல். அது
தழுவியிருந்தது வட்ட நிலவு முகம். பிறை நெற்றி.
பேசும்
கண்கள். துடிக்கும் அதரம். அங்கம் தங்கம். நடை நாட்டியம்.
பேச்சோ கீதம்” (அண்ணாவின் சிறுகதைகள்).
பரஞ்சோதி சிறுத்தொண்டனாக
மாறிய நிலையினை
அண்ணாவின் அழகுநடை எப்படி எடுத்துரைக்கிறது பாருங்கள்.
“பரஞ்சோதி சிறுத்தொண்டன்
ஆனான். படைத்தலைவன்
பக்தன் ஆனான். முரசு கொட்டியவன் முக்திக்கு வழி தேட
முனைந்து விட்டான். சாளுக்கிய நாட்டுக்குச்
சண்ட மாருதமாகியவன் சரித்திரத்தில் இடம்
பெறாமல்
சாதுக்கள் கூட்டத்தில் ஒருவன் ஆகிவிடுகிறான்” (பிடிசாம்பல்).
அண்ணாவுக்கே உரிய மொழி நடைக்கு
இன்னுமொரு
எடுத்துக்காட்டுப் பாருங்கள்:
“செங்கோடனின் செவ்வாழைக்
குலை ! அவனுடைய
இன்பக் கனவு! குழந்தைகளின் குதூகலம். அதற்கு மரண
ஓலை தயாரித்து விட்டான் சுந்தரம்” (செவ்வாழை).
புதிய உவமைகளைக் கூறுவதும் இவர் தனிச்
சிறப்பு.
“குரோட்டன்ஸ் செடியிலே குண்டு மல்லிகை
பூக்குமா?” (அண்ணாவின் சிறுகதைகள்)
முரண் என்னும் அணியும் அவர் மொழி
நடைக்கு வலிமை
சேர்ப்பதைக் காணலாம்.
“அங்கே 250 ரூபாயில்
நாய் வாங்கினார்கள். இங்கோ
இரண்டு தலைமுறையாகக் குடும்பச் சொத்தாக
இருந்த
கம்பங் கொல்லையை 250 ரூபாய்க்கு
விற்றுவிட்டார்கள்” (இருபரம்பரைகள்).