தனிமனித ஒழுக்கம்,
சமூகப் பொறுப்புணர்வு இரண்டும்
சேர்ந்து செயலாற்றும் நிலையிலேயே மனிதன் சிறப்படைகிறான்.
தனிமனிதன் சில சமயங்களில் சமுதாயத்தை எதிர்த்துப்
போராடும் நிலையில் தோல்வியைத் தழுவ வேண்டி உள்ளது.
ஆனால் அதற்காக இந்த அறப்போராட்டத்தை நிறுத்தக் கூடாது
என்ற கருத்தைச் சொல்ல வரும் கதை ‘கண்ணுக்குத் தெரிந்த
கிருமிகள்’ (ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்).
"மெட்ரோ தண்ணியும் சாக்கடைத் தண்ணியும் ஒன்றாகக்
கலந்ததை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டாமா" என்று
கேட்டுப் போராடும் பழனிச்சாமி ஓய்வு பெற்ற
டெபுடி
செகரட்டரி (டில்லி). இதனால் அவருக்கு
ஏற்படும்
போராட்டங்களின் இறுதியில் உயிரையே விட்டார். இவரது
சடலத்தைப் பிரேத பரிசோதனைக்குப் பிறகு மருத்துவ
மனையில் இருந்து எடுப்பதற்குக் கூட ‘அன்பளிப்பு’ கொடுக்க வேண்டும் என்பது
சமூகச் சிலுவை சுமந்த பழனிச்சாமிக்குத்
தெரியவே தெரியாது என்று இக்கதை நிறைவு பெறுகிறது.
தன்மானம் இழந்து பிறர் காலில் விழும்
கலாச்சாரத்தை,
அதன் விளைவுகளைக் கற்பனை செய்து எழுதப்பட்ட சிறுகதை
'எதிர்ப் பரிணாமம்' (ஒரு மாமரமும்
மரங்கொத்திப்
பறவைகளும்).
கி.பி.2140 இல் உலகம் முழுவதும் ஆட்கொல்லி
நோயான
எய்ட்ஸ் ஒழிக்கப் பட்டு விட்ட காலத்தில் தமிழக மக்களை ஒரு
விசித்திரமான நோய் பிடித்துக் கொண்டது.
தமிழர்களில்
பெரும்பான்மையோர் தரையோடு தரையாய்த் தவழ்ந்து பிறகு
தரைக்குக் கீழேயும் போக விரும்பி, தலைகளைத் தரையில்
மோதி மோதி மூக்குகள் உடைபட்டு, சிலர்
ஆபத்தான
நிலையில் இருப்பதாக ஒரு செய்தி. சர்வதேச அறிஞர்கள் ஒன்று
கூடி விவாதித்து இதற்குரிய காரணங்களைக் கூறுகின்றனர்:
"இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தவழ்ந்தபடியே
உயிர்
வாழும் இவர்களின் மூதாதையர் வாழ்க்கை
முறைபற்றி
விசாரித்தபோது அமைச்சர்கள், அரசியல் வாதிகள் அல்லது
உயர் காவல் துறையினராக இருந்தமை தெரிய
வருகிறது.
உயிரின உடம்பில் அமைந்த ஜீன்கள் வழி வாரிசுகளுக்கும்
இக்குணம் வந்து காலில் விழுவதற்கு ஏற்பச் சம்பந்தபட்டவரின்
உடல் வாகை மாற்றுகின்றன".
இவ்வியத்தகு வியாதிக்குச் சிகிச்சை முறை கீழ்க்கண்டவாறு
கூறப்படுகிறது: "தனி நபர் வழிபாடு என்ற போலி உலகைச்
சிருஷ்டித்துக் கொண்டவருக்கு ஏற்பட்ட இந்நிலையைப் போக்க,
தவழ்ந்து கிடக்கும் நோயாளிகளின் காதுகளில் கணியன்
பூங்குன்றன் பாடிய 'பெரியோரை வியத்தலும் இலமே' என்ற
பாடலை 24 மணி நேரமும் ஒலிக்கச் செய்ய வேண்டும்.
கயவர்தாம் தங்களைத் தாமே வியப்பர்
என்ற வள்ளுவர்
வாசகத்தைக் காதில் குத்தும்படி சொல்ல வேண்டும். இதனால்
ஏற்படும் மாற்றங்கள் இவர்களின் செல்களில் மாற்றங்களை
ஏற்படுத்தும். இப்படி ஏற்பட ஏற்படப் படுத்துப்போன தமிழனின்
முதுகெலும்பு மீண்டும் செங்குத்தாக ஆகும். இதற்கு மூன்று
தலைமுறை ஆகும் என்றாலும் இன்றைய தமிழன் மூன்றாவது
தலைமுறைக்காவது முதுகெலும்பு நிமிர்ந்தால் சரிதான்" என்ற
வரிகளில் ஆசிரியரின் சமூகப் பொறுப்புணர்வும், தமிழன் தலை
நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற அவருடைய வேட்கையும்
வெளிப்படக் காணலாம்.
|