எதையும் எளிதில் சொல்லும்
உத்தியே இவர்
கையாளக்கூடியது. அவலங்களையும் நகைச்சுவையாகச்
சொல்லும் உத்தியை இவர் படைப்புகளில் காணலாம். அரசு
அலுவலகங்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை
நகைச்சுவையாக வெளிப்படுத்துவதைப் பாருங்கள். ஒரு
மின்விசிறி ஓடவில்லை என்றால் கூட அதைச்
சரி
பண்ணுவதற்கு வைத்திருக்கும் சட்ட திட்டங்கள் உடனடியாகச்
செயல்படுத்த முடியாமல் இருப்பது பின்வருமாறு
சொல்லப்படுகிறது:
"நம்ம மெக்கானிக் ஒரே
நிமிடத்தில் முடிச்சுடுவாராம்.
ஆனால் அது தப்பாம். ஒரு அதிகாரியோ அல்லது ஊழியரோ
சர்க்கார் பணத்தை மோசடி பண்ணக் கூடாதுங்கிறதுக்காக
இப்படிப்பட்ட சட்ட திட்டங்களைப் போட்டிருக்காங்க. ஆனால்
அதில் தங்கள் சுயநலத்தையும், சோம்பல்
குணத்தையும்,
பொறுப்பற்ற தன்மையையும் காட்டுவதால் ஏற்படும் அவலங்கள்
இவை". அரசு வேலை என்றால் இப்படி அல்லல் ஏற்படுத்தும்
என்ற அச்சம் ஓர் இளைஞனை அரசு வேலைக்கான நியமன
ஆணையையே கிழித்துப் போட வைக்கிறது என்று
‘அரவிந்தும் ஆறுமுகமும்’ கதையில் எடுத்துரைக்கிறார்.
ஓர் அமைச்சரின் வருகையை ஒட்டிய முன்னேற்பாடுகள்,
குறிப்பாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு ஏற்படுத்திய
குழப்பத்தை நகைச்சுவையாகச் சொல்கிறது. ‘அமைச்சர் புகுந்த
மணவிழா’. போக்குவரத்து நெரிசலில் அமைச்சர் திருமணத்திற்கு
வரத் தாமதமாகவே மணமகனே அமைச்சரை எதிர்கொண்டு
அழைக்கச் செல்கிறான். போக்குவரத்து நெரிசலில்
மணமகன் மாட்டிக் கொள்ள, மணமகனைக் காணாததால்
"அவனுக்குப் பெண்ணைப் பிடிக்கவில்லை" என்று சிலர் பேச,
அதை நம்பிய அமைச்சரும் அவன் பொறுப்பற்றுப் போனதாகக்
கருதி, வேறொரு சொந்தக்காரப் பையனை மணமகனாக்கினார்.
தாமதமாக வந்த மணமகன் சோகமாக எங்கோ சென்றான்.
மறுநாள் வந்த பத்திரிகைச் செய்தி: 'மணப்பெண் பிடிக்காமல்
மாப்பிள்ளை தலைமறைவு! அமைச்சரின் சமயோசிதத்தால்
மணமகள் குலமகளானாள்!'. இப்படி, சிறுகதை முடிவில் தரும்
அழுத்தம் இவருக்கே உரிய உத்தி எனலாம்.
சிறுகதைத் தலைப்பிலேயே சொல்ல
வந்த கருத்தைச்
சுருக்கி உரைப்பதும் இவருடைய உத்தி எனலாம்.
எ.கா: புலித்தோல் போர்த்திய மாடுகள், கண்ணுக்குத் தெரிந்த
கிருமிகள், பொறுத்தது போதாது, (ஒரு மாமரமும்
மரங்கொத்திப் பறவைகளும்), மேதைகள் தோற்றனர்
(குற்றம் பார்க்கில்), சிநேகித சாதி, வேலையில் 'காயம்' (மனம்
கொத்தி மனிதர்கள்.)
|