குழந்தைகள், பெண்கள்
உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்
என்ற பிரபஞ்சனின் நோக்கம் அவருடைய பல சிறுகதைகளில்
வெளிப்படக் காண்கிறோம். நேற்று மனிதர்கள் சிறுகதைத்
தொகுப்பின் முன்னுரையில் ஆசிரியர் ஆணாதிக்க உணர்வுகள்
சமுதாயத்தில் மிகுந்து இருப்பதை எப்படிச் சொல்கிறார் என்று
பாருங்களேன்:
எனக்காக அவள் உயிரை,
உடம்பை, அணு அணுவாய்த்
தேய்த்து உடம்புத் தோலை எனக்குப் பாதுகையாய்த் தைத்துத்
தருவாளா? நல்லது அவளை சக்தி
என்று நான்
கொண்டாடுவேன். அவளை நான் தெய்வம் ஆக்குவேன்.
கோவிலில் வைத்துக் கும்பிடுவேன். ஆனால் ஒரு சக மனுஷியாக, சிநேகிதியாக, சகாவாக, உயிர்ப் பிண்டமாக, ஆத்மாவாக
மட்டும் நான் நடத்த மாட்டேன்! அப்படிப் பெண்ணைச் சக
மனிதராக ஏற்றுக் கொண்டால் என் ஆணாதிக்கம் என்னாவது?
(நேற்று மனிதர்கள் - முன்னுரை)
இருட்டின் வாசல்
சிறுகதையில் வேலைக்குச் சென்று
பொருள் ஈட்டும் பெண்ணுக்கு அவளுடைய சம்பளத்தில் கூட
உரிமை இல்லாதிருப்பதைச் சொல்கிறார் பிரபஞ்சன்.
கணவன் திருமணமாகிப் பதின்மூன்று
மாதங்களில் சம்பளம்
தருகிற நாளில் ஏதோ வேலையாக வருவது போல் வந்து
அவள் சம்பளக் கவரைப் பெற்றுக் கொண்டு விடுவான். ஒரு
நாள் அப்படி வாங்கிக் கொள்ளும் போது,
"ஒரு அஞ்சு ரூபாய் கொடுங்களேன்;
தலையை வலிக்குது காபி
சாப்பிடணும்" என்றாள். அவன்
பைக்குள் கையைவிட்டான் . சில்லறையை எடுத்தான். எண்ணினான்.
"காபிக்கு ரெண்டு ரூபாய்
போதாதா" என்கிறான்.
இவ்வாறு தனி மனிதனின்
மன மாறுதல்களும், சமுதாய
மாற்றங்களும் பிரபஞ்சன் சிறுகதைகளில் நுணுக்கமான
உணர்வுகளோடு பதிவு செய்யப்படுகின்றன.
மாறுதல்கள்
என்ற சிறுகதையில் தந்தை மகன் என்ற
நிலையில் மகனைப் பற்றிய தந்தையின் உணர்வுகளையும்,
இருவரிடையே உள்ள மாற்றங்களையும் எடுத்துரைக்கக் காணலாம்.
மனித நேயத்தை
வெளிப்படுத்துவதை இவருடைய
படைப்பின் நோக்கமாகக் காணலாம். எவ்வித உணர்வுகளையும்
நுணுக்கமாக வெளியிடும் திறன் இவர்க்குரிய சிறப்பு எனலாம்.
|