எளிய மொழி நடை
இவர்க்கே உரிய சிறப்பாகும்.
நுணுக்கமான உணர்வுகளைச் சுவைபடச் சொல்லும் திறனை
இவருடைய நடையில் காண முடிகிறது. இவர் கையாளும் புதிய
உவமைகளில் ஆசிரியருடய வகை வகையான கற்பனைகளைக்
காணலாம்.
வாக்கியத்துக்கு முற்றுப் புள்ளி மாதிரி
ஒவ்வொரு தரம் பேசி
முடித்த போதும் சிரிப்போடுதான் முடிப்பாள் அவள். (நேற்று
மனிதர்கள்)
ஒரு குழந்தை மல்லாக்கப்
படுத்துக் காலை விரித்துக்
கிடப்பது போல் கோப்பு மிக யதார்த்தமாகப்
படுத்துக்
கிடந்தது. (அவலம், பூக்களை மிதிப்பவர்கள்)
வெங்கட் தன் வெற்றிலைப்
பெட்டியைத் திறந்தார். அது
ஆட்டம் முடிந்த நாடகக் கொட்டகை மாதிரி இருந்தது.
(பூக்களை மிதிப்பவர்கள்)
நகரத் தயாராக இருக்கும் பஸ்ஸைப் பிடிக்கப்
போகிறவர் போல் அவர் அவசரமாக நடந்தார். (பூக்களை மிதிப்பவர்கள்)
சொல் அலங்காரம் இவர் சிறுகதைகளில் இயல்பாய் அமைந்திருப்பதைக் காணலாம்.
அலாரம் வைத்துக் கொண்டு அவர் படுப்பதில்லை.
அவரே
ஒரு அலாரம் (எலி, எருமை வராத மழை)
கன்றுக்குட்டி மாதிரி நின்றிருந்தது
சைக்கிள் (நேற்று
மனிதர்கள்)
வாழ்க்கைத் தத்துவங்கள்
ஆங்காங்கே சொல்வதும்
பிரபஞ்சனுக்கு இயல்பாக அமைகின்றது.
இறந்த காலம் மீள்வதில்லை.
நிகழ்காலம் உறைப்பது
இல்லை. எதிர்காலம் புரிவது இல்லை. (இருட்டின் வாசல்)
வரலாற்று உண்மைகளும், நிகழ்கால உண்மைகளும் பிரபஞ்சன் எழுத்தில்
எப்படி எதிரொலிக்கின்றன பாருங்கள்:
பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில்
தமிழகம் இருந்த
போது... "மூர்! எனக்கு நாலு இந்தியர்கள்
வேலைக்கு
வேண்டும்".
"எதற்கு?"
"எனக்கு வரும் வருமானத்தை
எண்ணி மூட்டையில்
கட்டுவதற்கு”.
பிரெஞ்சு அதிகாரி மேலும்
சொல்கிறான். "நர்மதை
நதியிலிருந்து குமரி முனைவரைக்கும் என் மூச்சுக் காற்றே,
அதிகாரம்! என் காலுக்குக் கீழே என் சப்பாத்துக்கள் (ஷு), அந்தச் சப்பாத்துக்களுக்கும் கீழே பார் தலைகள் தென்படும்.
ஆம். இந்தியச் சிறு மன்னர்கள், நவாபுகள், ஜமின்தார்களின்
தலைகள்... இந்த மக்கள் நம் வாளுக்குத் தக்க கைப்பிடிகள்"
இந்தியர்களைப் பற்றிய கணிப்பு எப்படி இருந்தது என்பது
தெரிகிறதல்லவா?
வேறுபட்ட சிந்தனைகளைச்
சுவையாகச் சொல்லும்
திறன் பிரபஞ்சனிடம் அமைந்திருப்பதைப் பல இடங்களில்
காண முடிகிறது. எடுத்துக்காட்டாக ஒன்றைப் பார்ப்போம்:
ரயில் புறப்படும் நேரம். பத்தரைதான்.
என்றாலும் அவன்
10 மணிக்கே ரயிலடிக்கு வந்து விட்டிருந்தான்.
கடைசி
நேரத்துப் பரபரப்பு, ஓடத் தொடங்கும் வண்டியை ஓடிவந்து
பிடித்தல் எல்லாம் அவன் இயல்புக்கு ஒத்து வருவது இல்லை
என்பதுதான் விஷயம். ரயில் நின்று கொண்டிருக்க-அதை
ரசித்தபடி, கெத்தாக நடந்து வந்து, சாவகாசமாக ஒட்டப்பட்ட
பட்டியலைப் பார்த்துக் கொண்டு பெட்டிக்குள் பிரவேசிப்பது
ஒரு வகை கௌரவம் என்பது அவன் எண்ணமாக இருந்தது.
வண்டி என்பது வெறும் வாகனம். அவனைச் சுமந்து கொண்டு
அவன் போக வேண்டிய இடம் கொண்டு சேர்ப்பதான கருவி...
அது மனிதர்க்கு மேம்படுவதாவது (மதிக்கும் நிலம், இருட்டின்
வாசல்).
எள்ளல் சுவை தரும் அங்கத
நடையும் இவருடைய
மொழி நடைக்குச் சிறப்புச் சேர்க்கிறது எனலாம்.
‘நல்ல வெயில். சுட்டுப்
பொசுக்கும் வெயிலை நல்ல
வெயில் என்று ஜனங்கள் வழங்குவது விசித்திரம்தான். நல்ல
பாம்பு என்பது போல் இதுவும்..' (தியாகராஜன், பூக்களை
மிதிப்பவர்கள்)
|