6.0 பாட முன்னுரை

மேனாட்டார் அறிமுகத்தால் தமிழ் இலக்கியத்துக்கு வந்தவை சிறுகதை, புதினம் என்ற இரண்டு இலக்கிய வகைகள். இவை இரண்டுமே தற்பொழுது மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. சிறுகதை தாள் II என்ற பாடப் பிரிவின் 6 பாடங்களுள் ஐந்து பாடங்களை இதுவரை படித்து முடித்தோம் அல்லவா? இனி ஆறாவது பாடமாக வருவது அம்பையின் சிறுகதைகள். முன்பு கண்ட எழுத்தாளர் ஐவரது கதைகளைப் படிக்கும் பொழுது அவரவர்க்கு என்று அமைந்த சில தனித் தன்மைகளைப் பார்த்தோம். இனி அம்பையின் சிறுகதைகள் எப்படிப்பட்டவை, அவர் படைக்கும் கதை மாந்தர்கள், அவர் கையாளும் கதைப் பொருள் முதலியவற்றை இந்தப் பாடத்தில் பார்க்கலாம். பெண்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட, நூல் எழுதிய அம்பையின் சிறுகதைகளிலும் பெண்ணியச் சிந்தனைகள் மிகுதியாய் இருப்பதைப் பார்க்கலாம். முதலில் ‘அம்பை’ என்ற ஆசிரியரைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?