6.1 ஆசிரியர் அறிமுகம்

அம்பை என்ற புனைபெயரில் எழுதும் பெண் படைப்பாளியின் இயற்பெயர் சி.எஸ். இலட்சுமி. அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து பெண்ணியச் சிந்தனைகளை எழுதி வருகிறார். எம்.ஏ. முடித்த பிறகு பண்ருட்டியில் சில காலம் பள்ளியில் ஆசிரியையாகவும், சென்னை வண்ணாரப்பேட்டை கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியையாகவும் பணிபுரிந்தவர். காலச்சுவடு, கணையாழி, கலைமகள், இந்தியா டுடே, தீபாவளி மலர்கள் (தினமணி, தீபம், சுதேசமித்திரன்) ஆகியவற்றில் தொடர்ந்து எழுதி வாசகர் இதயத்தில் இடம் பிடித்து நிற்பவர்.

6.1.1 ஆசிரியரின் படைப்புகள்

பெண் இசைக் கலைஞர்கள் மற்றும் நடன மணிகள் பற்றி இவர் எழுதிய நூலை Singer and the Song, Mirrors and Gestures என்ற இரு தொகுதிகளாக டில்லியில் உள்ள Kali for Women என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. SPARROW (Sound and Picture Archives for Research on Women) அமைப்பை நிறுவியவர், அம்பை. பல ஆவணப் படங்களுக்கு உரையாடல் எழுதி, உதவி இயக்குநராகவும் இருந்திருக்கிறார். தமிழ் இலக்கியத்தில் பெண்கள் பற்றிய ஓர் ஆராய்ச்சி நூலையும் (Face Behind the Mask, 1984) இவர் எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலும் (Purple Sea, 1992) வெளிவந்துள்ளது. சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை (1988), காட்டில் ஒரு மான் (2000) ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் இவருடைய படைப்புகள்.