உயிர் வாழ உணவு தேவைதான்.
அந்த உணவைத்
தயாரிக்க ஒரு சமையலறையும் தேவைதான். ஆனால் அந்தத்
தேவை பெண்கள் மீது செலுத்தும் அழுத்தமும் ஆதிக்கமும்
சொல்லி முடியாது. சமையலறை பெண்கள் மீது செய்யும்
ஆதிக்கம் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்ற
சிறுகதையில் விவரிக்கப்படுகிறது.
ஒளியற்ற, ஜன்னல் அற்ற குறுகிய
அந்தச்
சமையலறையிலிருந்து கடலில் வசிக்கும் ஆக்டபஸ் ஜந்துவின்
எண்கால் போல், ஆதிக்கக் கரங்கள் நீண்டு வளைத்துப்
போட்டன. கால்கள் இறுக்க இறுக்கக் கட்டுண்டு கிடந்தனர்
ஆனந்தமாக. அவை இடுப்பை இறுக்கினால் ஒட்டியாணம்
என்றும், காலைச் சுற்றினால் கொலுசு என்றும், தலையில்
பட்டால் கிரீடம் என்றும் நினைத்துக் கொண்டனர் பெண்கள்.
நாலா புறமும் கம்பிகள் எழும்பிய உலகில் புகுந்து கொண்டு
அதை ராஜ்யம் என்று நினைத்து அரசோச்சினர். இன்று
மட்டன் புலவு, நாளை பூரி மசாலா என்று பூமியைத் திருப்பிப்
போடும் முடிவுகள் எடுத்தனர்.' பேடி அதிகாரம்' என்று
இதனைக் கடுமையாகச் சாடுகிறார் அம்பை.
"திருமணமான புதிதில் முப்பது
பேர் வீட்டில் அஞ்சு
கிலோ ஆட்டா மாவு பிசைவேன். 300 சப்பாத்தி இடுவேன்"
என்று கூறுகிறாள் ஜீ.ஜி. முதல் தடவை இரண்டு
உள்ளங்கையும் இரத்தம் கட்டி நீலமாய்
இருந்தது.
தோள்பட்டையில் குத்திக்குத்தி வலித்தது. அவளைப் பார்த்துப்
பப்பாஜி சொன்னார். "சபாஷ் நீ நல்ல உழைப்பாளி" என்று
(வீட்டின் மூலையில் ஒரு சமையலறை). சந்தேகப்படும்
கணவன் மனைவியை எவ்வளவு துன்பத்துக்கு
உள்ளாக்குகிறான் என்பதைச் சொல்லும் சிறுகதை
'வல்லூறுகள்' (சிறகுகள் முறியும்).
‘உடன்கட்டை ஏறுவது ஒரே
மனிதனிடம் அவளுக்கு
உள்ள விசுவாசத்தின் உச்சக் கட்ட நிரூபணம்’
என்று
வாமனன் சிறுகதை குறிப்பிடுகிறது.
சமையலறைச் சிந்தனைகளே பெண்ணின்
மனத்தை
ஆக்ரமித்திருப்பதால் அவளால் உலக அறிவும்
விழிப்புணர்வும் பெற இயலாமல் போய்
விட்டதை
இக்கதையில் இடம் பெறும் மீனாட்சி வாயிலாக அம்பை
குறிப்பிடுகிறாள்
நாலு நாட்களுக்கு ஒருமுறை ஸ்டவ் திரியை
இழுத்து விட வேண்டும். மண்ணெண்ணெய் கிடைக்கும் போது வாங்க வேண்டும். மழைக்
காலத்தில் கவலை. அரிசி, பருப்பில் பூச்சி, மாங்காய்க் காலத்தில் ஊறுகாய்; வெயில் காலத்தில் அப்பளம், பழங்கள் வரும் காலத்தை ஒட்டி சர்பத், ஜூஸ்,
ஜாம், பழைய சமையலறை முற்றத்துக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுண்ணாம்பு,
மாதவிடாய் தள்ளிப் போயிற்றோ என்று கவலை; தள்ளிப் போகாவிட்டால் கவலை என்று
பெண்களின் கவலைகளையெல்லாம் எடுத்துரைக்கிறார். இவை இல்லாமல் இருந்திருந்தால்
'புதுக்கண்டங்களைக் கண்டு பிடித்திருக்கலாம், காவியம் எழுதியிருக்கலாம்,
குகைகளுக்குள் ஓவியம் தீட்டியிருக்கலாம்’ என்று பெண்ணின் உழைப்பும் குறுகிய
வட்டத்திலான உணர்வுகளும் அவளை இதுவே உலகம் என்று எண்ணச் செய்து விட்டதையும்,
அவள் விரும்பினால்தான் அதிலிருந்து அவள் விடுபட முடியும் என்பதையும் உணர்த்துகிறது
வீட்டின் மூலையில் ஒரு சமையலறை என்னும் சிறுகதை.
|