6.4 சிறுகதைக் கலை

சிறுகதைக்குரிய கரு அதற்குப் பொருத்தமானதான கதைக்களன், இயல்பான கதைமாந்தர் படைப்பு, மனத்தில் நிற்கும் சிறந்த கதை வடிவம், ஒருமைப்பாடு அனைத்தும் பொருத்தமுற அமையும் போது அங்கும் சிறுகதை இலக்கியம் ஒரு சிறந்த கலையாகின்றது. பெண் நிலை நோக்கில் சமுதாயத்தை நோக்கும் ஒரு பார்வையில் பிறந்த கருத்துகள் அம்பையின் சிறுகதையில் சிறுகதை வடிவம் கொள்கின்றன. இவர் படைக்கும் கதைமாந்தர்கள் இவ்வுலகில் நாம் சந்திக்கின்றவர்களே. ஆனால் அவர்களுடைய அகநோக்கும், ஆழ்ந்த சிந்தனையும் இவருடைய சிறுகதைகளின் உள்ளடக்கமாகின்றன. தனக்கென்ற சில உத்தி முறைகளையும், அதற்கேற்ற மொழி நடையையும் அம்பை கையாள்கின்றார். இதுபற்றி இனிப் பார்ப்போம்.

6.4.1 பாத்திரப் படைப்பு

அம்பையின் கதை மாந்தர்களில் ஆண்கள் பெரும்பாலும் ஆதிக்க உணர்வு மிக்கவர்களாக இருக்கின்றார்கள். பெண்கள் அவ்வாதிக்க உணர்வினால் பாதிக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தாங்கள் ஒடுக்கப்படுவதை அறிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அந்த அடக்குமுறைக்கு எதிரான எதிர்ப்புணர்வு பாதிக்கப்படும் பெண்கள் மனத்தில் இருப்பதை அம்பையின் பெண் கதைமாந்தர்கள் வாயிலாக அறிகிறோம். அவ்வெதிர்ப்புணர்வைச் சிலர் தங்கள் பேச்சில் வெளிப்படுத்துகின்றனர். சிலர் செயலில் காட்டுகின்றனர். பெரும்பாலும் சமுதாயம் முழுவதுமே பெண்களுக்கான தனிப் பார்வையோடு இருப்பதை இளம்பெண்கள் மிக நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றனர். யம பயம் கொண்ட ஒரு முதியவர் தன் வாழ்நாள் பெருக வேண்டும் என்று யாகம் செய்கிறார். ஆனால் அவர் மகளுக்கு இச்செயல் வெறுப்பை உண்டாக்குகிறது. ஓம குண்டத்தில் அவர் நெய் வார்க்கும் போது ஏற்கனவே உயிரிழந்த ஓர் எலும்புக் கூடு நெய் வார்ப்பது போல் இருந்ததாக மகள் உணரும் காட்சியை ம்ருத்யு சிறுகதை காட்டுகிறது (சிறகுகள் முறியும்).

பெண்கள் வாழ்க்கை சமையலறையைச் சுற்றியே இருப்பதைக் காட்டும் சிறுகதை வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. குழாயடித் தண்ணீருக்கு நின்று நின்று அடிப்பாதம் எல்லாம் வெடிப்புக் கீறல்கள். மருமகள் மீனாட்சி துணிச்சலாகப் பாத்திரம் தேய்க்க வெளியே ஒரு தொட்டி போடலாம் என்கிறாள். மாமனார் பப்பாஜி எதற்கு என்று கேட்கிறார். சமையலறைத் தொட்டி சிறியது. வெளியில் கொடியில் கட்டியிருக்கும் துணிகள் மலையை மறைக்கிறது என்கிறாள். ஆனால் சமையலறை நிலவரம் மாற்றப்படவில்லை. "மைசூர்ப் பெண்ணே, இங்கே நிரந்தரமாக வாழாத உனக்கு மலை எதற்கு. அதன் பச்சை எதற்கு? ராஜஸ்தானத்துச் சமையல் பண்பாட்டுக்கும் ஜன்னலுக்கும், பாத்திரம் அலம்பும் தொட்டிக்கும் என்ன சம்பந்தம் பெண்ணே..... முக்காடு அணிய மறுக்கும் ... நிறையப் பேசும் பெண்ணே" என்கிறது மாமனார் பப்பாஜியின் மௌனச் சவால். சந்தேகப்படும் கணவனுக்குத் தன் மௌனத்தாலேயே தண்டனை தருகிறாள் அவன் மனைவி (வல்லூறுகள், சிறகுகள் முறியும்). பெண்ணுரிமை அடிப்படையிலேயே பல கதைமாந்தர்களைப் படைத்திருப்பதை அம்பையின் சிறுகதைகளில் காணலாம்.
 

6.4.2 கதைப் பொருள்

பெண் உழைப்பும் உரிமையும் சுரண்டப்படுதல், ஒடுக்கப்படும் பெண்கள் விழிப்புணர்வுடன் செயல்படுதல், எதிர்ப்புணர்வைத் தெரிவித்தல் ஆகியன அம்பையின் கதைப் பொருளாக அமைகின்றன. பெண்கள் பற்றிய ஆராய்ச்சி நூலொன்று இவர் எழுதியுள்ளார் என்று முன்னரே பார்த்தோமல்லவா ! அதையொட்டியே பல நுணுக்கமான ஆய்வுகளை இவர் கதைகளில் காணலாம். பெண்ணின் சுதந்திரம் ஆணுக்கு நிகராக இருக்க வேண்டும் என்று எண்ணும் பல பெண்களை இவர் கதைமாந்தராகப் படைத்துள்ளார். இளமை முதல் முதுமை வரை, அடுப்படி முதல் ஆகாயம் வரை பெண்ணின் உணர்வுகள் மதிக்கப்படாமல் இருப்பதையும் அவ்வுணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும் இவர் கதைகள் நமக்குத் தெரிவிக்கின்றன. ஆணின் அடக்குமுறைக்கு எதிராக, உணர்வுகளைப் பல்வேறுநிலைகளில் பெண் எப்படி வெளிப்படுத்துகிறாள் என்பதைப் பல சிறுகதைகளுக்குக் கதைப்பொருள் ஆக்கியிருக்கிறார் அம்பை.

6.4.3 உத்தி முறை

சிறுகதைத் தலைப்பிலேயே, கதைக் கருவைப் புலப்படுத்தும் உத்தியை இவருடைய பல சிறுகதைகளில் காணலாம். ‘சிறகுகள் முறியும்’ என்பது பறத்தற்குரிய சிறகுகள் இருந்தும் சுதந்திரம் பறிக்கப்பட்டதன் அறிகுறியாக இடப்பட்ட தலைப்பாகிறது. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றுக்கும் பொருந்துவது போல் முறியும் என்று குறிப்பிடுவதைக் காணலாம்.

கதைக் கருவை உருவகமாக்கித் தலைப்பிலே தரும் உத்தி ‘காட்டில் ஒரு மான்’ சிறுகதைத் தலைப்பில் காணலாம். மான் கொடிய விலங்குகளுக்கு அஞ்சக் கூடியது. அச்சத்துடன் ஓடினாலும் அதற்கென்று ஓர் உலகம் இருக்கிறது. ஒருநாள் தன் கூட்டத்தை விட்டுத் தான் வாழும் காட்டில் ஒரு பகுதியை விட்டு விட்டுப் புதியதொரு பகுதிக்கு வந்து விடுகிறது. எதைப் பார்த்தாலும் புதியதாக இருப்பதால் அஞ்சி அஞ்சி ஓடுகிறது. பிறகு துள்ளித் துள்ளி ஓடி அனைத்துப் பகுதிகளையும் அறிந்து கொள்கிறது. அதன் பின்னர் அச்சமின்றி அங்கு வாழ்வதாகச் சொல்லப்படும் இக்கதை ஒரு பெண்ணால் அங்குள்ள குழந்தைகளுக்குச் சொல்லப்படுகிறது. அந்த மானைப் போன்றவள்தான் அந்தப் பெண்ணும். மணமான அவளுக்குக் குழந்தைப் பேறு கிட்டவில்லை. அவளால் அனைவரிடமும் அன்பு செலுத்த முடியும். நல்ல எண்ணங்கள் கொண்ட அவள் குழந்தைப் பேறில்லாத ஒரு பெண்ணுக்கு இச்சமுதாயத்தில் என்னென்ன பழிகள் உண்டாகும் என்பதை அறிந்து கொண்டவளாய் இருக்கிறாள். அதற்கு ஏற்றாற்போல் கணவனுக்கு மறுமணம் செய்து வைத்தாள். எல்லாக் குழந்தைகளையும் அன்புடன் நேசித்தாள். பிள்ளை பெறாதவள் என்று கூறும் இச்சமுதாயத்தைத் தன் உள்ள உறுதியால் வென்று அந்த மான் போல் அச்சமின்றி வாழ்கிறாள் என்பதை உருவகமாக இச்சிறுகதை உணர்த்துவதைக் காணலாம்.

ஒரே தலைப்பில் (பயணம் 1, பயணம் 2, பயணம் 3) மூன்று சிறுகதைகளைப் படைத்து வேறுபட்ட மூன்று பயண அனுபவங்களைச் சுவைபடச் சொல்கிறார் அம்பை (காட்டில் ஒரு மான்).