1.6 புதினத்தில் கையாளும் உத்திகள்
கி.ரா., வின் நாவலில் கையாளும் எழுத்துநடை, வர்ணனை,
சொல்லாட்சி, பழமொழி, உவமை, நாட்டுப்புறப்பாடல்
ஆகியவற்றில் ஒரு சில உதாரணங்களை இங்குக் காணலாம்.
கரிசல் காட்டு மக்களின் வாழ்க்கை முறை, பேச்சுவழக்கு
எல்லாம் இவருடைய கதை நடப்பில் எளிமையையும்
அழகையும் கூட்டுகின்றன. மேலும் இவர் நடையில்
இடையிடையே நகைச்சுவை இழையோடுகிறது.
1.6.1 வர்ணனை

“கொடியில் காயப் போட்டிருந்த சேலையை எடுப்பது
போல மஞ்சள் வெயிலை உருவி எடுத்துக் கொண்டு
மேகமலைக்குள் இறங்கினாள் சூரியதேவி” என்ற அழகான
புதிய வர்ணனையோடு, ‘கோபல்லபுரத்து மக்கள்’ என்ற
நாவல் தொடங்குகிறது.
“அச்சிந்தலு பால் கறக்க ஆரம்பித்தாள். பாத்திரத்தில்
பால் பீச்சும் ஓசை, பால்மீது பால் விழும் ஓசை, பால்
நுரையின்மீது, பால்விழும் ஓசை இப்படிக் கேட்டுக்
கொண்டிருந்தது. மத்தியில் நுரையைத் தொட்டு காம்புகளில்
தேய்த்துப் பால் கறக்கும் லாவகம். சொரு சொரு சொரு என்று
பாத்திரம் நிறைந்து கொண்டு வருவதை ஓசையிலிருந்து
நிதானிக்க முடிந்தது.” இவ்வாறு அமைந்துள்ள வர்ணனை
படிப்பவர்களின் காதில் ஒலிக்கிறது.
அந்த மக்கள் மனசில் காரிக்காளை, தனக்கென்று ஓர்
இடம் பிடித்துக் கொண்டது. அதைப் பார்த்துப் பார்த்துப்
பரவசப்பட்டார்கள் பலர். அதன் உடல்வாகை, புச்சன்னா
வர்ணிக்கிறார்.
பார்ரா, என்ன நீளம் கீரிப்பிள்ளை கெணக்க
திமிலைப் பாத்தயா தேர் மாதிரி; எம்புட்டு
உசரம், வாலைப்பாரு; சுண்டெலிவால் போல
அம்புட்டுச் சிறிசு; சன்னம். சரியான கல்க்காட்டுப்
பிறவி; ஈக்கி நுழையுமா பாரு குளம்புக
நடுவில! அதும் முதுகுல ரண்டாள் படுத்துப்
புரளலாம்டா!
இவ்வாறு காரிக்காளையின் வர்ணனை
எடுத்துரைக்கப்படுகிறது.
ஊருக்கு இரயில் வந்த முதல்நாள் அன்று ஊரே
திரண்டுபோய்ப் பார்த்தது.

ஜிகு ஜிகு ஜிகு ஜிகு ண்ணு ஓசையு ஒலியு
மொலியுமா நெருப்பும் பொகையும்
கக்கிக்கிட்டு பொசல்க்காத்து எறைஞ்சி
வார மாதரி வருது! பாத்துக்கிட்டிருந்தவங்களுக்
கெல்லாம் என்ன செய்யிறதுண்ணுட்டுத்
தெரியலெ! விழுந்தாம்பாரு... தலையைக்
கவிழ்ந்து கொஞ்சம் சிரித்து விட்டு,
அப்பிடியே... நெடுஞ்சாங் கெடாயா! விழுந்து
கும்பிட்டதைப் பார்க்கணுமெ கூட்டமெல்லாம்....!!”
என்று கூறிய நாயக்கரின் கொந்தளிப்பான
குரலையும் நடிப்பையும் பார்த்து எல்லாரும்
ஓ என்று சிரித்துக் கைதட்டினார்கள்
என்று இரயில் வண்டியை முதலில் பார்த்த மனிதர் நிலை.
வருணிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் புதுவெள்ளம் வரும்போது
விழுந்து வணங்குவது தமிழ் மரபு. அந்த மரபுப்படி
இரயிலையும் வணங்கினார்கள் போலும்.
1.6.2 சொல்லாட்சி
தேயிலையைச் சுவைத்து, அனுபவித்ததைப் பற்றிப்
பின்வரும் சொல்லாட்சி விளக்குகிறது.
“தூக்கம் வராம இருக்க இப்ப என்னவோ ஒரு இலை
வந்திருக்காமே?” என்று கேட்டான் சொள்ள முத்து.
“ஆமடப்ப; அதக்கேக்கிய. அது ஒரு கதை!” என்று
சிரித்துக் கொண்டே ஆரம்பித்தார் துயாரம்.
‘கொத்தூரு போயிருந்தேன். போயிருந்தனா,
ராச்சாப்பாட்டுக்கு மேலெ, எல்லாரும் உக்காந்து
பேசிக்கிட்டிருந்தோம். மாமனாருதான் சொன்னாரு ‘மாப்பிள்ளை
வந்திருக்காரில்ல, தேயிலைத்தண்ணி போட்டுக் கொடுங்க’.
அவரு அப்படிச் சொன்னதும் எல்லோரும் சிரிச்சாங்க!
எனக்கு மொத விளங்கல பார்த்துக்கொ. பெறகு அவருதாஞ்
சொன்னாரு கதெய.! கேட்டுக்கொ நல்லா; ஏ சொள்ள
முத்தோய்” என்று தொடர்ந்தார்.
“ஒரு நா ரவப் பொளுதில ராச்சாப்பாடு முடிஞ்சி படுக்கப்
போறதுக்கு முன்னாடி அந்தப்படி கருப்பட்டி தேயிலையப்
போட்டுக் கொதிக்கவிட்டு நல்ல பாலை ஊற்றிக் குடிச்சிப்
பார்த்தாங்களாம். குடிக்கிறதுக்கு அம்புட்டு ருசியா இருக்காம்.
ஆளுக்கு ரண்டு, மூணு போகணிண்ணு குடிச்சிட்டு, கொஞ்ச
நேரம் பேசிட்டுப் படுத்தாங்களாம். தூக்கம் வரலையாம். இது
என்ன கூத்து இன்னைக்கு இப்படித் தூக்கமே வரலையாம்.
கொஞ்சம் நேரம் உக்காந்து ஊர்க்கதைகளை எல்லாம் பேசி..
பெறகும் கோழி கூப்பிடலை!”
சே; இந்தத் தேயிலைத் தண்ணி செஞ்ச கூத்தில்லா, இப்படி
ஆயிட்டது. இதும் முகத்திலேயே முளிக்கப் படாதுன்னுட்டு
அன்னைக்குப் பெட்டியில வச்சி மூடுனதுதான்ன்னுட்டுச்
சொல்லி,. கொஞ்சம் நீங்களும் சாப்பிட்டுப் பாக்கீகளா
மாப்ளென்னு கேட்டுச் சிரிச்சாரு சம்மந்தகாரரு!
இவ்வாறு வட்டார வழக்கு இந்நாவலில் பல இடங்களில்
காணப்படுகிறது.
கி.ரா., பால் உணர்வுச் சிந்தனையில் சின்ன வயதில் ஆண்
குழந்தைக்கும், பெண் குழந்தைக்கும் உள்ள வேறுபாட்டை
பின்வருமாறு விளக்குகிறார். கிட்டப்பனுக்கு
ஆண் குழந்தைகளுக்கே உண்டான ஒரு வித மக்குத்தனம்.
இனம் புரியாத வெட்கம், தயக்கம் இதெல்லாம் இருந்தது.
ஆனால் அச்சிந்தலுவுக்கு பெண்ணுக்குரிய சுதாரிப்பும்
துருதுருப்பும் இருந்தது. ஆண் பிள்ளைகளுக்கு அப்படிப்பட்ட
சுறுசுறுப்பு இருப்பதில்லை. பெண் வேப்பமரம், சீக்கிரம்
வளர்ந்து விடுகிறாள். ஆண் அரசமரம்; நின்று நிதானித்து
வளர்ந்து, நிலைத்து நிற்கிறான். வளர வளர அச்சிந்தலுவின்
பெருந்தீனி சுருங்கி, சதை பூரிப்பும் இறுகி உடம்பில்
அரும்புகட்ட ஆரம்பித்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே
இப்பருவத்தில் பால்ச்சோளப்பயிர் வளர்ச்சிபோல பெண்
ஆச்சரியமூட்டுகிறாள். வேளைக்கொரு தினுசாய் நாளைக்கொரு
தோற்றமுமாய், தூங்கி அவள் எழுந்ததும் அவளைப் பார்த்தால்,
அப்போதுதான் கடைந்து திரட்டிய பச்சை வெண்ணெயின்
மின்னாப்பும் ஆரோக்ய சௌந்தரியமும் தெரியத் துலங்குவாள்.
அவளுடைய அருகாமையே சூழ்நிலைக்கு ஒரு புத்துணர்ச்சி
தருவதாக இருக்கும். அப்போதைய அவளுடைய
நடமாட்டங்களையும் மௌனமான அசைவுகளையும்
நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் பிரியத்துடன்.
அவர்களுடைய பருவங்கள் உயர உயர உடம்புகள்
வேற்றுமைப் படப் பட மனங்கள் மனத்தோடு ஒருமைப்பட்டது.
சோளப்பயிரின் வளர்ச்சியோடு பெண்ணின் உடல் வளர்ச்சி
ஒப்பிடப் பட்டுள்ளது. இவ்வாறு பல இடங்களில் கி.ரா.,வின்
சொல்லாட்சியைக் காணலாம்.
1.6.3 நாட்டுப்புறப் பாடல்
மக்களின் பேச்சுவழக்கில் காணப்படும் நாட்டுப்புறப்
பாடல்களும் இந்நாவலில் இடம் பெற்றுள்ளன. நெல்லுச்சோறு
என்பது இந்த மக்களின் கனவாக இருந்தது. சாமிக்கண்ணாசாரி
இதைக்கண்டு, நினைத்து நினைத்து அதிசயப்பட்டார். இந்த
அதிசயத்திலிருந்து அவர் விடுபட ரொம்ப நாள் பிடித்தது.
கலியாண வீட்டுப் பந்திகளில் ஒரே நபர் மாறி மாறி திரும்பவும்
திரும்பவும் உட்கார்ந்து சாப்பிட்டதை இங்கேதான் பார்த்தேன்
என்று சொல்லுவார்.
நெல்லுச்சோற்றைப் பற்றி மக்கள் பாடுகிற நாடோடிப்
பாடல்களைக் கேட்டு யோசித்தார்.
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும்
கத்தரிக்காய்....
இப்பாடல் நெல்லுச்சோற்றைப் பற்றியும், சுவையான கத்தரிக்காய்
குழம்பைப் பற்றியும் கூறுகிறது.
ஆட்டுத் தோலுக் கிடங்கொடுத்த
தாலே வந்த மோசம் - அத
னாலே வந்த மோசம்...
என்ற பாடல் ஆங்கிலேயர் நம்ம நாட்டுக்கு முதல் முதலில்
ஆட்டுத்தோல் வாங்க வியாபாரியாக வந்ததையும், நம் நாட்டு
மக்களை ஏமாற்றியதையும் அழகாக விவரிக்கிறது.
ஆங்கிலேயர்களை இந்திய மக்கள் வெள்ளைக்காரன் என்று
அழைத்தனர். அந்த வெள்ளைக்காரர்கள் இந்திய மக்களை
அடிமைப்படுத்தியதைப் பின்வரும் மற்றொரு பாடல்
விளக்குகிறது.
ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய் - அத
காசுக்கு ரண்டா விக்கச் சொல்லி
காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்
ஆங்கிலேயர் நம்நாட்டிற்கே வந்து நமக்கே கட்டளையிட்டதை
மேற்குறிப்பிட்ட பாடல் உணர்த்துகிறது.
1.6.4 பழமொழிகள்
வாய்மொழி இலக்கியமாக இருந்த பழமொழி நாட்டுப்புற
இலக்கியம் என்ற பெருமை பெற்றது. மக்களின் அன்றாட
வாழ்க்கையில் பழமொழி இரண்டறக் கலந்துள்ளது. மாடுகள்
பழகிய இடத்தில்தான் புல் மேய விரும்பும். புதிய இடத்தை
விரும்புவதில்லை என்பதை
மாடு மேய்ந்த இடம்
மழை பேய்ந்த இடம்
என்ற பழமொழி விளக்குகிறது.
கடும் உறவு கண்ணை மறைக்கும்
என்பது ஒரு மொழி.
உருக்குத்தி (அம்மை ஊசி) குத்துனயோ
உருக் குலைஞ்சி போனயோ
அம்மைகுத்தின குழந்தையின் அழகு உருக்குலைந்து
போகும் என்ற அர்த்தத்தில் இந்தப் பழமொழி மக்களின்
அறியாமையைக் காட்டுகிறது.
தீராயும் படியும் தெருவில இருக்கு
என்று ஒரு பழமொழி உண்டு. தீராயு என்பது திராயு (தராசு)
படி என்பது மனிதர்களைப் பற்றி மனிதர்களே நிர்ணயிக்கும்
எடையின் அளவு. தெரு என்பது பொதுவைக் குறிக்கும்.
மனிதர்களைப் பற்றி மனிதர்களே எழுதும் குறிப்புகள் இவை.
காடைக்கறிக்கு மிஞ்சினகறி ஒலகத்திலேயே
கிடையாதாக்கும்! என்கிற பெருமை லகுவணத் தேவருக்கு,
முழு உடும்பு
முக்காக் காடை
அரை ஆடு
கால்க் கோழி
என்று சொல்லப்படும் பழமொழியில் அவருக்கு
நம்பிக்கையில்லை. அதை முழுக்காடை முக்கால் உடும்பு என்று
மாற்றிச் சொல்லுவார். இந்நாவலில் பழமொழி ஒவ்வொருவர்
பேச்சிலும் இடம் பெற்றுள்ளது.
1.6.5 உவமைகள்
கி.ரா., கையாண்ட உவமைகளில் ஒன்று. “தேசம் பரிபூரண
சுதந்திரம் அடைந்தவுடன், இந்த ஒட்டுண்ணி வாழ்க்கை
நடத்துகிறவர்களுக்கு ஒரு முடிவுகாலம் வந்து விடும்” என்றான்
அம்மைய்யா.
“இல்லை; நீ சொல்றது தவறு. தேசம் சுதந்திரம் அடைவது
என்பது நாம் சட்டிக்குப் பயந்து நெருப்பில் விழுந்த
கதையாத்தானிருக்கும்” என்றான் சாமி நாயக்கர்.
கம்மஞ் சோத்தையே தின்று தின்று சவக்களித்துப் போன
வாய் நெல்லுச் சோத்தைக் கொண்டா கொண்டா என்று வாங்கி
வாங்கிச் சாப்பிடும். “கரிசல் காட்டுக்காரங்களுக்கு நெல்லுப்
பருக்கையைக் கண்டா, குலதொய்வத்தைக் கண்டது மாதிரி!”
என்று தீரவாசத்துக்காரர்கள் இவர்களைக் கேலி செய்தார்கள்.
பர்மா அரிசி வருவதற்கு முன்னால் விசேஷ வீடுகளில்
கம்மஞ்சோறும் ஆட்டுக்கறியும் தான் என்று ஆகிவிட்டது.
நெல்லுச்சோறு என்பது இந்த மக்களின் கனவாக இருந்தது.
பின்வரும் உவமை உடல்நிலையைப்பற்றி விளக்குகிறது.
“எந்த உடம்பும் ஆரோக்யமாக இருந்தால் பசிக்கிறதும்
தூங்குகிறதும் முழிப்புத் தட்டுகிறதும், சொல்லி வச்சது போல
ஒரு ஒழுங்காகச் சுழலுகிற சக்கரம் மாதிரி நேரம் தவறாமல்
நடக்கும்”. உடல் நலமாக இருந்தால் பசிக்கிறதும், தூங்குகிறதும்
சரியான நேரத்தில் நடக்கும் என்பதை இவ்வுவமை சுட்டுகிறது.
ஒரு மனிதனுக்கோ ஒரு குடும்பத்துக்கோ
ஏழ்மையானாலுஞ்சேரி சீர்மையானாலுஞ்சேரி முப்பது
வருசங்களுக்குத்தான். சுழலும் சக்கரம் போல கீழேயுள்ளது
மேலேயும், மேலே உள்ளது கீழேயும், இப்படி மாறி மாறி வரும்
என்று புதூர் நாயக்கர் மனித வாழ்க்கையைப் பற்றி
மதிப்பிடுகிறார். ‘சுழலும் சக்கரம் போல்’ என்ற ஒரே உவமை
இருவேறு கருத்துக்களை விளக்க பயன்படுத்தப்படுகிறது. இதே
போல பல உவமைகள் ‘கோபல்ல புரத்து மக்கள்’ என்ற
நாவலில் இடம் பெற்றுள்ளது.
|