2.2 இராஜம் கிருஷ்ணனின் புதினங்கள்
“இலக்கியம் படைப்பவர் சாமானிய மக்களை விட்டு விலகி
நிற்கும்போது அங்குக் கலை மலர்வதற்கில்லை” என்று
குறிப்பிடும் இராஜம் கிருஷ்ணன், நாவல் என்பது காலத்தால்
உருவான கலைவடிவம் என்பதை நன்கு உணர்ந்தவர்.
நாற்பதுக்கும் மேற்பட்ட இவருடைய நாவல்களைச் சமூக
நாவல்கள், வட்டார நாவல்கள் என்று இரு வகைகளில்
அடக்கலாம்.
2.2.1 சமூக நாவல்கள்
பால் வேறுபாடு, வர்க்கப் போராட்டம், பாலியல் வன்முறை,
சிறுவர் சிறுமியர் மீதான வன்முறை, பெண்களின் அடிமை
நிலை போன்ற பல பிரச்சினைகளைப் பற்றி இராஜம்
கிருஷ்ணன் தம்முடைய சமுக நாவல்களில் பேசுவதோடு
நிற்காமல், அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழியும்
காட்டியுள்ளார். காலந்தோறும் பெண்கள் வாழ்ந்த அடிமை
வாழ்வைப் பற்றி விளக்கிக் கூறுவதோடு அமையாமல்,
இருபதாம் நூற்றாண்டில் பெண்கள் கல்வியறிவோடு,
தொழிற்கல்வியையும் பெற்று எவ்வாறு விழிப்புணர்வோடு வாழ
வேண்டும் என்றும் பல சமூக நாவல்களில் அறிவுறுத்தியுள்ளார்.
சமுதாயம் சிறப்படைய அவர் கூறும் வழிகள் மூலம் இராஜம்
கிருஷ்ணனின் நாட்டுப்பற்றை உணர முடிகிறது.
இராஜம் கிருஷ்ணனின் சமூக நாவல்களில் சேற்றில்
மனிதர்கள், கரிப்பு மணிகள், அலைவாய்க் கரையில்
ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. உழைக்கும் வர்க்கத்தின்
வாழ்க்கைப் பிரச்சினைகளை இந்நாவல்கள்
வெளிப்படுத்துகின்றன.
2.2.2 வட்டார நாவல்கள்
இராஜம் கிருஷ்ணன் எழுதிய குறிஞ்சித்தேன்,
வளைக்கரம், கரிப்பு மணிகள் போன்ற வட்டார நாவல்களில்,
அந்தந்த வட்டார மக்களின் நம்பிக்கைகள், பழக்க
வழக்கங்கள், சடங்குகள் சித்திரிக்கப்பட்டிருப்பதோடு மண்ணின்
மணமே நாவலின் பின்னணியாய் நின்று படிப்போரை
ஈர்க்கிறது.
குறிஞ்சித்தேன் எனும் நாவல் படகர் வாழ்வின்
உண்மையான படப்பிடிப்பு. போலி நாகரிகத்தின் இடையே
பண்பாடு காக்கும் படகரின் காவியம். பழைய பண்பாட்டிற்கும்
புதிய நாகரிகத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தினை
இந்நாவலில் ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். இந்நாவலைப்
படிக்கும் போது நீலகிரி மலையிலேயே பல்லாண்டுக் காலம்
வாழ்ந்து வருவது போன்ற உணர்வே நம்முன் மேலோங்கி
நிற்கிறது. அதேபோல் இவருடைய வளைக்கரத்தைப்
படிக்கும்போது கோவா நாட்டின் மண்ணில் நாம் நிற்பதுபோல்
உணரமுடிகிறது. தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின்
உவர்ப்பு வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவது கரிப்பு
மணிகள் என்ற புதினமாகும்.
|