| 3.4 குடும்பமும் பெண்களும்  குடும்பம் என்னும் நிறுவனத்தின் 
                நங்கூரமாகப் பெண்ணே
                கருதப்படுகிறாள். குடும்பத்தைச் சிந்தாமல் சிதறாமல்
                கட்டிக்காக்கும் பொறுப்பு பெண்ணுக்கு மட்டுமே உரியதாகி
                விட்டது. இந்த அடிப்படையில்தான் பெண் வளர்க்கப்படுகிறாள்;
                நெறிப்படுத்தப்படுகிறாள்.  பெண்களுக்குச் 
                சமுதாயத்தில்
                விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் புதினங்களில் இடம்பெற்றுள்ளன. 3.4.1 கட்டுப்பாடும் பொறுப்பும் 
                பெண்களும்  பெண்களுக்கெனச் சில கட்டுப்பாடுகளை 
                ஆண்கள்
                விதிக்கின்றனர். இருப்பினும் பெண்கள் குடும்பப் பொறுப்புடன்
                செயல்படுகின்றனர். • கட்டுப்பாடு  பெண்களின் அன்றாடச் செயல்பாடுகளில் 
                ஆண்கள்
                குறுக்கிடுகின்றனர்.   
                  “ஒத்த சடை போடேன். ரெட்டை 
                  சடை கன்றாவியா
                   இருக்கு; பூவை ஏன் தொங்கவிட்டு ஆட்டிக்கிட்டுப்போற
                   அதான் நாலுபேரு உம்பின்னாடி சுத்துறான்” 
                  என்று கலாவை, அண்ணன் மணி கண்டிக்கிறான். கலா
                பெருங்குரல் எடுத்து அழுகிறாள். இதிலிருந்து தம் வீட்டுப்
                பெண்கள் மீது ஆண்கள் மேற்கொள்ளும் அடக்குமுறை
                உணர்த்தப்படுகிறது.  • பொறுப்பு  பெண்களைக் கண்ணும் கருத்துமாகப் 
                பேணிக்காத்து
                ஒருவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் எண்ணமே
                சமூகத்தில் பொதுவாகத் திகழ்கிறது. இந்த எதிரொலியை
                இப்புதினத்திலும் காண முடிகிறது.  
                  “பொட்டப் புள்ளங்கள வச்சிக்கறது 
                  வயித்துல
                   நெருப்ப வச்சிருக்ற மாதிரி இருக்குது.
                   வாயில, வவுத்துல வந்துட்டா என்ன பண்றது,
                   எவங்கையிலாவது புடிச்சுக்குடுக்கற வரைக்கும்
                   ஏது நிம்மதி”  என்று வயதுக்கு வந்த பெண்ணின் தாயான ஆனந்தாயி
                புலம்புகிறாள். 3.4.2 திருமணமும் பெண்களும்  ஆனந்தாயி கல்வி அறிவு அற்றவள், 
                உடல் உழைப்பு
                மிகுந்தவள். எனவே கணவனுடன் அடிக்கடி வாதிட்டு உதையும்
                வாங்கிக் கொள்பவள். கணவன் மனைவி தனக்கு அடிமை
                என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பவன்.
                மனைவியை மதிக்காத பெரியண்ணன் வீட்டிற்கே ஒருத்தியை
                அழைத்து வந்து விடுகிறான். ஒன்றும் செய்யவியலாது மனம்
                குமுறியபடிதான் ஆனந்தாயி நடமாடுகிறாள்.  ஆனந்தாயி கணவன் செய்யும் 
                கொடுமை ஆண் ஆதிக்க
                சமுதாயத்தில் இயல்பானது என ஏற்றுக் கொண்டே
                செயல்படுகிறாள். குடும்பம் தன்னால் கட்டிக் காக்கப்பட
                வேண்டிய ஒன்று என்னும் பொறுப்புணர்வு பெண்களுக்கே
                ஊட்டப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தவளாக ஆனந்தாயி
                பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.  “அவனிடம் தனக்கு மிஞ்சியிருப்பது 
                அவன்மீது ஆசையா
                அல்லது உரிமையா அல்லது தன் குழந்தைகளுக்கும் தனக்கும்
                பாதுகாப்பு என்ற உணர்வா?” என்று ஆனந்தாயி சிந்திக்கிறாள்.
                ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட கணவனைப் பிரிந்தால்
                என்ன என்று நினைத்துப் பார்ப்பாள். பிள்ளைகள் என்னாவது
                என்று மருகி, பின் மனதைத் தேற்றிக் கொள்வாள்.
                குழந்தைகளை  நல்லமுறையில்  வளர்க்க 
                வேண்டிய
                கட்டாயத்தினால் இன்று சமுதாயத்தில் பல பெண்கள்
                கணவனின் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்து
                வருகிறார்கள். குடும்பம் என்னும் நிறுவனத்தில் உரிய
                பங்கினைப் பெறாமலே பெண்கள் குடும்பத்துக்குள் இயங்கிக்
                கட்டுப்பட்டு வாழ்வதற்கே பழகிக் கொள்கின்றனர். குடும்ப
                நிறுவனத்தில்  தனக்கு  இரண்டாவது 
                 இடமே
                ஒதுக்கப்பட்டிருக்கிறது என்னும் மனநிலை மேலோங்குகிறது.
                இத்தகைய செய்திகள் இந்நாவல் மூலம் வெளியிடப்படுகிறது.  3.4.3 உள்ளமும் பெண்களும்  ஒரு பெண்ணிற்குத் தாய் என்ற 
                உறவு ஏற்பட்டவுடன்
                அவள் குழந்தைகளுக்கும் தந்தைக்கும் இடையே பாலமாக
                இருக்க வேண்டியவள் ஆகிறாள். இரு பக்கத்தாரும்
                உணர்ச்சி வயப்படும் போது இவளே அதிர்வு தாங்கியாகச்
                செயல்படுகிறாள்.  குழந்தைகள்  தவறு 
                 செய்தால்
                தாய்க்குத்தான் இடிமொழி எல்லாம். எல்லாவற்றையும்
                பொறுத்துக்கொண்டு  இணக்கம்  ஏற்படுத்துபவளாக
                அன்னை விளங்குகிறாள்.  “அரிசி திங்கிறான்..........ஏண்டா பொழுதினிக்கும்
                பட்டினியா ....... கெடந்த ..... புள்ள வளக்கறா
                பாரு புள்ள ......... என்று கூறிவிட்டு 
                அவள் தலைமயிரைப் பிடித்து ஒரு குலுக்கு குலுக்குகிறான்.”  பெற்ற குழந்தைகளைக் கவனிக்காமல் வீட்டைவிட்டு வெளியில்
                கணவன் தங்கியதால்தான் தன் மகன் பாலனை இழக்க
                நேரிட்டது என்பதில் அவளுக்குக் கணவனைப் பற்றி
                நினைக்கவே கசந்தது. பிள்ளைகளுக்குத் தாய்மட்டுமே..... என்று
                மனதளவில் கணவனை ஒதுக்கி வைத்தாள். ஆனால்
                அவனைவிட்டு வீட்டைவிட்டு விலகி வாழ முடியவில்லை.
                குழந்தைகளை வளர்ப்பதற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும்
                நல்ல நடத்தை இல்லாத கணவனையே சார்ந்து வாழவேண்டிய
                நிலைக்கு ஆனந்தாயி தள்ளப்பட்டிருப்பதைச் சிவகாமி பல
                இடங்களில்  சுட்டிக்காட்டுகிறார். அவள் கணவனின்
                கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டு வாழ்வதற்கும் அவளது
                தாயுள்ளமே காரணம் என எடுத்துக்காட்டுகிறார் சிவகாமி. 3.4.4 கல்வியும் பெண்களும்  கல்வி பெண்களுக்குக் கண்களைப் 
                போன்றது என்ற
                விழிப்புணர்வு பெண்களுக்குத் தேவைப்படுகிறது. ஆனந்தாயியின்
                மகள் கலா பூப்படைந்தவுடன் அவள் பள்ளிப்படிப்பு நிறுத்தப்படுகிறது. அவள் வீட்டிற்குள் அடைக்கப்படுகிறாள். தந்தையின்
                அதிகாரத்தால் இளம்வயதிலேயே அவளுக்கு விருப்பமில்லாமல்
                திருமணம் நடைபெறுகிறது. அவள் வாழ்வு குறுகிய
                வட்டத்திற்குள் அமைந்து விடுகிறது.  வடக்கத்தியானின் மகள் பூங்காவனம் 
                பள்ளியில் சென்று
                படிக்க மிகுந்த ஆர்வத்தோடு இருக்கிறாள். ஆனால்,
                அவள்தாய் “படிப்பாம் படிப்பு படிச்சிட்டு சட்டிப்பானை
                கழுவத்தான் போவணும் தெருவுல அந்த வசந்தா குட்டி
                படிச்சா, பத்து படிச்சிப்பிட்டு கண்டபய நின்னபயகூடக்
                கண்ணடிச்சுக்கிட்டுத் திரிஞ்சா. பார்வதிமகளும் எருக்கங்குச்சி
                வச்சி செத்துப்போனா..... சின்னய்யா வாத்தியாரு பொண்டுவ
                ஆதி, ஜோதி படிச்சிப்புட்டு வாத்தியாரு வேலைக்குப்
                போனாளுவ” என்று வடக்கத்தியாள் பேசுகிறாள். பள்ளிக்கல்வி
                பெற்ற ஒரு சில பெண்கள் தவறு இழைத்ததைச் சுட்டிக் காட்டி
                பெண் கல்விக்குப் பெண்களே தடைபோடக் கூடாது என்று
                அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பெண் கல்வியின் பயனும்
                ஒருசில இடங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது. • கல்வியின் பயன்  கல்வியறிவின் மூலம் பகுத்தறிவு 
                வளரும். சிந்தனை
                விரிவடையும். தன் மகள் கலாவின் படிப்பை நிறுத்தியபின்
                ஆனந்தாயி  “வயசுப்  பொண்ணு 
                 படிக்கக்கொள்ள
                இருந்துச்சின்னா சிந்தன வேற தெசையிலே செதறிப்போவும்.
                வீட்டுக்குள்ளே அடைச்சிப் போட்டா......” என்று சிந்திப்பதின்
                மூலம் பெண் கல்வியின் பயனை ஒரு பெண்ணே தயங்குவதைச்
                சிவகாமி சுட்டிக் காட்டுகிறார். 3.4.5 பாலியல் பலாத்காரமும் 
                பெண்களும்  மாணவர்களுக்கு  நல்லொழுக்கத்தைப் 
                 போதிக்க
                வேண்டியவர்கள் ஆசிரியர்கள். அவர்களில் ஒருசிலர்
                மாணவிகளிடம் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர்.
                இந்நாவலில் அத்தகைய காட்சி ஒன்றும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
                ஆசிரியர் ஒருவர் ஒரு பள்ளிக்கூடப் பெண்ணை (நீலவேணி)
                பலாத்காரம்  செய்கிறார். அதனால் அந்த வருட
                பள்ளிப்படிப்பில் அவளால் தேர்ச்சி பெற முடியவில்லை இந்த
                நிகழ்ச்சியினால் அவளுக்கு ஆண்கள் மீது வெறுப்பு ஏற்பட்டு
                பிற்காலத்தில் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்கிறாள்.
                இளமையில் ஏற்பட்ட பாதிப்பு அவளை வருந்தியழவைக்கிறது.
                எந்தத் தவறும் செய்யாத பெண் இப்படி வருந்துகிறேன்.
                ஆனால்,  கங்காணியின் மகனான இராஜமாணிக்கம்
                இளமையிலிருந்து மது அருந்துதல், பிறபெண்களுடன் தொடர்பு
                வைத்துக் கொள்ளுதல் என்று வாழ்கிறான். அவனை ஊரார்
                ‘மைனர்’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். இவன் தீய
                பழக்கம் உடையவன் என்றும் தெரிந்தும் கூட பெண்கள் இவன்
                மீது மையல் கொள்கிறார்களே இது எப்படி என்று எண்ணி
                ஆச்சரியப்படுகிறாள். மேலும் தன் வாழ்க்கையில் இளமையில்
                ஏற்பட்ட அனுபவத்தினால் கங்காணி வீட்டிற்கு வீட்டுவேலை
                செய்வதற்காக  வரும் பூங்காவனத்திடம் “அண்ணன்
                (இராஜமாணிக்கம்) ஒரு மாதிரி; நெருங்கிப் பழகுற வேலை
                வச்சுக்காத” என்ற நேரடியாகவே சொல்கிறாள். பாதிக்கப்பட்ட
                பெண் மற்றொரு பெண்ணிற்கு அறிவுரை வழங்கி
                எச்சரிக்கிறாள். இவ்வாறு ஆணுக்கொருநீதி பெண்ணுக்கொருநீதி
                என்ற சமூக அவல நிலையை எடுத்துரைக்கிறார் சிவகாமி. 3.4.6 பொருளாதாரமும் பெண்களும்  வீட்டு வேலைகளோடு வயல்வேலைகளைச் 
                செய்யும்
                ஆனந்தாயி பின்வருமாறு பேசுகிறாள். 
                  “அதோட நிறுத்திக்க நானும் 
                  வயல்லே பாடுபட்டனே
                   வீட்டில தினமும் வடிச்சுக் கொட்டறனே
                   அதுக்கெல்லாம் கூலி கணக்குப் பண்ணி
                   குடுத்திடு”  என்று கணவனிடம் வழக்காடி 
                அல்லற்படுவதைச் சிவகாமி
                காட்டுகிறார். பெண்களின் அடி மனதில் எழும் எதிர்ப்புணர்வு
                ஒரு சில நேரங்களில் பொங்கி எழுந்து இவ்வாறு
                வெளிப்படுகிறது. மூளை உழைப்பிற்கு ஊதியம் வழங்கப்படுவது
                போல உடல் உழைப்பிற்கும் ஊதியம் வழங்கப்பட
                வேண்டும் என்ற விழிப்புணர்வைச் சிவகாமி முன்வைக்கிறாள்.
                சிறிய சிறிய செலவுகளுக்காக, பெண்கள் சிறுவாடு சேர்க்கும்
                வழக்கம் ஏற்படுகிறது.  பொருளாதாரத் தற்சார்பற்ற 
                பெண்களுக்குத் திடீர்
                செலவுகளுக்கும், குடும்பச் செலவுகளுக்கும் சிறுவாடு
                அவசியமாகிறது. சிற்றூர்ப்புறங்களில் வாழும் பெண்கள் மிகவும்
                சிக்கனத்துடன் வாழப் பழகிக் கொள்கிறார்கள். பணம்
                சம்பாதித்த போதிலும் கணவன் வீண் செலவு செய்வதால்
                ஆனந்தாயி, “கொத்தமல்லி வந்ததும் களத்திலே ரெண்டு
                மூட்டையைத் தெரியாமல் விற்றுவிட்டு தன் மூத்த மகள்
                கலாவுக்கு ஜிமிக்கி செய்துபோட வேண்டும்; மீதிப் பணத்தில்
                இரண்டு ஆட்டுக்குட்டி பிடித்து விட்டால் போகத்துக்கு இரண்டு
                குட்டிபோடும்” என்று திட்டமிடுகிறாள். தன் வீட்டு
                விளைச்சலில் வரும் பொருள்களை விற்றுக் குழந்தைகளுக்காகச்
                சேமிக்க வேண்டும் என்று செயல்படுகிறாள். இதிலிருந்து
                ஆனந்தாயியின் பேச்சும் மூச்சும் குழந்தைகளுக்காகவும்,
                குடும்பநலனிற்காகவும், பிறருக்கு உதவுவதற்காகவும் உள்ளது
                என்பது புலனாகிறது. |