4.1 கே. டானியல்
யாழ்ப்பாணத்தில் 1927-இல் பிறந்தவர் டானியல்.
இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தில் பங்கு கொண்டு 11
மாதங்கள் சிறைப்பட்டார். தமிழகத்திற்கு வந்து தஞ்சையில்
தங்கினார். இலங்கையில் தீண்டாமை ஒழிப்பு வெகு ஜன
இயக்கத்தின் அமைப்பாளராகவும், மக்கள் கலை இலக்கியப்
பெருமன்றத்தின் தலைவராகவும் இருந்தவர். தஞ்சையில் மார்ச்சு
1986-இல் மரணமடைந்தார். ஈழத்து பஞ்சம மக்களுக்காகத்
தோழர் டானியல் தன் இலக்கிய இயக்கப் பணிகளை
அர்ப்பணித்தவர். தமிழ் இலக்கியத் துறைக்கு நாவல்,
குறுநாவல், சிறுகதை என பல வடிவங்களில் தம் பங்களிப்பைச்
செய்துள்ளார்.
4.1.1 டானியலின் படைப்புகள்
அறுபதுகளில் சமுதாய ஒழுங்கீனத்தை மிக நுண்ணிய
முறையில் விவரித்துச் சீர்திருத்த உணர்வுகளைத் தூண்டும்
வகையில் சிறுகதைகளைப் படைத்த டானியல் பின்னர்
நாவல்களையும் எழுதத் தொடங்கினார்.
தமிழில் தலித் இலக்கியம் படைத்த சிறந்த
நாவலாசிரியரான டானியல் எழுதிய நாவல்களில்
முக்கியமானவை பஞ்சமர் (1972), கோவிந்தன் (1983),
போராளிகள் காத்திருக்கின்றனர், அடிமைகள் (1984),
கானல் (1986), தண்ணீர் ஆகியவையாகும்.
மனங்கள் தானாக மாறுவதில்லை, முருங்கை
இலைக்கஞ்சி, தெனியானின் பிஞ்சுப்பழம், மையக் குறி,
இருளின் கதிர்கள் ஆகிய குறுநாவல்களையும்,
அமரகாவியம், உப்பிட்டவரை, டானியல்கதைகள் போன்ற
சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவருடைய சிறுகதைகள்
தாமரை இதழில் வெளிவந்துள்ளன.

தமிழீழ எழுத்தாளர் டானியலின் நாவல்களில் ‘தலித்’
மக்களின் கடும் உழைப்பு, தியாக உணர்வு முதலிய
நற்குணங்கள் வெளிப்படுகின்றன. 1972-இல் டானியல் எழுதிய
முதல் நாவல் பஞ்சமர். இப்புதினம் குடியாட்சி உணர்வுடன்
பஞ்சமர் சாதியைச் சேர்ந்தவர்களின் இயக்க அடிப்படையில்
சாதி இழிவுகளுக்கு எதிராகத் திரண்டெழுந்து போராடத்
தொடங்கிய வரலாற்றை விளக்குவதாகும். கதை சொல்லும் கலை
கைவரப் பெற்ற டானியல் தன் அனுபவங்களின் பின்னணியில்
இந்நாவலை எழுதியுள்ளார். இந்நாவல் இலங்கை யாழ்ப்பாண
நகரப்பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. அதில் வட்டாரப் பேச்சு
வழக்குகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. மனிதர் - வாழ்க்கை
- சாவு முதலியவற்றைப் புதிய தரிசனத்தில் புதிய அழகோடு
வெளிப்படுத்துகிறது பஞ்சமர். மனித சமூக உறவுகளைப் புதிய
முறையில் அமைத்து அதனை மாற்றியமைப்பதற்கான
போராட்டம் இந்நாவலில் இடம் பெற்றுள்ளது. இந்நாவலைத்
தொடர்ந்து அவர் கோவிந்தன், போராளிகள்
காத்திருக்கின்றனர், அடிமைகள், கானல் போன்ற நாவல்களை
எழுதியுள்ளார்.
போராளிகள் காத்திருக்கின்றனர் என்ற நாவல்
மண்டைத்தீவு மீனவர்கள் பற்றியது. மனித உணர்ச்சிகளின்
அடிப்படையில் தொழிலாளர் இனம் ஒன்றுபட்டுப் போராடுவது
சுட்டப்படுகிறது. இது வட்டார நாவலாகத் திகழ்கிறது.
4.1.2 தமிழ் இலக்கிய வரலாற்றில் பெறுமிடம்
1950-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழ் நாவல்
வளர்ச்சிக்கு இலங்கை எழுத்தாளர்களின் பங்களிப்பு
மிகப்பெரியது. அறுபதுகளில் யாழ்ப்பாணப் பகுதியில்
நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் ஆலயப் பிரவேச
இயக்கங்கள் ஆகியவை இலக்கியத்திற்கு ஊக்கமளித்தன.
செ. கணேசலிங்கன், இளங்கீரன் பொன்னையன், காவலூர்.
இராசதுரை, டொமினிக்ஜீவா, செ. யோகநாதன், கே. டானியல்
முதலிய முற்போக்கு எழுத்தாளர்கள் தேசியப் பிரச்சினைகளைத்
தங்கள் எழுத்துகளில் வெளிப்படுத்தினார்கள்.
தமிழீழ எழுத்தாளரான கே.டானியல் அடிநிலை மக்கள்
வாழ்க்கையையும், பிரச்சினைகளையும் எழுத்தில் வழங்கும்
முயற்சியில் தமிழ் மக்களிடையே அடக்கு முறையின் வடிவமாக
இருக்கும் சாதிப்பிரச்சினைகளையும் பற்றி எழுதியுள்ளார்.
|