5.3 கதைமாந்தர்
கதைக்கருவிற்கு உயிர் ஊட்டுபவர்கள் கதை மாந்தர்களே
ஆவர். நாவலில் காண்பதெல்லாம் கதை மாந்தர் தொடர்புடைய
நிகழ்ச்சிகளே ஆகும். ஒரு நாவலில் பல்வேறு பாத்திரங்கள்
இடம் பெற்றிருந்தாலும் அவை ஒவ்வொன்றும் ஏனைய
பாத்திரங்களினின்றும் வேறுபட்டுத் தனித்து நின்று விளங்க
வேண்டும். கதைமாந்தரைத் தலைமை மாந்தர், துணைமாந்தர்
என்று இருவகைகளாகப் பிரிக்கலாம். இந்நாவலில் இடம்பெறும்
கதைமாந்தர்கள் குறித்து இப்பகுதி விளக்குகிறது.
5.3.1 தலைமை மாந்தர்
இந்நாவலின் தலைமை மாந்தராகத் திகழ்பவன்
சுதந்திரராஜன்.
• சுதந்திரராஜன்
புதிய மொட்டுகள் நாவலின் கதைத்தலைவன்
சுதந்திரராஜன், இவனைச் சுற்றியே கதை பின்னப்பட்டுள்ளது.
சமூகத்திற்காக இவன் தன்னை எப்படியெல்லாம் அர்ப்பணித்துக்
கொள்கிறான் என்பதை மையமாகக் கொண்டே சுதந்திரராஜன்
படைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இளம் பருவத்தே வேறு
ஊரிலிருந்து வந்த துரைசாமியுடன் நட்பு கொள்கிறான்.
ஆகையால் துரைசாமியே சுதந்திரராஜனின் வரலாற்றைக் கூறும்
முகமாகச் சுதந்திரராஜன் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.
• இளமையும் ஆர்வமும்
விளையும் பயிர் இளமையிலேயே தெரியும் என்பர். அதுபோல் சுதந்திரராஜனின் இளமைக்கால உணர்வுகள் அவனது
எதிர்கால இலட்சிய வாழ்க்கையைப் பிரதிபலித்துக்
காட்டுவதாகப் படைக்கப்பட்டுள்ளது. அவனுக்குப் பெற்றோர்
வைத்த பெயர் எசக்கிமாடன். அவன் நன்றாகப் படித்த
போதிலும், குறும்புக்காரனாகவும் இருந்தான். அவன் ஆறாம்
வகுப்பு படிக்கும் போது வகுப்பு வாத்தியாராக இருந்தவர்
பாலையா. அவர் பாடம் நடத்தாமல் உறங்கக்கூடியவர்.
அதனால், அவருடைய கொண்டையிலே பூவைச்செருகி ஏளனம்
செய்கிறான். ஆனால், அவன் புதியதாக வந்த பெருமாள்
பிள்ளை ஆசிரியரிடம் முழுமையான சுதந்திர உணர்ச்சியைப்
பெற்றான். அவரிடம், பிறநாட்டு சுதந்திர வரலாறு பற்றியும்,
இந்திய நாட்டின் சுதந்திரம் பற்றியும் மிகுந்த ஆர்வத்துடன்
கேட்கிறான். அவனுடைய சுதந்திர உணர்ச்சியைக் கண்டு
ஆசிரியர் ‘சுதந்திரராஜன்’ என்றே பெயர் மாற்றம் செய்கிறார்.
அவன், தன் நண்பர்களுடன் சுதந்திர தின விழாக்
கொண்டாடியதனால் ஊராரின் எதிர்ப்புக்கும், முதலாளியின்
எதிர்ப்புக்கும் ஆளாகின்றான். பஞ்சாயத்தார் விதித்த
தண்டனையை ஏற்காமல் ஊரைவிட்டே ஓடிவிடுகிறான்.
ஏனெனில் அந்தத் தண்டனையை ஏற்றுக்கொண்டால் தான்
செய்தது தவறென்று ஆகிவிடும் என்பதனாலேயே இவ்வாறு
செய்கிறான். உயர்ந்தசாதி, தாழ்ந்தசாதி என்பது சரியா? தவறா?
என்று நண்பர்களோடு விவாதிக்கிறான். அவன்
இளமையிலிருந்தே சாதியை வெறுக்கும் ஒருவனாகப்
படைக்கப்பட்டுள்ளான். மேலும், தன்மானமும்,
தன்னம்பிக்கையும் நிறைந்தவனாக அவன் விளங்குகிறான்.
• உழைப்பும் உதவியும்
தன்னுடைய கடமைகளை முழுமையாகச் செய்யும் அவன்,
பிறரின் உதவியை நாடாமல் தன் உழைப்பினால் இறுதிவரை
வாழ்ந்தான். வெளியூரிலிருந்து வந்ததும் தன் தம்பிக்குக் கடை
வைத்துக் கொடுப்பதிலிருந்து அவனுடைய குடும்பப் பொறுப்பை
உணரலாம். அவன் கல்வியறிவு மூலம் மக்களிடம்
விழிப்புணர்வை ஊட்ட முடியும் என்பதைத் தன் வாழ்க்கையில்
கடைப்பிடித்து, புத்தகம் படிக்கும் பழக்கத்தை மக்களிடம்
உண்டாக்கினான். அவன் வடிவு என்ற பெண்ணிற்குப் பண
முதலீடு கொடுத்து வியாபாரம் செய்யச் சொல்கிறான்.
இதிலிருந்து அவன் உள்ளத்திலிருந்த உதவும் மனப்பான்மை
வெளிப்படுகிறது.
• சீர்திருத்தமும் செயல்பாடும்
அவன் கோயில் வருமானத்திலிருந்து ஊர்மக்களின்
தேவைகளை நிறைவேற்றலாம் என்று புதிய சிந்தனையை முன்
வைக்கிறான். அவன் சமூகச் சீர்திருத்த நாடகங்களை நடத்தி
மக்களை விழிப்படையச் செய்தான். அவன் நேர்மையும்,
துணிவும் கொண்டவனாக விளங்கியதோடல்லாமல் சிறந்த
தொழிற்சங்க வாதியாகவும் தொழிலாளர் நலம் நாடுபவனாகவும்
விளங்கினான்.
5.3.2 துணை மாந்தர்
இந்நாவலின் துணைமாந்தர்களுள் தங்கராளி, துரைசாமி,
பெருமாள்பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
• தங்கரளி
சுதந்திரராஜனின் மனைவி தங்கரளி துணைப்
பாத்திரமாக வருகிறாள். அவள் சிறுவயதில் சுதந்திரராஜனின்
கடைக்கு வந்து துணிப் பொறுக்குகிறாள். பிறகு ஊரிலுள்ள
பெண்களிடமிருந்து அவள் தையல் கடைக்குத் துணி வாங்கிக்
கொண்டு வந்து கொடுக்கிறாள். அவள் தையல் கடையைப்
பெருக்கிச் சுத்தம் செய்கிறாள். அவள் மீது இரக்கங்கொண்ட
சுதந்திரராஜன் அவளுக்குப் பாவாடை, தாவணி வாங்கிக்
கொடுக்கிறான். அவள் அதை ஏற்க மறுக்கிறாள். அவள்
ஏழ்மையிலும் உள்ள உறுதி கொண்டவளாகவும், தன்மானம்
மிக்கவளாகவும் விளங்குகிறாள். முதலாளி கட்டாயப் படுத்தி
பொன்னம் பெருமாளுக்குத் தங்கரளியை ஐந்தாவது தாரமாகத்
திருமணம் செய்து வைக்கிறார்.
• துணிச்சலும் புரட்சியும்
அவள் கணவன் இறந்த பிறகு, தவறான நோக்கத்தோடு
தன் வீட்டிற்கு வந்த முதலாளி மேல் சாணத்தைக் கரைத்து
ஊற்றினாள். இது அவளுடைய அஞ்சா நெஞ்சத்தைக்
காட்டுகிறது. கணவன் இறந்தபிறகு தாலி அறுக்காமல் புரட்சி
செய்கிறாள். பிறகு தான் விரும்பிய சுதந்திரராஜனைத்
திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்குத்
தாயாகிறாள். கணவன் கயிற்று வேலைத் தொழிலில்
ஈடுபட்டபோது இவளும் துணையாக இருக்கிறாள். அவன்
தொடங்கிய தொழிற்சங்கத்தில் இவளும் பல உறுப்பினர்களைச்
சேர்த்தாள். இந்நாவலில் தங்கரளி, துணிவுடைய
பெண்ணாகவும், சுதந்திரராஜனுக்குப் பொருத்தமான
மனைவியாகவும் படைக்கப்பட்டிருக்கிறாள்.
• துரைசாமி
இந்நாவலில் இடம் பெறும் முக்கியமான துணைப் பாத்திரம்,
தலைமை மாந்தரோடு சிறுவயதிலிருந்தே நெருங்கிப்பழகிய
துரைசாமி. அவன் தன் ஊரைவிட்டு, சுதந்திரராஜனின் ஊருக்கு
வந்தவன். சுதந்திரராஜனோடு சிறு வயதிலிருந்தே பழகியதால்
அவனுடைய சுதந்திர உணர்வுகள் எல்லாம் இவனுக்கும்
இருந்தது. அவன் சுதந்திரராஜன்மீது மிகுந்த அன்பு
கொண்டவன்; நண்பனுடைய துன்பத்தில் பங்கெடுத்துக்
கொண்டான்.
• பெருமாள்பிள்ளை
சுதந்திரராஜன் ஊருக்கு மாற்றலாகி வந்த புதிய ஆசிரியர்
பெருமாள் பிள்ளை. தலைமை மாந்தருக்கு மிகுந்த வலிமை
சேர்ப்பதாக இப்பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது. இவர்
விடுதலை வேட்கையுடைவர். இவர் மாணவர்களிடம்
அன்புகாட்டி அவர்களை நல்வழிப்படுத்தினார். இவர் மாலை
நேரத்தில் இலக்கிய மன்றம் நடத்தி மாணவர்களுக்குப் பேச்சு,
பாட்டு, நாடகமெல்லாம் சொல்லிக் கொடுத்தார். இத்துணைப்
பாத்திரம் தலைமை மாந்தர், அவரைச் சுற்றியுள்ள மாந்தர்களின்
பண்புகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.
• தையல்காரர்
தலைமை மாந்தரே தையல்காரரை, ‘தன் ஆசான்’ எனப்
பெருமையுடன் கூறுமளவிற்கு உயர்ந்த பாத்திரமாகப்
படைக்கப்பட்டுள்ளார்.
“பெருமா புள்ள சாருக்கு அப்புறம் இந்த
டெயிலர் தான் எனக்கு ஆசானா இருந்து
படிப்பிச்சார்”
என்று தன் சிந்தனை வளத்திற்கு அடித்தளமிட்டவர் என்று
சுதந்திரராஜன் குறிப்பிடுகிறான்.
இப்பாத்திரம் ஓரிடத்தில் வந்தாலும் இந்நாவலுக்கு ஒரு
தனித் தன்மையாக அமைந்துள்ளது. தலைமை மாந்தரின்
வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியதில் இப்பாத்திரத்திற்கும்
ஓர் இடமுண்டு. இது போன்று இந்நாவலில் பல பாத்திரங்கள்
படைக்கப்பட்டுள்ளன. மாறுபட்ட பாத்திரங்களைக் கொண்ட
மனிதர்களைக் காணமுடிகிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
|
1. |
பொன்னீலனின் எந்த நூலுக்குச் சாகித்திய
அகாதெமி பரிசு கிடைத்தது?
|
விடை |
2. |
பொன்னீலனின் தாயார் எழுதிய நாவலின் பெயர்
என்ன?
|
விடை |
3. |
நாவலில் இடம்பெற்றுள்ள சுதந்திரராஜன்
இயற்பெயர் என்ன?
|
விடை |
4. |
துரைசாமியின் குடும்பத்தினரை ஏன் ஊரைவிட்டு
விலக்கி வைத்திருந்தனர்?
|
விடை
|
5. |
ஊரார் சுதந்திரராஜனுக்கு எத்தகைய
தண்டனையை வழங்கினர்?
|
விடை
|
|
|