1.2 முற்கால உரைநடை 

தமிழிலே உரைநடை தோன்றிய காலத்தை அறுதியிட்டுக் கூற இயலவில்லை. ஒரு மொழியில் செய்யுள் தோன்றும்போது பேச்சு வழக்கிலுள்ள மொழிநடையினையும் ஓசைப் பண்பினையும் ஒட்டியே தோன்றுகிறது. அந்த வகையில் சங்க இலக்கியத்தின் அகவற்பாக்கள் இம்முறையில் தோன்றின எனலாம். சங்க இலக்கியச் செய்யுளோசை, பேச்சோசை போன்று எதுகை, மோனை முதலான தொடை அமைப்பின்றி இருப்பது இதற்குச் சான்று ஆகும். உரைநடைக்குச் சீர் அடி என்ற வரையறை கொடுத்தது போலச் செய்யுள்கள் அமைந்துள்ளன. இது படிப்படியாகச் செறிவும் ஒழுங்கும் பெற்றுவந்த தன்மையை, சங்கம் மருவிய கால இலக்கியங்களான சிலப்பதிகாரம் முதலான காப்பியங்களில் காணலாம். சிலப்பதிகாரத்தில் உரை கலந்து வருவதையும் காணலாம். அடுத்து உரைநடை வரலாற்றில் குறிப்பிடத்தக்கது இறையனார் அகப்பொருளுக்கு எழுந்த உரையான களவியலுரையாகும். தமிழ் உரைநடை வளர்ச்சியை உணர்த்துவதாகக் களவியலுரை அமைந்துள்ளது.

1.2.1 சங்க காலம் 

சங்க காலத்தில் தமிழ் நூல்கள் எல்லாம் செய்யுள் வடிவிலேயே இருந்தன. காவியம், வரலாறு, சோதிடம், மருத்துவம் போன்ற பலதுறைகளில் தமிழ் மக்கள் தங்களுடைய அறிவுச் செல்வத்தைச் செய்யுள் உருவிலேயே சேமித்து வந்தனர். எனவே, உரைநடை அப்போது தோன்றவில்லை. பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதுவதில் ஏற்படும் இன்னலைத் தவிர்க்கவே சுருங்கிய செய்யுள் வடிவிலே எழுதினர். சங்க இலக்கியங்களில் உரைச் செய்யுளோ, தனி உரைநடையோ காணப்படவில்லை. தகடூர் யாத்திரை என்ற நூல் உரை விரவிய பாடலைக் கொண்ட சங்க கால நூல் என்பர். சங்கப் பாக்களின் கீழ்க் காணப்படும் குறிப்புரைகளும், துறைகளும் பழந்தமிழ் உரைநடையைக் காட்டுகின்றன. எனினும் அவை மிகச்சிறிய அளவிலேயே உள்ளன.

1.2.2 சங்கம் மருவிய காலம் 

களப்பிரர்கள் ஆட்சி செய்த சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் செய்யுளுக்கு இடையிடையே உரைநடை அமைந்துள்ளது. அதனால்தான் அடியார்க்கு நல்லார், “உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” எனச் சிலப்பதிகாரத்திற்கு மற்றொரு பெயரைக் குறிப்பிட்டுள்ளார். உரை என்ற சொல்லை, தொல்காப்பியத்தில்தான் முதன்முதலில் காண்கின்றோம். ஆனால் உரைநடை என்ற பகுதியைச் சிலப்பதிகாரத்தில்தான் காண்கின்றோம். மடை என்ற சொல்லுக்கு உரிய பொருள் தடுத்து நிறுத்துதல். சிலப்பதிகாரத்தில் வரும் செய்யுள்களைத் தடுத்து உரைநடை வருவதால் உரைப்பாட்டு மடை என்ற பெயர் ஏற்பட்டது. சிலப்பதிகாரத்தின்கண் அமைந்துள்ள உரைப்பாட்டு மடை மிகச் சிறப்பானது ஆகும். இதனால் பல அரிய வரலாற்றுச் செய்திகள் தெரிய வருகின்றன. எடுத்துக்காட்டாக, இளங்கோவடிகள் உரைப்பாட்டு மடையைத் தொடங்கும் பொழுது, “குமரியொடு வட இமயம்” (வஞ்சிக்காண்டம், வாழ்த்துக்காதை) என்று நாட்டின் எல்லையை வரையறை செய்கின்றார். 

மதுரைக் காண்டத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையில், 

குடப்பால் உறையா குவிஇமிழ் ஏற்றின்
மடக்கண்ணீர் சோரும் வருவது ஒன்று உண்டு
உறிநறு வெண்ணெய் உருகா உருகும்
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
மான் மணி வீழும் வருவது ஒன்று உண்டு.

என்று உரைப்பாட்டு மடை வருகிறது. இந்த உரைப்பாட்டு மடை உரைநடையாக இருந்தாலும், செய்யுள் போன்றே அமைந்துள்ளது.

இறையனார் களவியலுரை 

சங்கம் மருவிய காலத்தை அடுத்து வந்த காலப் பிரிவே பல்லவர் காலம் எனக் குறிப்பிடப்படுகிறது. இது, ஏறக்குறைய கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்தது எனலாம். இதுவே பக்தி இயக்கக் காலமும் ஆகும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் வாழ்ந்த இந்தக் காலத்தில் உரைநடையில் நூல்கள் ஏதும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. இறையனார் களவியல் உரையே இலக்கியங்களுக்கு எழுந்த உரைநூல்களுள் முதலாவதாகக் கருதப்படுகிறது. இதன் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பர் அறிஞர். எனவே இந்த உரை பல்லவர் ஆட்சியின் இறுதியில் எழுதப்பட்டது எனலாம். 

இறையனார் அகப்பொருள் என்றாலும் இறையனார் களவியல் என்றாலும் ஒன்றுதான். இந்த நூலில் அறுபது நூற்பாக்கள் உள்ளன. இந்த நூல் களவு, கற்பு என்ற இரண்டு பிரிவுகளைக் கொண்டது. இந்நூலின் ஆசிரியர் இறையனார் (சிவபெருமான்). இறையனார் களவியல் நூலின் உரைதான் முதல் உரைநடை நூல். இந்நூல், உரைகளில் காலத்தால் முற்பட்டது. இதுவே தமிழில் தோன்றிய முதல் உரைநூல். பிற்காலத்துத் தோன்றிய எல்லா உரைகளுக்கும் இது வழிகாட்டியாய் விளங்குகிறது. இன்று நமக்குக் கிடைத்துள்ள இந்த உரை நக்கீரரால் எழுதப்பட்டது. அவர் தானே தன் கைப்பட எழுதியது அல்ல. அவர் உரையே வாய்மொழியாகப் பல தலைமுறைகளுக்கு வழங்கி வந்தது. நக்கீரருக்குப் பின்னால் வந்த ஒன்பதாம் தலைமுறையைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரால் எழுதி வைக்கப்பட்டது என்பர். 

நக்கீரர் சைவ சமயத்தைச் சார்ந்தவர்; தம் உரையில் வேறு எந்தத் தெய்வத்தையும் குறிப்பிடவில்லை.

உரை மரபு 

இறையனார் அகப்பொருள் உரை சிறப்பியல்புகள் பல வாய்ந்ததாகும். இந்த உரைநடை சிறப்புடையது; பிறரது உரை மறுப்பும், பன்னூற் பயிற்சியும் சிறப்பாக அமைந்துள்ளன. இந்த உரையைப் படிக்கும் போது இலக்கண உரையைப் படிக்கின்றோம் என்ற நினைவு தோன்றுவதில்லை. இனிமையான இலக்கியம் போலத் தொட்ட இடமெல்லாம் இந்த உரையில் இலக்கியச் சுவை மிகுந்துள்ளது. பிற உரையாசிரியர்களின் கருத்தைக் கூறி மறுக்கும் தன்மை சிறப்பாக அமைந்துள்ளது. 

“நூல் முழுவதும், உரையாசிரியர் நம் எதிரே நின்று உரையாடுவது போன்ற மனநிலையை உரையின் வாயிலாக உண்டாக்கி விடுகின்றார்” என மு.வை.அரவிந்தன் குறிப்பிடுகின்றார். ஏனைய இலக்கிய இலக்கண நூல்களுக்கு இல்லாத சிறப்பியல்புகள் பல இக்களவியல் உரைக்கு உண்டு. ஆசிரியரது உரையில் அந்தாதிப் போக்கினைக் காணலாம். 

எடுத்துக்காட்டு :  

பன்னீராண்டு கழிந்தது. கழிந்த பின்னர்
நாடு மலிய மழை பெய்தது. பெய்த
பின்னர் அரசன். . . .

இந்த நூலில் பல இடங்களில் உரையாசிரியரின் பிற துறை அறிவு வெளிப்பட்டு நிற்கிறது. தொல்காப்பியத்தில் காணும் பல நூற்பாக்களை இவர் சுட்டிக் காட்டுகின்றார். 

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்பது போன்ற குறட்பாக்களை நக்கீரர் பயன்படுத்தியுள்ளார். வினாவிடைப் போக்கு, சில சொற்களுக்கு மிக நுணுக்கமாகப் பொருள் கூறுதல் போன்றவை ஆசிரியரின் தனிச் சிறப்பாகும். “இந்த நூல் என்நுதலிற்றோ எனின் தமிழ் நுதலிற்று.” இங்கு, தமிழ் என்ற சொல்லிற்கு அகப்பொருள் என்ற பொருளை இந்த ஆசிரியர் கூறுகின்றார். இந்த நூலாசிரியர் பல இடங்களில் அக்காலவழக்கங்களை விளக்குகின்றார். 16ஆம் நூற்பாவின் உரையால் அக்கால விழாக்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. முச்சங்கங்கள் பற்றிய குறிப்புகளை இந்த உரையாசிரியர் விளக்குகின்றார். இந்த உரையாசிரியர் பின் வந்த உரையாசிரியர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்குகின்றார். 

நுட்பமான பல கருத்துகளையும் விளக்கங்களையும் இவ்வுரை மிகவும் தெளிவாக விளக்குகிறது. தொட்ட இடமெல்லாம் இனிக்கின்ற பலாச்சுளையைப் போல இவரது உரை விளங்குகின்றது. நக்கீரரின் உரைநடைச் சிறப்பைக் கற்று உணர்ந்த மறைமலையடிகள், 

“பளபளப்பான பல நிறச் சலவைக் கற்கள் அழுத்தி, பொன் மினுக்குப் பூசி, பல பல அடுக்கு மாடங்கள் உடையதாய் வான் முகடுவரை உயர்ந்து காண்பார் கண்ணும் கருத்தும் கவருவதாய் உயர்ந்தோங்கி நிற்கும் எழுநிலை மாடம் போல் ஆசிரியர் உரை உயர்ந்து நிற்கிறது” 

எனக் கூறுகின்றார். இவ்வுரையில் இனிய இலக்கியம் போல் தொட்ட இடமெங்கும் இலக்கியச் சுவை தேங்கிக் கிடக்கிறது. இதைப் படித்து விட்டு மூடும் போது செந்தமிழ் தந்த இன்பம் மண்டிக் கிடக்கிறது. இதில் எதுகையும் மோனையும் சிறப்பாக அமைந்துள்ளன. பல்லவர் காலத்துத் தோன்றிய சந்தி சேர்த்து எழுதும் முறையும் செய்யுள் சொற்களும் இந்த உரையில் கையாளப்பட்டுள்ளன.