உலக
நாடுகளில் காணப்படுவதுபோல் இந்தியாவிலும் நாடகக்கலை தெய்வத்தொடர்பு உடையதாகவே
காணப்படுகிறது. வட இந்தியர்கள் நாடகக் கலையின் தந்தையாகப் பரத முனிவரைக்
குறிப்பிடுகின்றனர்.
தேவர்களின் கண்களுக்குக் காட்சி விருந்து படைக்க
வேண்டும் என்று தேவேந்திரன் கருதுகின்றான். படைப்புக் கடவுளான நான்முகனிடம்
தன் விருப்பத்தைத் தெரிவிக்கின்றான். நான்முகனும் திரிபுரதகனம்
என்னும் நாடகத்தை அவர்களுக்காக உருவாக்குகின்றான்.
அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே நடைபெறும்
போரைச் சித்திரிப்பது திரிபுரதகனம். இந்த நாடகத்தில் சிவபெருமான்
திரிபுரத்தை எரித்து நடனமாடினார். இதைக் கண்குளிரக் கண்டுகளித்த பரதமுனிவர்
உலக மக்களுக்காக அதைக் கொண்டு வந்தார் என்பது புராண வரலாறு.
ஒரு மாற்றுக் கருத்து
சமயப் பின்னணியிலேயே
இந்திய நாடகம் விளக்கம் பெற்றாலும் ஒரு மாற்றுக் கருத்தை எண்ணிப் பார்க்கலாம்.
மனிதர்களிடம் இயல்பாக நிறைந்திருக்கும் மகிழ்வுணர்ச்சியும்,
விளையாட்டு உணர்ச்சியும், போலச் செய்தல் உணர்ச்சியும் நடனமாகவும் நாடகமாகவும்
மாறி வளர்ந்திருக்கலாம். இவ்வாறு எண்ணத் தூண்டுவதற்குரிய காரணங்கள் இரண்டு.
மேலை நாட்டினைப்போல் இந்தியாவில் துன்பியல் நாடகத்துக்குத்
தோற்றுவாய் இல்லை.
இந்தியாவின் பல பகுதிகளில் உழைக்கும் மக்களின் பொழுதுபோக்கில்
பிறந்த ஆடல் பாடல் ஆகியவையே இசைப்பாட்டு நடனங்களாக உருவெடுத்துள்ளன.
இந்திய நாடகத் தோற்றப் பின்னணி
அசாம்
மாநிலத்தில் அங்கிய நாடக் என்னும் இசை நடனம் மகிழ்ச்சிப்
பின்னணியை உடையது.
கீர்த்தன்ய நாடக் என்னும் இசை
நடனம் மெசில்லா என்னும் பகுதியில் வழக்கத்தில் இருந்திருக்கிறது.
மணிப்பூரில் மணிப்புரி நடனம் வழக்கத்தில்
இருக்கிறது.
வங்காளத்தில் பல்வகை இசைப்பாட்டு நாடகங்களே தொடக்கத்தில்
நடத்தப் பெற்றன. இன்றும் இசைப்பாட்டு நாடகங்கள் அங்கும் சிறப்புற நடத்தப்படுகின்றன.
ஒரிசா மாநிலத்தில் பல பகுதிகளில், ஜாத்திரா
என்னும் இசை நாடகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
காஷ்மீர், பஞ்சாப், சிந்து, இராஜஸ்தான், குஜராத்
ஆகிய மாநிலங்களில் இசை நாடகங்களே நடத்தப்படுகின்றன.
ஆந்திர மாநிலத்தில் வீதி நாடகமும், கர்நாடக மாநிலத்தில்
யட்சகானமும், கேரளத்தில் கதகளியும், தமிழகத்தில் தெருக்கூத்தும் இசைப்பாட்டு
நாடக வடிவங்களே ஆகும்.
இவை அனைத்தும்
எதைக் காட்டுகின்றன? நாடகத் தோற்றத்தில் தீவிரமான சமயப் பின்னணி உள்ளது என்பதைவிடவும்
உழைப்பின் களைப்பைப் போக்கும் மகிழ்ச்சிப் பின்னணியே அதிகமாக இருக்கிறது
என்பதைத் தானே காட்டுகின்றன.
|