உரையாடல், எதிர் உரையாடல் என அனைத்தும்
கவிதையிலேயே அமைந்து உருவான நாடகம் கவிதை
நாடகமாகும்.
கவிதை நாடகம் யாப்பு நெறிகளுக்குக்
கட்டுப்பட்டது; செய்யுள் வடிவில் அமைந்தது. கவிதை
வகை நாடகங்களும் மேலை நாட்டு நாடக வகையைப்
பின்பற்றி எழுந்தனவே ஆகும்.
|
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை |
தமிழில்
எழுந்த முதல் கவிதை நாடகம் மனோன்மணீயமாகும். இதை எழுதியவர்
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆவார். 1891 ஆம் ஆண்டு இந்த நாடகம் எழுதப்பட்டது.
சுந்தரம் பிள்ளையைத் தொடர்ந்து பலர் கவிதை நாடகங்களை எழுதினர்.
மறைந்த மாநகர், புகழேந்தி, புலவர் உள்ளம், அன்னி மிஞிலி எனப் பல
கவிதை நாடகங்கள் தமிழில் வெளிவந்துள்ளன.
தமிழ் இலக்கியச் செய்திகளும், தமிழக
வரலாற்றுச் செய்திகளும் கவிதை நாடக ஆசிரியர்களுக்குக் கருப்பொருள் ஆகின.
கனகை, புகழேந்தி, அனிச்ச அடி,
ஆபுத்திரன், வேங்கையின் வேந்தன், நெடுமான் அஞ்சி, இரவிவர்மன், இராஜாதேசிங்கு,
சாகுந்தலை, தமயந்தி போன்ற கவிதை நாடகங்கள் இலக்கியம் மற்றும் வரலாற்றுப்
பின்புலங்களிலிருந்து உருவானவையாகும்.
உரைநடைக் கலப்பு
இசைப்பாட்டு நாடகத்தில் சிற்சில
இடங்களில் உரைநடை கலப்பதைப் போல் கவிதை நாடகத்தில் உரைநடை கலப்பதும் உண்டு.
இந்த உரைநடை கதைமாந்தர் தன்மைக்கேற்பவும் நாடகாசிரியரின் தேவைக்கேற்பவும்
இடம் பெறும். பேராசிரியர் க. பெருமாள் எழுதிய மாபெரும் அறம், பெரிய
வெற்றி ஆகிய கவிதை நாடகங்களில் உரைநடை சிறிதளவு கலந்துள்ளது. வேறு
சிலரின் நாடகங்களிலும் உரைநடைக் கலப்பு உண்டு.
|