பேரழகுடைய காளை ஒருவன் துறவு வேடம் பூண்டு
மௌனமே உருவான முனிவன் ஒருவனைக் காண்கின்றான். முனிவனைப் பின்பற்றி அவன் இருக்கும்
இடமான காட்டுக்குள்ளே சென்று அடைகிறான். அன்று பனி பெய்து கொண்டு இருந்ததால்
இரவில் கட்டைகளைக் குவித்துத் தீ எழுப்பி இளைஞனைக் குளிர்காய வைக்கிறான்.
அப்போது இளைஞன் தீ உமிழும் வெளிச்சத்தில் இருந்து தன் முகத்தைத் திரும்பத்
திரும்ப மறைக்க முயல்கிறான். ஆனாலும் தன்னை மறைக்க முடியாத நிலையில் தான்
ஒரு பெண் என்பதை அவ்வெளிச்சம் காட்டி விடுகிறது. அப்போது அவள் தன் கதையைக்
கூறுகிறாள்.
கதை
காவிரிப்
பூம்பட்டினத்தில் வணிக குலத்தில் பிறந்தவள் நான். நானும் என் மாமன் மகனும்
உயிரும் உடலுமாக, இணைபிரியாது. ஒன்றாய் வளர்ந்தோம். என் சிறிய அன்னைக்குக்
குழந்தை இல்லாத காரணத்தால் அவள் செல்வமும் எனக்கே வந்தது. அச் செல்வச் செருக்கில்
நான் என் மாமன் மகனை மதிக்க மறந்தேன். அவரும் வேதனைப்பட்டு என்னை விட்டுச்
சென்று விட்டார். என்னைப் பெண் பார்க்க வந்த பிள்ளை வீட்டார் பலர். ஆனால்
வந்தவர்கள் அனைவரும் என் செல்வத்தின் மீதே குறியாக இருந்தனர். என்னை விரும்பி
மணக்க வந்தவர் எவரும் இல்லை.
தேடுதலும் வேடமும்
என் செல்வத்தை
விரும்பாது என்னை விரும்பியவர் என் மாமன் மகன் மட்டும்தான் என்னும் உண்மையை
அப்போது உணர்ந்தேன். ஆனால் அவர் இப்போது என் அருகில் இல்லையே என்று ஏங்கினேன்.
நாள் வாரமானது; வாரம் மாதம் ஆனது; மாதம் வருடமானது எப்போது வருவாரோ என்று
ஏளனம் செய்கின்றனர்.
‘அவர் உண்டு என்றால் நான் கண்டிடுவேன்;
இல்லை என்றால் உயிர் துறப்பேன்’
என்னும் முடிவில் நான் ஆண்வேடம் பூண்டு இவ்வாறு அவரைத் தேடி அலைகிறேன். ஊர்,
நாடு, காடு, உள்ளிடம், வேற்றிடம் என அனைத்து இடங்களிலும் தேடி நான் உங்களைக்
கண்டேன். என் உயிர்த் துணைவரின் சிறு சாயல் உங்களிடம் தெரிந்ததால் என் சோகக்
கதையை உங்களிடம் கூறி என்னை நான் ஆற்றிக் கொண்டேன்.
சிவகாமியும் சிதம்பரமும்
என் தேடுதல்
முயற்சி அனைத்தும் தோல்வி அடைந்த நிலையில் இனி இந்த ஊன் உடம்பைச் சுமக்க
எனக்கு விருப்பம் இல்லை; இதோ இந்த எரிதழலே இனி என் இருப்பிடம் என்று கூறி
அந்த மங்கை தீப்பாய முற்பட்டாள். அப்போது மௌனத் தவம் பூண்ட முனிவன் ‘சிவகாமி,
இதோ........ உன் சிதம்பரன் நான் தான்; என்னை நன்றாகப்பார்’ என்று கூறினான்.
சிவகாமி தவ முனிவர் தன் உயிர்த்துணைவரே என்பதை அறிந்து மகிழ்ந்தாள்.
இக்கதையை வாணி மனோன்மணியிடம் கூறிக் காதலின்
ஆழத்தை உணர்த்தினாள்.
தத்துவ நெறி
உலக உயிர்களாகிய ஆன்மாக்கள் பரம் பொருளை -
பதியை அடையும் வழியை - தத்துவ நெறியினை
விளக்கும் கதையே சிவகாமி சரிதம் என்றும் விளக்கம்
கூறுவர்.
|