பொதுவாக இசைப் பாட்டை இரண்டு வகையாகப்
பிரிக்கலாம்.
ஒன்று மேடையில் பாடுவதற்காக மட்டும் பயிற்சி
பெற்றுப் பாடுவது.
இரண்டு, பாடலுடன் சேர்ந்து நடிப்பதற்காகவும்
இசைப்பாட்டுப்
பயிற்சி பெறுவது. சங்கரதாஸ் சுவாமிகள்
நடிப்பதற்காகவும்,
நடிப்பின் தன்மைக்கேற்பப் பாவத்துடன் பாடுவதற்காகவும் இசைப்
பயிற்சி பெற்றவர். தாம் நாடக
ஆசிரியராகவும் இயக்குநராகவும்
இருந்த காலத்தில் முடிந்த அளவு மற்ற நடிகர்களையும் இவ்வாறே
உருவாக்கியவர்.
பவளக்கொடி
பவளக்கொடி
நாடகத்தில் சுவாமிகள் பவளக்கொடியை வருணித்துப் பாடிய பாடல் ஒன்றைக் காணலாம்.
கூந்தல் நீருண்ட மேகம்போல் இருக்கும் - நீளம்
கொஞ்சமல்ல பத்துப்பாகம் இருக்கும் - ஒரு
குற்றம் இல்லாச் சந்திரன் இருக்குமே - ஒத்து
இருக்கும் மனம் உருக்கும்.
கண்கள் இரண்டும் மதன் அம்பு - புருவம்
காணில் அந்தக் காமன் கைவில் கரும்பு - நல்ல
கண்டமும் சங்கின் அழகு கொண்டிடும் - தந்த வரிசை
விரும்பு முல்லை அரும்பு.
கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம் - யாரும்
காண நேரில் மோகமோ அபாரம் - எழில்
கண்டு உவமை சொல்லக் கம்பனும் மயங்குவான் அந்(த)
நேரம் உண்டோ தீரம்
(கண்டம் = கழுத்து; தந்தம் = பல்)
இந்தப் பாடல் கண்ணிகளில் எதுகை, மோனை, இயைபு
என்பன மட்டும் அல்லாமல் நல்ல இசை வளமும் உவமைத்
திறமும் ஒன்று சேர அமைந்திருப்பதை அறிந்து இன்பமுறலாம்.
மழை நீரைத் தாங்கி நிற்கும் மேகம் கரு கரு என்று
வானில் அடர்ந்து தொங்கிக் கொண்டிருக்கும்; அந்தக் கரிய
மேகம் வானில் சரிந்து கிடப்பதைப் போல் பவளக்கொடியின்
கூந்தல் சரிந்து தொங்கிக் கொண்டு இருக்கிறதாம்; அக்கூந்தல்
பத்துப்பாகம் நீளம் என்று சொல்லும் அளவிற்கு நீளமாக
இருக்கிறதாம். முகம் குறை இல்லாத முழுநிலவை ஒத்து
இருக்குமாம்; இந்தக் கூந்தலையும், கூந்தலைத் தாங்கிய
முகத்தையும் கண்டால் மனம் உருகி விடுமாம்; இவ்வாறு பாடலின்
ஒவ்வொரு கண்ணியும் உயர்ந்த உவமை நலத்துடன் கற்பனை
வளம் மிக்க கவிதையாகவும் இசைப்பாட்டாகவும் அமைந்து
அழகு செய்கிறது.
லவ குச
லவ குச நாடகத்தில் இடம் பெறும் கற்பனை
அழகுடன்
கூடிய இன்னொரு பாடலைக் காணலாம்.
வஜ்ஜிரத்தால் தூண் நிறுத்தி
மரகதத்தால் சட்டம் பூட்டி
உச்சிதமாம் முத்துவடம்
கட்டியதாம் ஊஞ்சல் இது
ஆணிப் பொன்னால் பலகை
அருகிலெல்லாம் நீலமணி
மாணிக்கங்களைப் பதித்து
வனப்பு இயற்றும் ஊஞ்சல் இது
(வஜ்ஜிரம் = வைரம்; உச்சிதம் = தகுதி; வனப்பு = அழகு)
இந்தப் பாடலில் சாதாரண ஓர் ஊஞ்சலை எவ்வளவு
கற்பனை
நயம் பொங்க வருணித்திருக்கிறார் பாருங்கள். வஜ்ஜிரத்தால்
தூணாம்; மரகத மணியால் சட்டமாம்; முத்துக்கள் கோத்த ஊஞ்சல்
கயிறாம்; ஆணிப் பொன்னால் ஊஞ்சல்
பலகையாம்; ஊஞ்சலில்
ஆங்காங்கே நீலமணிகளும்
மாணிக்கங்களும் பதிக்கப்பட்டு
இருக்கின்றனவாம்!
எவ்வளவு வளமான உயரிய கற்பனை! நாட்டுப்
புறப்பாடல்களிலும் சுவாமிகளுக்கு நல்ல பயிற்சி இருந்ததால்
அப்பாடல்களின் சாயல் விளங்க இப்பாடலை எழுதி இருக்கிறார்.
வள்ளி திருமணம்
|
வள்ளி திருமண மேடை நாடகக் காட்சி |
வள்ளி திருமணம் நாடகத்தில் தினைப்புனத்தைக் காவல்
செய்யும் போது குருவிகளையும் கிளிகளையும் விரட்டுவதாக
வரும் பாடல் நாடக ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப்
பெற்ற ஒன்று. இந்த நாடகத்தை யார் இயற்றி இருந்தாலும்,
யார் நடித்தாலும் வள்ளி எப்படிப் பாடிக் கிளிகளை
விரட்டுகிறாள் என்பதை நாடகப் பிரியர்கள் கூர்ந்து
கவனிப்பார்கள். நடிப்போரின் கற்பனைத் திறமைக்கு ஏற்ப
ஒவ்வொருவரும் இப்பாடலை அவரவர் விருப்பத்திற்கு ஏற்பப்
பாடி மெருகு ஊட்டுவர்.
சுவாமிகள் இப்பாடலை எவ்வாறு அமைத்திருக்கிறார்
என்று
பார்ப்போம்.
சிச்சிலிகாள் காக்கைகளா
செம்பருந்துக் கூட்டங்களா
பச்சைநிற மயிலினங்காள்
பண்ணிசைக்கும் குயிலினங்காள்
சோ சோ சோ
மரங்கொத்திக் குருவிகளா
மாடப் புறவினங்காள்
தரந்தரப் பட்சிகளா
சம்பங்கிக் கோழிகளா
சோ சோ சோ
கூடுகட்டும் தூக்கணங்காள்
கொற்ற ராஜாளிப் பட்சிகளா
பாடும் வானம் பாடிகளா
பைரி நாண் வெண் கொக்கினங்காள்
கொண்டலாத்திக் குருவிகளா
கூடிவரும் பறவைகளா
நண்டு தேடும் உள்ளான்களா
நாகணவாய்ப் புள்ளினங்காள்
சோ சோ சோ
(சிச்சிலி = ஒருவகைப் பறவை; தரந்தரம் = பரம்பரை; பட்சிகள்=
பறவைகள்;
தூக்கணம் = தூக்கணாங்குருவி என்னும் ஒருவகைக்
குருவி; கொண்டலாத்திக்குருவி = கொண்டையாட்டுக் குருவி;
உள்ளான் = ஒருவகைக் குருவி; பைரி = இராசாளிப் பறவை)
என்று பாட்டுக்குள்ளே பறவைகளின் பட்டியலையே
அள்ளித் தருகிறார்.
புராணக் கதையின்படி வள்ளி குறவர் குலத்துப் பெண்
என்பதால் மலைப்பகுதியிலும் தினைப்புனத்திலும் தினைக்கதிரை
மேய வரும் பறவைகள் எவை எவை என்பதைத் தெரிந்து
வைத்திருக்க வேண்டும். சங்கரதாஸ் சுவாமிகள் அந்தக்
குறப்பெண் வள்ளி மனநிலையில் இருந்தே இப்பாடலைப் பாடி
இருக்கிறார்.
தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஒன்றான குற்றாலக் குறவஞ்சி
என்ற இலக்கியத்தில் வேட்டைக்காரச் சிங்கனும் சிங்கியும்
இவ்வாறு பல பறவைகளின் தகவல்களைத் தருவார்கள். அதை
இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம்.
|