1.2 நாடக முன்னோடிகள் |
|
தமிழ் நாடகத் துறையில் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களுள் சங்கரதாஸ் சுவாமிகள், சி. கன்னையா, நவாப் ராஜமாணிக்கம் முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள். |
|
நாடகப் பேராசிரியர் சங்கரதாஸ் சுவாமிகள் தொழில்முறை நாடகக் குழுக்களின் வளர்ச்சிக்குக் காரணமானவர் எனலாம். நாடகங்களின் தன்மை ஆட்டம், இசை, உரையாடல் என்று இருந்தது. இதிலிருந்து ஆட்டத்தை விலக்கியது இவர் செய்த முக்கிய மாற்றம் எனலாம். தமிழிசைக்குப் புது மெருகு தரும் முயற்சிகளாக இவரது நாடகங்கள் அமைந்தன. இவர் நாடகத்தில் இசையை முதன்மைப்படுத்தினார். |
|
|
|
சங்கரதாஸ் சுவாமிகள் |
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக |
|
|
|
சிரித்தாலும் பாட்டு, அழுதாலும் பாட்டு, பேசிக்கொள்வதும் கூடப் பாட்டு என்று பாட்டின் ஆதிக்கம் இவரது நாடகங்களில் இருந்தது. உரையாடல்கள் பாட்டின் பொருளை விளக்குவதற்கே இடம்பெற்றன. வெண்பா, கலித்துறை, விருத்தம், சந்தம், வண்ணம், கும்மி, தாழிசை, நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து, கீர்த்தனை, நாட்டுப்புறப் பாடல்கள், காதல் பாடல்கள் எனப் பல வகைகளில் பாடல்கள் இடம் பெற்றன. பாடல்கள் கற்பனைச் சிறப்பு மிக்கனவாக இருந்தன. |
|
பவளக் கொடியின் அழகை வருணிக்கும் பாடலை எடுத்துக்காட்டாகக் காணலாம். கூந்தல் நீருண்ட மேகம்
போலிருக்கும் - நீளம் எனப் பாடல் அமைந்திருக்கும். |
|
|
|
சங்கரதாஸ் சுவாமிகள் காலத்திற்கு முன் நாடகங்களில் நடிகர்கள், கட்டுப்பாடில்லாமல் விருப்பம் போல் வசனங்களைப் பேசி வந்தார்கள். நாடகங்களுக்கு வரையறுத்த பிரதிகளைச் சுவாமிகள் உருவாக்கினார். மக்களுக்குத் தேவையான பல நல்ல செய்திகளை நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தினார். வசனங்களில் சங்க இலக்கியம், திருக்குறள், பழமொழிகள் முதலானவற்றின் வரிகளையும் இடம்பெறச் செய்தார். தம் சொந்தப் புலமையையும் வெளிப்படுத்தி வசனங்களை எழுதினார். ஆயினும் பாடல்களின் ஆதிக்கம் வசனங்களை விஞ்சியதாக இருந்தது. எடுத்துக்காட்டாக அரிச்சந்திரன், “கேளாய் பெண்ணே! சந்திரமதி! லோகத்திலுள்ளவர்கள் செய்யும் படியான சகல பாவங்களையும் போக்கத் தக்கதாகிய திவ்ய மகிமை பூண்ட இந்தக் காசிநாடு வந்தோம் பாராய் பெண்ணே!” என்பான். உடனே “கரம் குவிப்பாய் மயிலே! இதோ காசி காணுது பார் குயிலே !” என்று பாடத் தொடங்கிவிடுவான். |
|
|
|
நாடகத்திற்காக இவர் எடுத்துக்கொண்ட கதைகள், தமிழ்நாட்டில் அம்மானைப் பாடல்களாகவும் தெருக்கூத்துகளாகவும் இருந்த பழங்கதைகள் ஆகும். மரபான கூத்து அமைப்பையும் நடிப்பையும் உள்வாங்கி நாடகங்களை எழுதினார். அபிமன்யு சுந்தரி, பவளக்கொடி, சீமந்தினி, சதிஅநுசூயா, பிரகலாதன், சிறுத்தொண்டர், வள்ளி திருமணம், சத்தியவான் சாவித்திரி, சதிசுலோசனா முதலான இவரது நாடகங்களை இவரே எழுதினார். இவை ஆயிரக் கணக்கான முறை நிகழ்த்தப் பெற்றன. மார்க்கண்டேயர், மயில்ராவணன், அரிச்சந்திரா மயான காண்டம், பாதுகா பட்டாபிஷேகம், லங்கா தகனம், லவகுச, இராம ராவண யுத்தம், வாலி மோட்சம், மன்மத தகனம், நளதமயந்தி, காந்தர்வதத்தை முதலான நாடகங்களையும் இவர் படைத்திருக்கிறார். |
|
|
|
1914ஆம் ஆண்டு இவர் தோற்றுவித்த சமரச சன்மார்க்க நாடக சபை மூலம் பல நல்ல நாடகப் பிரதிகளை உருவாக்கி நடத்தினார். தொழில் முறை நாடகக் குழுக்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப் பாலர் நாடக சபை தொடங்கி, அதற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். தொழில் முறை நடிகர்களும் கலைஞர்களும் உருவாகக் காரணமானார். எம்.ஜி. இராமச்சந்திரன், பி.யு. சின்னப்பா, எம்.ஆர். இராதா, என்.எஸ். கிருஷ்ணன், எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.ஆர்.ராமசாமி, எஸ்.எஸ்.இராசேந்திரன், ஏ.பி.நாகராஜன் முதலான நாடகக் கலைஞர்கள் உருவாக இவரது நாடகக்குழு காரணமானது. பல ஊர்களிலிருந்து வந்து நடிக்கும் நடிகர்கள் இவரது வசனங்களையே பேசியதால் நாடகங்களை எங்கு வேண்டுமானாலும் நடத்த முடிந்தது. |
|
இவர், ஸ்ரீ கிருஷ்ண விநோதசபா என்ற பெயரில் நாடகக்குழு ஒன்றினை அமைத்திருந்தார். சம்பூரண ராமாயணம், அரிச்சந்திரா, தசாவதாரம், கிருஷ்ணலீலா, ஆண்டாள் திருக்கல்யாணம், துருவன், சக்குபாய், பக்த குசலோ, சாகுந்தலா, பகவத்கீதை முதலான நாடகங்களை நடத்தியிருக்கிறார். |
|
|
|
சி. கன்னையா |
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக |
|
|
|
சி. கன்னையா மேடை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் பல சீர்திருத்தங்களையும் சிறப்புகளையும் செய்தார். பழைய நாடக மேடைகளில் பின்திரை பற்றியும் அரங்கப் பொருள்கள் பற்றியும் கவலைப்படுவதில்லை. திரௌபதி வஸ்திரா பஹரணம் நாடகத்தில், மன்னன் துரியோதனனும் சகுனியும் உரையாடும் காட்சிக்குப் பின்னணித் திரையாக, சென்னை போஸ்ட் ஆபிஸ் மின்சார டிராம் வண்டிகள் அடங்கிய திரைச்சீலை தொங்கவிடப் பட்டிருந்தது. சுப்பிரமணியர், அரிச்சந்திரன், விதூஷகன் முதலான பாத்திரங்களுக்கு உடைகள் பொருத்தமாக இல்லை. இவற்றையெல்லாம் சி. கன்னையா மாற்றியமைத்தார். |
|
|
|
இவரது நாடகக் காட்சிகளில், மேடையிலேயே குதிரை, யானை, தேர், காளை முதலானவற்றைக் கொண்டு வந்துவிடுவார். அரசவைக் காட்சிகளில் இரண்டு தூதர்கள் நிற்க, அவர்களுக்குப் பின்னால், நிறைய வெட்டுருக்கள் (கட்அவுட்) வைத்து ஐம்பது பேர் நிற்பது போலக் காட்டிவிடுவார். அரிச்சந்திரா நாடகத்தில் மயானக் காட்சியில், பிணம்போல் உருவம் செய்து அதற்கு இறுதிச் சடங்குகள் செய்வதைக் காட்டினார். இவரது குழுவில் நாற்பது அரங்கக் கலைஞர்கள் பணியாற்றினார்கள். பத்து லாரி அளவிற்கு அரங்கப் பொருட்களை வைத்திருந்தார். |
|
|
|
காட்சிச் சிறப்பிற்காகவே இவரது நாடகங்களுக்குக் கூட்டம் அலைமோதும். நுழைவுச் சீட்டுக் கிடைக்காமல் மக்கள் திரும்பினார்கள். முன்பதிவு முறையையும் இவர் ஏற்பாடு செய்தார். இவரது தசாவதாரம் நாடகம் 1008 நாட்கள் நடத்தப் பெற்றது. இவரது நாடகம் சென்னையில் நடக்கும்போது 700 கி.மீ. தொலைவில் உள்ள திருநெல்வேலியில் விளம்பரம் செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. |
|
மதுரை பாலமீன ரஞ்சனி சபா என்றும் மதுரை தேவி பால விநோத சங்கீத சபா என்றும் பால நாடக சபைகள் நடத்தியவர் நவாப் ராஜமாணிக்கம். பக்த ராம்தாஸ் நாடகத்தில் நவாப்பாக நடித்ததினால் இவர் நவாப் ராஜமாணிக்கம் என்று அழைக்கப்பட்டார். இவரும், காட்சி அமைப்பில் பல சாதனைகள் செய்தவர். கிருஷ்ணலீலா, தசாவதாரம், இராமாயணம், ஐயப்பன், ஏசுநாதர், பக்த ராமதாஸ், குமார விஜயம், சக்திலீலா முதலான புராண நாடகங்களை நடத்தியுள்ளார். |
|
|
|
நவாப் ராஜமாணிக்கம் |
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக |
|
|
|
மேடையில் இவர் உருவாக்கிக் காட்டிய தந்திரக் காட்சிகள் பலரையும் கவர்ந்தன. ‘குமார விஜயம்’ நாடகத்தில் முருகன் பிறப்பைக் காட்டுகையில், ஆறு சுடர்கள் ஆறு குழந்தைகளாக மாறுவதைக் காட்டினார். ‘கிருஷ்ணலீலா’ நாடகத்தில் குழந்தை கண்ணனைக் கூடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு வசுதேவர் கொட்டும் மழையில் செல்வதும், ஐந்து தலை நாகம் வந்து குடை பிடிப்பதும் காட்டப்பட்டது. யமுனை நதி பிளந்து வழிவிடுவதும், நதி நீர் அலம்புவதும், மீன்கள் துள்ளி விளையாடுவதும் காட்டப்பட்டது. ‘தசாவதாரம்’ நாடகத்தில் சிறைக்காவலர்கள் மயங்கி இருக்க, இரும்புச் சாவி தானே நகர்ந்து பூட்டைத் திறப்பதும், கதவு தானாகத் திறந்து கொள்வதும் காட்டப்பட்டது. ‘ஏசுநாதர்’ நாடகத்தில் கல்லறையிலிருந்து ஏசு உயிர்த்தெழும் காட்சி காட்டப்பட்டது. இவரது தந்திரக் காட்சி முறைகளை, ஆர். எஸ். மனோகர், ஹெரான் ராமசாமி முதலானோர் பின்பற்றினார்கள். |
|
|
|
தந்திரக் காட்சிச் சிறப்பிற்காக, இவரது நாடகங்கள் ஆயிரம் முறைகளுக்கு மேல் நடத்தப்பட்டன. இவர், ஐயப்பன் நாடகம் நடத்தியபோது ஐயப்ப ஊர்வலம் நடத்தப்பட்டது. ஐயப்ப பக்தி பரவியதாகவும் தெரிகிறது. இவருடைய ராமாயண நாடகம் நடந்த இடத்திற்கு ராமாயணம் பஸ் ஸ்டாப் என்றே பெயர் இருந்தது. இவருடைய ராமாயண நாடகம் நடந்தபொழுது எஸ்.எஸ். வாசன், தம்முடைய ஒளவையார் திரைப்படத்தை வெளியிட்டால் கூட்டம் வராது என்பதற்காக, வெளியிடாமல் வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. |
|
மேற்கண்ட தொழில் முறை நாடகக் கலைஞர்களிடமிருந்து வேறுபட்டவர் நாடகத் தந்தை பம்மல் சம்பந்தனார். பயில்முறை நாடகக் குழுவை உருவாக்கி அவ்வகையான குழுக்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தவர். இவருடைய ‘சுகுண விலாச சபை’ இதற்கு முன்னோடியாக அமைந்தது. பார்சி, மராட்டி, இந்துஸ்தானி நாடகக் குழுக்கள் நடத்தும் முறையை அறிந்து, அதே போன்று தமிழ் நாடகங்களை எழுதி இயக்கினார். எட்டு மணி நேரம், பத்து மணி நேரம் என்று நடந்துகொண்டிருந்த நாடகத்தை ஐந்து மணி நேரத்தில் முடியும் வண்ணம் மாற்றியவர் பம்மல் சம்பந்தனார். |
|
|
|
பம்மல் சம்பந்தனார் |
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக |
|
|
|
மக்களுக்கு நன்கு தெரிந்த கதைகளையே இவர் நாடகமாக்கினார். யயாதி, கொடையாளி கர்ணன், வள்ளி திருமணம், சிறுத்தொண்டர், மார்க்கண்டேயன், சதிஅநுசூயா முதலான நாடகங்கள் இவரால் எழுதப்பட்டவை. நம்ப முடியாத நிகழ்வுகளை நீக்கி எழுதுவது இவர் வழக்கம். புராண நிகழ்ச்சிகளுக்கும் காரணம் காட்டி விளக்குவார். சமுதாய நன்மைக்கு ஏற்ற வகையில் கருத்துகளை வலியுறுத்துவார். ‘யயாதி’யில் தாய் தந்தையர் மீது பற்று வைத்தல் வலியுறுத்தப்பட்டது. ‘கொடையாளி கர்ணனில்’ அறக்கொடையின் ஆற்றல் விளக்கப்பட்டது. ‘மார்க்கண்டேயர்’ நாடகத்தில் உறுதியான இறை நம்பிக்கை எடுத்துக்காட்டப்பட்டது. இவர் காலவ ரிஷி, சகாதேவனின் சூழ்ச்சி முதலான நாடகங்களையும் எழுதியிருக்கிறார். |
|
|
|
எதிர்க்கதை நாடகம் (Burlesque) என்ற வகையை உருவாக்கியவர் பம்மல் சம்பந்தனார். சமுதாயத்தில் பரவலாக வழங்கிவரும் பழைய கதையின் மூலக் கருத்திற்கு எதிரான கருத்தைக் கொண்டு நகைச்சுவையாக எழுதப்படுவது எதிர்க்கதை நாடகம். இதை ஏட்டிக்குப் போட்டி நாடகம் என்றும் கூறலாம். இதற்காக அரிச்சந்திரன் கதையை எடுத்துச் சந்திரஹரி என்று மாற்றி எழுதினார். அரிச்சந்திரன் கதை எந்த நிலையிலும் பொய் பேசாத ஒருவனைப் பற்றியது. பம்மல் சம்பந்தனாரின் சந்திரஹரி எந்த நிலையிலும் பொய்யே பேசுகிற ஒருவனைப் பற்றிய வேடிக்கைக் கதை. இதை என்.எஸ். கிருஷ்ணன் திரைப்படமாக ஆக்கினார். |
|
தேசிய வாதிகளான டி.கே.எஸ். சகோதரர்கள், மேடையமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறிப்பிடத் தக்கன. முகப்புத் திரைக்குப் பின்னுள்ள பின்னணித் திரைகளை வரிசைப்படுத்தி வைக்கும் முறையில் ஓர் ஒழுங்கினைப் புகுத்தினார்கள். ஒலிவாங்கி(mike)யிலிருந்து மூன்றடி தூரத்தில் தெருத்திரை இருக்கும். மேகத்திரை கடைசியில் இருக்கும். இடையில் காடு, அரண்மனை, தர்பார் எனப் பல திரைகள் இருக்கும். எல்லாத் திரைகளும் மேலிருந்து கீழிறங்கி வரும் வகையில் அமைக்கப்பட்டன. திரை இறங்கும் போது, ஓசை வராமலிருக்க மரக்கப்பிகள் பயன்படுத்தப்பட்டன. இவர்கள் நடத்திய சிவலீலா நாடகத்தில் வானுலகக் காட்சிக்குப் பொருத்தமாகப் பக்கத்தட்டிகளும், மேல் தொங்கட்டான்களும் அமைக்கப்பட்டிருந்தன. தொங்கட்டான்களை, மேக மண்டலம் போல் ஓவியங்கள் தீட்டி அமைத்தார்கள். அத்துடன், வளைவாக நறுக்கியும் வைத்திருந்தார்கள். விளக்கு அமைப்பிலும், ஒப்பனையிலும், இவர்கள் கவனம் செலுத்தினார்கள். |
|
|
|
டி.கே.எஸ் சகோதரர்கள் |
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக |
|
பாலாமணி அம்மாள், பி.பி.ஜானகி அம்மாள், பி. இரத்தினாம்பாள், வேதவல்லித் தாயார், விஜயலட்சுமி கண்ணாமணி, பி. இராஜத்தம்மாள் முதலான பெண்மணிகளும் நாடகத் துறையில் சாதனை படைத்தவர்கள். |
|
|
|
இவர்களில் பாலாமணி அம்மாள் குறிப்பிடத் தக்கவர். பெண்களைக் கொண்டே இவர் நாடகக் குழுவை நடத்தினார். இவருடைய நாடகக் குழுவிற்கும் பாலாமணி அம்மாள் நாடகக் குழு என்றே பெயர் இருந்தது. கும்பகோணத்தில் நடைபெற்ற இவரது நாடகங்களுக்காகச் சிறப்பு ரயில் 40 கி.மீ. தொலைவில் உள்ள மாயவரத்திலிருந்து விடப்பட்டது. இதற்குப் ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்றே பெயரிடப்பட்டிருந்தது. |
|
|
|
பாலாமணி அம்மாள் |
|
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக |
|
சங்கரதாஸ் சுவாமிகளின் காலத்தையொட்டி, நாடகம் படைத்தவர்களில் ஏகை சிவசண்முகம் பிள்ளை குறிப்பிடத் தக்கவர். இவரது சம்பூரண இராமாயணம், அரிச்சந்திரா முதலான நாடகங்கள் குறிப்பிடத் தக்கவை. இராமாயண நாடகத்தில், இவர் எழுதிய பாடல்களைத்தான் எல்லா இராமாயண நாடகங்களிலும் பயன்படுத்தினார்கள். நாடக சபைகள், நாடக முகாம் நடத்துகையில், இறுதி நாளில் இவரது ராமாயண நாடகத்தை நடத்தி முகாமை முடிப்பார்கள். |
|
|
|
எம்.வி. கோவிந்தராஜ அய்யங்கார், குசேலர் நாடகத்தில் ஆழ்வார், கம்பர் முதலானோரின் கவிதை அடிகளைப் பயன்படுத்தி எழுதியுள்ளார். அண்ணிய பூபன், சுந்தரர் விலாசம் நாடகத்தை மெய்ப்பாடுகளுடன் எழுதியுள்ளார். சுவாமிநாத சர்மாவின் அபிமன்யு நல்ல நடையமைப்புடன் எழுதப்பட்டுள்ளது. விசுவநாதன் எழுதிய அப்பூதி அடிகள் நாடகத்தில் மாணிக்கவாசகரின் பாடல் அடிகள் பயன்படுத்தப்பட்டன. பிரணதார்த்திகா சிவன், தமயந்தி நாடகத்தில் நளவெண்பாப் பாடல்களை அப்படியே பயன்படுத்தியுள்ளார். பவானந்தம் பிள்ளையின் சீதா கல்யாணம், ராமமூர்த்தி பந்துலுவின் பாண்டவ அஞ்ஞாத வாசம், அனந்தராம சாஸ்திரியின் உத்தரராம சரிதம் முதலானவையும் குறிப்பிடத்தக்கவை. |