1.6 இதிகாச நாடகங்கள் |
இதிகாசங்களில், இராமாயணமும் மகாபாரதமும் கதைக் களஞ்சியங்களாக இருக்கின்றன. அவற்றிலுள்ள கிளைக் கதைகளும், பாத்திரப் படைப்புகளும் கதா காலட்சேபங்களாகவும், தெருக்கூத்து நாடகங்களாகவும் நிகழ்த்தப் பெற்றிருக்கின்றன. மேடை நாடகங்கள் உருவானபோது இக்கதைகள் நாடகங்களாக ஆக்கப்பட்டன. இராமாயணக் கதைகளைவிட, மகாபாரதக் கதைகள் மிகுதியான வரவேற்பைப் பெற்றிருந்தன. மகாபாரதக் கதைகளை 18 நாட்கள் கோயில் விழாக்களின் போது படிக்கும் வழக்கம் இருந்தது. பாரதக் கதை நாடகங்களும் கோயில் விழாக்களில் நடத்தப்படுகின்றன. |
மகாபாரதம் ஒரு கதைக் களஞ்சியம்; கருத்துக் குவியல்; மனித வாழ்வின் பல கூறுகளைப் படம் பிடித்துக் காட்டுவது. தொடக்கக் கால நாடக ஆசிரியர்கள் அனைவருமே மகாபாரதக் கதைகளை நாடகமாக ஆக்கியுள்ளனர். ஏதாவது ஒரு நல்ல கருத்து, நாடகத்தின் வாயிலாக உணர்த்தப்பட்டது. சி.ஆர். நமச்சிவாய முதலியாரின் கீசகன் நாடகம் காமத்திற்கு அடிமையாவது சீர்கேடு என்பதை வலியுறுத்தியது. நளாயினி நாடகம் கற்பிற்கும், கணவனுக்குச் செய்யும் பணிவிடைக்கும் எடுத்துக்காட்டாக இருந்தது. எஸ்.கே. வெங்கடராம ஐயரின் சைரந்திரியின் வெற்றி கற்பின் சிறப்பை விளக்கியது. |
கன்னையா தாசரின் மகாபாரத விலாசம், சிவசண்முகம் பிள்ளையின் சம்பூரண மகாபாரதம் முதலான நாடகங்கள் பாரதக் கதையை முழுமையாக வெளிப்படுத்தின. பி.ராம மூர்த்தியின் பாண்டவர் அஞ்ஞாதவாசம் பிற்பகுதிக் கதையை வெளிப்படுத்தியது. கல்யாண சாஸ்திரி படைத்த கோஷயாத்திரை என்ற கௌரவர் பங்கம் என்னும் நாடகம் கதையின் ஒரு பகுதியை விளக்கியது. மதுரை முத்துசுப்ப பாரதியின் சுபத்ராபரிணயம், சுபத்திரைக்கும் அர்ச்சுனனுக்கும் நிகழ்ந்த திருமணத்தைப் புலப்படுத்தியது. வீ.கே. பார்த்தசாரதி ஐயங்காரின் சுபத்திரார்ஜு ன நாடகம் இத்தகையது. |
கர்ணமோட்சம், சூதுச்சருக்கம், திரௌபதி வஸ்திராபகரணம், கிருஷ்ணன்தூது, அரக்கு மாளிகை, அரவான் களப்பலி, கடோத்கஜன் போர், பதினெட்டாம் நாள் போர் முதலான நாடகங்களும் கதையின் ஒரு பகுதியை விளக்கின. |
சாஸ்தா ஐயரின் ‘தூதகடோற்கசம் நாடகம்’, பி.எஸ். ராமையாவின் ‘தேரோட்டிமகன்’, ஆர். எஸ். மனோகரின் துரியோதனன் முதலியன பாத்திரப் படைப்புப் பற்றியன. |
கிளைக் கதையான நளன் கதையையும் பலர் நாடகமாக ஆக்கியிருக்கிறார்கள். ஆர். சுப்பிரமணிய அய்யரின் நளச் சக்கரவர்த்தி நாடகம், எஸ்.கே. பார்த்தசாரதியின் நளன் அல்லது கலியின் பெருமை, கவிஞர் உலக நாதனின் தமயந்தி நளன் கதை முதலானவை குறிப்பிடத் தக்கன. |
மகாபாரத்தில் வரும் சகுந்தலை கதையும் பலரால் நாடகமாக்கப்பட்டிருக்கிறது. என். சாமிநாத சாஸ்திரியின் சாகுந்தல நாடகம், மறைமலை அடிகளின் சாகுந்தலம், பவானந்தம் பிள்ளையின் சாகுந்தலம், அ.கு. ஆதித்தரின் சகுந்தலா நாடகம் முதலானவை குறிப்பிடத் தக்கன. |
அரிச்சந்திரன் கதையும் பலரால் நாடகமாக்கப்பட்டிருக்கிறது. முத்தழக பாரதியின் அரிச்சந்திர நாடகம், அப்பாவுப் பிள்ளையின் அரிச்சந்திர விலாசம், முத்தன் ஆசாரியாரின் சத்யவாக்கு அரிச்சந்திர நாடகம், பவானந்தம் பிள்ளையின் அரிச்சந்திரன் நாடகம் முதலானவை குறிப்பிடத் தக்கவை. |
கன்னையா, நவாப் ராஜமாணிக்கம் முதலானவர்கள், முழுமையாக ராமாயணக் கதையை நாடகமாக்கினார்கள். எஸ். பவானந்தம் பிள்ளையின் சீதா கல்யாண நாடகம், பாதுகா பட்டாபிஷேகம் முதலாயின குறிப்பிடத் தக்கன. அ. சீனிவாச ராகவனின் நிகும்பலை, இந்திரஜித் யாகம் பற்றியது. எஸ்.கே.பார்த்தசாரதி ஐயங்கார் எழுதிய பக்தபரதன் அல்லது பாதுகா பட்டாபிஷேகம் மிகச் சிறப்பாக வரவேற்கப்பட்ட நாடகம். பூரணலிங்கம் பிள்ளையின் இலங்கை மன்னன் இராவணன் வீரவரலாறு, ஆனந்த பாரதி ஐயங்காரின் உத்தர ராமாயண நாடகம், பி. பக்தவத்சலத்தின் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம், கும்பகர்ணன் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கா. அரங்கசாமி எழுதிய கனகை, நாடோடி எழுதிய அகலிகை, இரா.பழனிச்சாமியின் மாவீரன் வாலி முதலானவை குறிப்பிடத் தக்கன. |
தாடகை வதம், வாலிவதம், சபரி மோட்சம், மயில் ராவணன், சஞ்சீவி பர்வதம், வீபிஷணன் அடைக்கலம் முதலான பல நாடகங்களும் இராமாயணத்தைக் கொண்டு எழுதப்பட்டவை. |