2.3 தெருக்கூத்துக் கதைகள்

கூத்துப் பாடங்களைப் பெரும்பாலும் நூலாக அச்சிடுவதில்லை. ஒரு சில கூத்துகளே அச்சில் வந்திருக்கின்றன. இவை நாடகம், விலாசம், சபா, அலங்காரம், சரித்திரம், வாசகப்பா, சரித்திரப்பா என்ற பெயர்களில் வெளியாகியிருக்கின்றன. கூத்துக் கதைகளைத் தெய்வக் கதைகள், வரலாற்றுக் கதைகள், இனச்சார்புக் கதைகள், நவீனக் கதைகள் என்று பிரிக்கலாம். தெய்வக் கதைகளில் பாரதம், இராமாயணம் முதலான இதிகாசக் கதைகளே மிகுதி. திருவிளையாடற் புராணம், பெரியபுராணம், கந்தபுராணம் முதலான புராணக் கதைகளும் கூத்தாக ஆடப்படுகின்றன.

கூத்துக் கதைகள் பெரும்பாலும் எதிர்மறைகளுக்கிடையில் நடக்கும் மோதல்களைச் சொல்வனவாக இருக்கின்றன. பாண்டவருக்கும் துரியோதனன் கூட்டத்தாருக்கும் நடக்கும் போர், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போராகக் கருதப்படுகிறது. இராமன் இராவணன் மோதல், நல்லது கெட்டது ஆகியவற்றின் மோதலாகக் காட்டப்படுகிறது. தர்மம் வெல்லும், நல்லது நிலைக்கும் என்ற நீதிகளை இவை மக்களுக்குச் சொல்கின்றன.

2.3.1 பாரதக் கதைக் கூத்துகள்

பாரதக் கதைகளில் பஞ்சபாண்டவர் வனவாசம், திரௌபதி துகிலுரிதல், அர்ச்சுனன் தபசு, பாஞ்சாலி சபதம், கர்ணமோட்சம், கிருஷ்ணன் தூது, பதினெட்டாம் போர் என்னும் கதைகள் அடிக்கடி கூத்தாக நிகழ்த்தப்படுகின்றன. ஜலக்கீரிடை, யாகசாலை, திரௌபதி திருக்கல்யாணம், அல்லி திருக்கல்யாணம், பவளக்கொடி திருக்கல்யாணம், ராஜசூய யாகம், துரியோதனன் வீரயாகம், சுந்தரி மாலையீடு, விராட பருவம், அரவான் களப்பலி, அணிவகுப்பு, பீஷ்மர் சுவேதனன் சண்டை, பகதத்தன் வதை, அபிமன்யூவதை, சயந்தவன் வதை, துரோணர் சண்டை, துச்சாதனன் சண்டை, துரியோதனன் வீர சுவர்க்கம் என்னும் பிற கூத்துகளும் நடத்தப்படுகின்றன. பாரதக் கதைக் கூத்துகள் பெரும்பாலும் கோயில் வழிபாட்டுக் கூத்துகளாக நடைபெறுகின்றன அரிதாகப் பொது நிகழ்வாகவும் நடத்தப்படுகின்றன.

கூத்துகளில் பாரதக் கூத்துகளே செல்வாக்கு மிக்கவையாக இருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமன்றிப் பிற மாநிலக் கலை வடிவங்களிலும் இக்கதைகள் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. கர்நாடகத்தின் யட்ச கானத்தில் திரௌபதி சுயம்வரம், அபிமன்யு கலகம், கர்ணார்ஜுன கலகம், பீஷ்ம விஜயம், சுபத்திரை கல்யாணம், கீசக வதம், விராட பர்வம் போன்ற கதைகள் பயன்படுத்தப் படுகின்றன.

பாரதக் கதைக் கூத்துகள்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

2.3.2 இராமாயணக் கதையும் புராணக் கதையும்

பாரதக் கதையைப் போல, இராமாயணக் கதையும் புராணக் கதைகளும் இடம் பெற்றுள்ளன.

இராமாயணக் கதைக் கூத்துகள்

இராமாயணக் கதைகளில் இராமர் பட்டாபிஷேகம், மூலபல சண்டை, பக்த ஹனுமான், சீதா கல்யாணம், இந்திரஜித், இரணியன் வரலாறு, இராவண வதம், மந்தரை-கைகேயி சூழ்ச்சி, இராமன்-குகன் சந்திப்பு, பரதன் பாதுகா பட்டாபிஷேகம், சூர்ப்பணகை மானபங்கம், பொன்மான். வாலி வதை, சபரி மோட்சம், இராமர் வைகுந்தம் எனப் பல கூத்துகள் நடத்தப்படுகின்றன. திரௌபதி அம்மன் கோயிலில் இக்கூத்துகள் நடத்தப்படுவதில்லை. பொது நிகழ்வாகவும் வேண்டுதல் கூத்துகளாகவும் இவை நடத்தப்படுகின்றன.

புராணக் கதைக் கூத்துகள்

புராணக் கதைகளில் சக்தி விநாயகர், வீர விநாயகர் யுத்தம், கந்தன் - கார்க்கோடகன் யுத்தம், தாரகாசுரன் சம்காரம், திரிபுர தகனம், காமதகனம், மும்மூர்த்திகள் கர்வ பங்கம், அனுசூயை, உத்தண்டாசுரன் சம்காரம் என்னும் முத்துமாரி மகத்துவம், நளாயனி சரித்திரம், ரேணுகா சம்காரம், தக்க யாகம், வல்லாள கண்டன் - வீரபத்திரன் சண்டை, கங்கா தேவி கர்வ பங்கம் என்னும் பராசக்தி - பண்டாசுரன் சண்டை, வள்ளி திருமணம் ஆகியவை கூத்தாக ஆடப்படுகின்றன.

பிறவகைக் கதைக் கூத்துகள்

கட்டபொம்மன், தேசிங்கு ராஜன் முதலானோர் கதைகள் வரலாற்றுக் கூத்துகளாக நடிக்கப்பட்டன. அரிச்சந்திரன் கதை, வன்னியர் வீர முழக்கம், சனிவார விரத நாடகம் முதலானவை சாதி சமயம் சார்ந்து நடைபெறும் கூத்துகள். இரண்டு பெண்டாட்டிக்காரன் கதை, நல்லதங்காள் கதை முதலான ஓரளவு பிற்காலக் கதைகளும் கூத்தாக நடிக்கப்படுகின்றன.


தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.

தெருக்கூத்துடன் நெருங்கிய தொடர்புடைய அம்மன் யார்?

விடை

2.

களரி கட்டுதல் என்பதன் இன்னொரு பெயர் என்ன?

விடை

3.

கதிரவன் உதித்த பிறகே கூத்தை முடிப்பது குறித்து எழுந்த பழமொழி எது?

விடை

4.

அர்ச்சுனன் தபசு கூத்தில் பயன்படும் மரம் எது?

விடை

5.

படுகளம் என அழைக்கப்படும் கூத்து எது?

விடை