2.6 தெருக்கூத்தின் எதிர்காலம்

தமிழக மக்களின் வாழ்வோடும் நம்பிக்கைகளோடும் கலை உணர்வோடும் தெருக்கூத்து பின்னிப் பிணைந்திருந்தது. சங்கரதாஸ் சுவாமிகள் முதலானவர்கள் வளர்த்தெடுத்த இசை நாடகங்களால் தெருக்கூத்துகள் நசித்துப் போய்விட்டன. வட மாவட்டங்களில் கோயில் சடங்காகக் கூத்து இருப்பதால் அங்கு மட்டுமே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கேரளத்தில் வள்ளத்தோள் கதகளிக்குப் புத்துயிர் அளித்தார். கர்நாடகத்தில் சிவராம காரந்த் யட்சகானத்திற்குப் புத்துயிர் அளித்தார். அதுபோலத் தெருக்கூத்திற்கும் புத்துயிர் அளிக்கப்பட வேண்டும்.

2.6.1 செய்ய வேண்டியவை

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தார் கிராமியக் கலைவிழா நடத்தி ஓரிரு கூத்துகளை மாவட்டங்களில் நடத்துகிறார்கள். கூத்துகள் வட்டாரத் தன்மை கொண்டவையாக இருப்பதால் ஒரு வட்டாரத்தில் வழங்கும் கூத்தை மற்றொரு வட்டாரத்தினர் புரிந்து ரசிக்க முடிவதில்லை. அந்தந்த வட்டாரத் தன்மைகளைக் குறைத்துப் பொதுத் தன்மைகளை உருவாக்கினால் கூத்து பரவலாகும்.

புதிய கூத்து

கூத்துப் பட்டறை என்ற அமைப்பு தொடங்கப்பட்டுப் புதிய கதைகளையும் கூத்தாக ஆக்க வேண்டும் என்ற முயற்சி மேற் கொள்ளப்பட்டது. பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ இவ்வகையில் கூத்தாக ஆக்கப்பட்டது. இதுபோலப் பல புதிய கூத்துகள் உருவாக்கப்பட வேண்டும்.

பயிற்சி

சங்கீத நாடக அகாடமி, புரிசையில் கண்ணப்பத் தம்பிரான் குழுவினருக்குக் கூத்துப் பள்ளி தொடங்க நிதி உதவி அளித்திருக்கிறது. இம்முயற்சி பரவலாக்கப்பட்டுப் பொதுவான பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டும்.

சீர்திருத்தம்

கூத்தில் சில சீர் திருத்தங்களும் செய்யப்பட வேண்டும். முழு இரவு நடக்கும் கூத்தை மூன்று மணி நேரத்திற்குக் குறைக்க வேண்டும். கட்டியங்காரனது பங்கைக் குறைத்து முறைப்படுத்த வேண்டும். விரசமான வசனங்களைத் தவிர்க்க வேண்டும். ஆண்கள் பெண் வேடமிடுவது பொருத்தமாக இல்லை. பெண்களே பெண் பாத்திரங்களை ஏற்று நடிக்கச் செய்ய வேண்டும். கூத்து நூல்கள் அச்சிடப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கூத்துக் கலையை உயர்த்த முடியும்.