3.1 வரலாற்று நாடகங்கள் |
அரசர்கள் பற்றிய வரலாற்று நாடகங்கள், அரசியல் வரலாற்றில் இடம்பெற்ற புகழ்மிக்க அரசர்களின் வரலாற்றைப் பற்றிச் சான்றாதாரங்கள் வாயிலாகக் கிடைத்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டன. |
இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுச் செய்திகள், வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள் முதலானவற்றைக் கொண்டு சேர, சோழ, பாண்டியர்கள் வரலாற்றை நாடகங்களாக ஆக்கியிருக்கிறார்கள். உண்மை நிகழ்ச்சிகளுக்கும் இடம் தந்து கற்பனை கலந்து இந்நாடகங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. கலைச்சிறப்பும், கற்பனைச் சுவையும், கருத்துச் செறிவும் கலந்து இவை படைக்கப்பட்டிருக்கின்றன. |
|
சிதம்பர நடராஜ சுந்தரம் என்பார் இளங்கொடியாள் என்னும் நாடகத்தைப் படைத்திருக்கிறார். இந்நாடகம் சேரன் செங்குட்டுவன் கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. |
|
ஏ.கே. இராமச்சந்திரன் எழுதிய இளவரசன் குலோத்துங்கன் நாடகம் இலக்கியம், கல்வெட்டு ஆகியவற்றின் அடிப்படையில் படைக்கப்பட்டுள்ளது. அரு.ராமநாதனின் ராஜராஜ சோழன் நாடகம் குறிப்பிடத்தக்கது. இது டி.கே.எஸ். சகோதரர்களால் வெற்றிகரமான நாடகமாக நடிக்கப்பட்டது. இது திரைப்படமாகவும் ஆக்கப்பட்டது. எஸ்.பி.மணியின் முடிந்த கோயில் ராஜேந்திர சோழன் வரலாற்றைக் கூறுவதாக உள்ளது. கோவிந்தராஜ் நாட்டாரின் இராசேந்திரன் நாடகமும் இத்தகையதே. |
|
மாமன்னன் ராஜராஜன் ராஜதந்திரத்தில் சிறந்தவன் என்று காட்டுவதாக நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. மகளின் காதலை ஆதரித்துப் பின்னர் காதலனைச் சிறை செய்வதும், தீயவரை நம்பி நல்லவரைப் புறக்கணிப்பதும் என்று முன்னுக்குப்பின் முரண்பாடான செயல்பாடுகளைக் கொண்டவனாக ராஜராஜ சோழன் படைக்கப்பட்டிருக்கிறான். ஆனால் இறுதியில் இதெல்லாம் ராஜதந்திரம் என்று உணர்த்தும் வகையில் தன் அறிவுத்திறனைப் புலப்படுத்தி அனைவரையும் வியக்க வைக்கிறான். |
|
இந்நாடகத்தில் ராஜராஜனின் சகோதரி குந்தவை நாச்சியார் அனைவரையும் ஆட்டுவிக்கும் திறனுடைய பெண்மணியாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். குந்தவையின் மகளான இளங்கோப் பிச்சியை இளவரசன் இராசேந்திரன் காதலிப்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் இறுதியில் திருமணத்தை நடத்தி வைப்பதாக நாடகம் படைக்கப் பட்டுள்ளது. |
|
ஆர்.சி.தமிழன்பனின் பாண்டிய மகுடம் பாண்டிய இளவரசர்களின் அரசுரிமைப் போரையும், ஒற்றுமையின்மையையும் புலப்படுத்தும் நாடகமாக அமைந்துள்ளது. |
விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஆட்சி தமிழகத்திலும் விரிவாக்கப்பட்டது. மதுரையிலும், தஞ்சையிலும், நெல்லையிலும் நாயக்கர் ஆட்சி வேரூன்றியது. குறிப்பாக விஸ்வநாதன் என்கிற படைத்தலைவனும், திருமலை நாயக்கனும், ராணி மங்கம்மாளும் வரலாற்றில் போற்றப்படுகிறார்கள். இக்காலக் கட்ட வரலாற்றைப் படைப்பாளர்கள் நாடகங்களாகப் படைத்துள்ளனர். தஞ்சை நாயக்கர் வரலாற்றை விதியின் வலிமை என்ற பெயரில் பி.எஸ்.சுப்பிரமணியம் நாடகமாக்கியுள்ளார். |
|
விஸ்வநாதனின் வரலாற்றை சி.எஸ்.முத்துசாமி ஐயர் விஸ்வநாதம் என்ற பெயரில் கவிதை நாடகமாக ஆக்கியிருக்கிறார். விஜய நகர மன்னரால் மதுரைக்கு அனுப்பப்பட்ட விசுவ நாதநாயக்கனின் வீரம், காதல் முதலானவை பற்றி நாடகம் விளக்குகிறது. காஞ்சனைக்கும் விசுவநாதனுக்கும் இடையிலான உண்மைக் காதல் உளம் கவரும் வகையில் சித்திரிக்கப் பட்டுள்ளது. |
|
என்.கனகராஜ ஐயர் படைத்த மறைந்த மாநகர் கிருஷ்ண தேவராயர் காலத்தில், விஜய நகர ஆட்சி பெற்றிருந்த உயர்வையும், இராமராயர் காலத்தில் வீழ்ச்சியுற்றதையும் சித்திரித்துக் காட்டுகிறது. நாடக ஆசிரியர் இதன் வாயிலாக நிலையாமையையும் புலப்படுத்துகிறார். |
|
கே.எம்.பக்தவத்சலம் படைத்த ராணி மங்கம்மாள் வரலாற்று ஆதாரங்களை மிகுதியாகக் கொண்ட நாடகம். சுத்தானந்த பாரதியார் படைத்த இராணி மங்கம்மாள் நாடகம், அவளது ஆட்சித் திறனை விளக்குவதாக அமைந்துள்ளது. மங்கம்மாள் வரலாற்றைக் கூறுவதாக உள்ளது. |
|
ஆறு.அழகப்பன் படைத்த திருமலை நாயக்கர் நாடகம் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் சிறந்தவரான திருமலை நாயக்கரின் வரலாற்றை நுணுக்கமாகக் காட்டுகிறது. அக்காலத்தில் இருந்த குமரகுருபரர், ராபர்ட் டி நொபிலி முதலானவர்கள் பற்றிய வரலாறுகளும் இதில் காட்டப்பட்டுள்ளன. திருமலை நாயக்கரின் ஆட்சி வல்லமை, வீரம், கலை ஆர்வம், மனிதாபிமானம் முதலானவற்றை விளக்குவதாக நாடகம் அமைந்துள்ளது. பாடல்கள், பழமொழிகள் முதலானவற்றுடன் இந்நாடகம் அமைந்துள்ளது. |
|
வேங்கி நாட்டு அரசுரிமைப் போர் பற்றி ராஜநீதி என்ற நாடகத்தை மக்களன்பன் எழுதியுள்ளார். எஸ்.மகாதேவனின் தெள்ளாற்று நந்தி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறெறிந்த நந்தி, கண்ணன் எழுதிய நந்திவர்மன் முதலானவை பல்லவர் வரலாற்றைக் காட்டும் நாடகங்கள். பி.கே.சுப்பராஜின் வீரபாண்டிய கட்டபொம்மன், கண்ணன் எழுதிய வேங்கை மார்பன், மாலிக்காபூர் முதலானவை நல்ல வரலாற்று நாடகங்கள். தாமரைக் கண்ணனின் சாணக்கிய சாம்ராஜ்யம், சாணக்கியனின் அரசியல் தந்திரங்களையும், சந்திரகுப்தனின் அரசியல் திறமைகளையும் காட்டியது. அரு.ராமநாதனின் சக்கரவர்த்தி அசோகன், மதுரை திருமாறனின் சாணக்கிய சபதம் முதலானவை வடநாட்டு வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள். |
புகழ் பெற்ற மனிதர்களைப் பற்றிய நாடகங்களையும், வாழ்க்கை வரலாறு போலப் படைத்திருக்கிறார்கள். இவற்றையும் வரலாற்று நாடகங்களாகவே கொள்ள வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரையான செய்திகளும் இவற்றில் இடம்பெறக் கூடும். |
|
திருவள்ளுவர் வரலாற்றை ஆறு.அழகப்பன் திருவள்ளுவர் என்ற நாடகமாக ஆக்கியுள்ளார். வழித்துணைவன் திருவள்ளுவர் என்ற நாடகத்தின் மூலம் வள்ளுவரைப் பற்றியுள்ள வாழ்க்கைச் செய்திகள், கருத்துகள் அனைத்தையும் அளிக்கின்றார். எத்திராஜ் அவ்வையார் என்ற நாடகத்தைச் சங்க இலக்கியம் மற்றும் புனைகதைகளைக் கொண்டு எழுதியுள்ளார். இன்குலாப் படைத்த ஒளவை பெண்ணிய நோக்கில் எழுதப்பட்டுள்ளது. மு.வரதராசனாரின் இளங்கோ நாடகமும் இத்தகையதே. சி.எஸ்.சச்சிதானந்த தீட்சிதரின் காளிதாசன், சுத்தானந்த பாரதியின் மகாகவி காளிதாசன் நாடகம் முதலானவையும் குறிப்பிடத்தக்கன. |
|
அன்னபூரணி அம்மாளின் சங்கர விஜய விலாசம், ஆதிசங்கரரின் வரலாற்றைக் கூறுகிறது. கிருபானந்த வாரியாரின் ஸ்ரீ அருணகிரி நாத பாவலரின் கபீர்தாசர் நாடகம், திருமலை நல்லானின் மார்கழி நோன்பு அல்லது ஆண்டாள் வரலாறு, மதுரை பத்மனாபனின் வள்ளலார் நாடகம் நாரண துரைக்கண்ணனின் திருவருட்பிரகாச வள்ளலார் முதலானவையும் குறிப்பிடத் தக்கவை. |
அரசாண்ட மன்னர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கிய கதைகளும், மன்னர்களைப் பற்றிக் கற்பனையுடன் அமைக்கப்பட்ட கதைகளும் நாடகங்களாக இயற்றப்பட்டன. அதைப் போல சாதி, சமயம் முதலியவை பற்றிய வரலாற்று நாடகங்களும் வெளிவந்தன. |
|
தெருக்கூத்துகளில் புராணக் கதைகளே இடம் பெற்றன. பின், சில வரலாற்றுக் கதைகளையும் கூத்துகளாக மாற்றி நிகழ்த்தினர். கட்டபொம்மன், மருதுபாண்டியர்கள், ராஜா தேசிங்கு முதலானவர்களின் வரலாறுகள் கூத்துகளில் இடம்பெற்றன. அர்ச்சுனனையும் துரியோதனனையும், இராமனையும் இராவணனையும், முருகனையும் சூரபதுமனையும் கூத்தில் கண்டிருந்த மக்களுக்கு வரலாற்று நாயகர்கள் புதுமையாகத் தோன்றினார்கள். |
|
வரலாற்றுக் கதை, கூத்தாக ஆக்கப்பட்டதற்கு எடுத்துக்காட்டாக அடைக்கல புரம் சிதம்பர சுவாமிகள் இயற்றிய கட்டபொம்மு கூத்து பற்றிக் காண்போம். இதிலுள்ள செய்திகள் புதுமையாகத் தோன்றின. கட்டபொம்மனின் உரிமை உணர்வு கூத்தில் புலப்படுத்தப்பட்டது. இதில் வரும் பாடலில் |
வானம்
பொழிய முப்போகம் விளையுது |
என்று உரிமையுணர்வு வெளிப்படுத்தப்பட்டது. கட்டபொம்மன் திரைப்படத்திலும் இத்தகைய கருத்து வசனமாக ஆக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இதுபோல வரலாற்று அடிப்படையில் இருந்த கூத்துகள் நாடகங்களாக ஆக்கப்பட்டன. |
|
வரலாற்றுக் கூத்துகள் நாடகமாக்கப் பட்டதைத் தொடர்ந்து பல நாடகங்கள் வெளியாயின. சோகி நாடகம், கார்காத்த நாடகம், தட்ட நாடகம் என்று சாதி பற்றிய வரலாற்று நாடகங்கள் எழுந்தன. |
|
முகமது இபுராகிம் அவர்களின் அப்பாசு நாடகம், வண்ணக்களஞ்சியப் புலவரின் அலிபாதுஷா நாடகம், தையார்சுல்தான் நாடகம் முதலான இசுலாமிய நாடகங்கள் வெளியாயின. |
|
ஞான சௌந்தரி நாடகம், வேதநாயகம் பிள்ளை வாசகப்பா முதலான கிறித்துவ நாடகங்களும் வெளியாயின. |