3.4 திராவிட இயக்க நாடகங்கள்

திராவிட இயக்கம், நாடகத்தைக் கருத்துப் பரப்பும் கருவியாகவும், போர்க் கருவியாகவும், கேடயமாகவும் ஆக்கிக் கொண்டது. திராவிட இயக்கம் கொள்கை பரப்பும் சாதனங்களாகவும், பகுத்தறிவைப் பரப்பும் சாதனங்களாகவும் நாடகங்களைப் படைத்தது. ஆரிய எதிர்ப்பு, பகுத்தறிவு, திராவிட இனமேன்மை, கடவுள் மறுப்பு, சுயமரியாதை முதலான இயக்கக் கொள்கைகளைப் பரப்பியது.

3.4.1 பாரதிதாசன் நாடகங்கள்

திராவிட இயக்கக் கவிஞரான பாரதிதாசன் சேரதாண்டவம், பிசிராந்தையார், தலைமலை கண்ட தேவர், கழைக்கூத்தியின் காதல், சௌமியன், நல்ல தீர்ப்பு, சத்திமுத்தப் புலவர், அம்மைச்சி, ரஸ்புடீன் முதலான வரலாற்று நாடகங்களைப் படைத்திருக்கிறார். இந்நாடகங்களில் திராவிட இயக்கக் கொள்கைகள் வெளிப்படுத்தப்பட்டன. குறிப்பாகத் தமிழரின் ஆற்றல்களை உணர்த்துவனவாக இவரது நாடகங்கள் அமைந்தன.

பாரதிதாசன்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

சேர தாண்டவம்

ஆட்டனத்தி ஆதிமந்தியின் காதற் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது. பரணர், வெள்ளிவீதியார் முதலானோர் பாடிய அகநானூற்றுப் பாடல்கள், ஆதிமந்தியே பாடியுள்ள குறுந்தொகைப் பாடல், இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் தரும் குறிப்பு முதலானவற்றைக் கொண்டு இந்நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது.

சேரநாட்டிற்கும் சோழநாட்டிற்கும் அரசியல் உறவு இல்லை. சோழநாடு வலுவானதாக இருந்தது. சேரன் ஆட்டனத்தி, நாட்டுப்பற்றை ஊட்டும் வகையில் நாடகம் ஒன்றை நடத்துகிறான். கண்டிருந்த மக்கள் ‘சோழன் வீழ்க!’ என்று முழங்குகின்றனர். ஆட்டனத்தி சோழநாடு செல்கிறான். அத்தியின் ஆடலில் ஈடுபாடு கொண்ட சோழ இளவரசி ஆதிமந்தி அவனைக் காதலிக்கிறாள். இரும்பிடர்த்தலையார் துணையால் அத்திக்கும் ஆதிமந்திக்கும் திருமணம் நடக்கிறது. சோழநாட்டில் புதுப்புனல் விழா வருகிறது. அத்தி, ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறான். ஆதிமந்தி ஆற்றோரம் அவனைத் தேடுகிறார். அத்தியை மருதி என்ற பெண் காப்பாற்றுகிறாள். மருதியை அத்தி காதலிக்கத் தொடங்குகிறான். ஆதிமந்தி அங்கு வந்து சேர மருதி ஒதுங்கிக் கொள்கிறாள். தற்கொலை செய்து கொள்கிறாள். அவளைப் போற்றிக் கடற்கரையில் கல் நடப்படுகிறது.

தமிழ் மன்னர்களின் வீரமும், கலைத்திறமும், நேர்மையும், ஆட்சித் திறமும் இதில் வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.

பிசிராந்தையார்

பாண்டிய நாட்டுப் பிசிராந்தையாருக்கும் கோப்பெருஞ்சோழனுக்கும் இடையேயிருந்த சிறந்த நட்பினை இந்நாடகம் புலப்படுத்துகிறது. சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றில் கண்ட செய்திகளைக் கொண்டு இந்நாடகத்தினைப் பாரதிதாசன் படைத்திருக்கிறார். சில புதிய நிகழ்ச்சிகளைப் படைத்துப் பிசிராந்தையாரின் புகழை நிலைநாட்டியுள்ளார்.

பாண்டிய நாட்டில் மழை பெருக்கெடுக்கின்றது. புயல் வீசுகின்றது. இன்னலுறும் மக்களுக்குப் பிசிராந்தையார் உதவுகிறார். பாண்டிய மன்னனும் இதில் ஈடுபடுகிறான். இருவரும் மீன்பிடிக்கும் தம்பதியருக்கு வலையை இழுக்க உதவுகின்றனர். வலையில் ஒரு பெண்ணின் உடல் சிக்கியிருக்கிறது. அது கொலை எனத் தெரிகிறது. கொலை செய்தவனைக் கண்டுபிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. மூன்று நாட்களில் கண்டுபிடிப்பதாகவும் தவறினால் மடிவதாகவும் அமைச்சர் சூளுரைக்கிறார்.

அவ்வாறு மூன்று நாட்களில் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. அமைச்சரின் மனைவி கணவனுக்காக உயிர்ப்பிச்சை கேட்கிறாள். அமைச்சன் தூக்கில் இடப்படும் சமயத்தில் கொலைகாரன் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான். ஆனால் கொலைக்கான காரணத்தைக் கூற மறுக்கிறான். இன்னும் மூன்று நாட்களில் அமைச்சன் கண்டுபிடிக்க வேண்டுமென்றும் இல்லையேல் கொல்லப்படுவான் என்றும் அரசன் கட்டளையிடுகிறான். தண்டனை நிறைவேறவிருக்கும் சமயம் இன்னொருவன் கொலையை ஒப்புக் கொள்கிறான். நாடகத்துள் நாடகமாகக் கொலைக்கான நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன. உண்மைக் குற்றவாளி தண்டிக்கப் படுகிறான்.

சோழநாட்டு ஆட்சியைப் பிடிக்கக் கோப்பெருஞ்சோழனின் பிள்ளைகள் முயல்கின்றனர். சூழ்ச்சியாகப் படையெடுக்கின்றனர். பாண்டியனையும் துணையாகப் படையெடுத்து வரத் தூண்டுகின்றனர். பாண்டியனைப் பிசிராந்தையார் தடுக்கிறார். சோழனின் அருமை பெருமைகளைப் பாண்டியன் உணர்கிறான். இருப்பினும் போர் நிகழ்கிறது. தன் மக்களால் இது நேர்ந்தது என்று நொந்து போகும் சோழன் வடக்கிருந்து உயிர்விடத் துணிகிறான். தனக்கு அருகில் பிசிராந்தையாருக்கும் இடம் ஒதுக்கச் சொல்கிறான். பிசிராந்தையாரும் அங்கு வந்து வடக்கிருக்கின்றார். சோழன் பிள்ளைகள் திருந்தி மன்னிப்புக் கேட்கின்றார்கள். மன்னனும் பிசிராந்தையாரும் மடிகின்றனர்.

இந்நாடகத்தில் பழந்தமிழ் மன்னரின் சிறப்பும், புலவர் புரவலர் உறவும், நட்பு என்ற பண்பின் திறமும் உணர்த்தப் பட்டுள்ளன. இந்நாடகத்திற்காகப் பாரதிதாசனுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

தலைமலை கண்ட தேவர்

இது ஒரு கற்பனை நாடகம். தலைமலை கண்ட தேவர், கண்பார்வையற்ற பாவலர். இவர் தம் விருப்பப்படி வாழும் இயல்புள்ளவர். ஒருமுறை பரத்தையின் வீட்டில் திருடச் செல்கிறார். அங்கு கட்டிலின் அடியில் மறைந்திருக்கிறார். பரத்தை, கடவுள் வணக்கம் செய்கையில் பாடல் ஒன்றைப் பாடி முடிக்க இயலாமல் திகைக்கிறாள். பாவலரான தலைமலை கண்ட தேவர் பாட்டை முடிக்கின்றார். பரத்தை தன் காதலையும் செல்வத்தையும் அவருக்குக் கொடுக்கிறாள். அவர் தமிழ்த்தொண்டு செய்ய முடிவெடுத்து அவளையும் தம்முடன் அழைத்துச் செல்கிறார். இந்நாடகத்தில் கவிதைத் திறனும் ஆர்வமும் புலப்படுத்தப் பட்டுள்ளன.

கழைக்கூத்தியின் காதல்

முத்துநகை கழைக்கூத்து ஆடுபவள். அவள் சடையநாத வள்ளலைக் காதலிக்கிறாள். வள்ளல் சாதிப்பற்று மிக்கவர். அவள் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றித் தன்னை மணந்து கொள்ளச் செய்கிறாள். சாமி மறுப்பு இந்நாடகத்தின் மையக் கருத்தாக உள்ளது. அத்துடன் ஏழை செல்வர் என்ற வேறுபாடும் மறுக்கப்படுகிறது. இதுவும் ஒரு கற்பனை நாடகம்.

சௌமியன்

மன்னன் ரவிகேது கொடுமைக்காரன். அவனால் மக்கள் துன்புறுகின்றனர். படைவீரர்களே கொள்ளை, கற்பழிப்பு முதலானவற்றில் ஈடுபடுகின்றனர். வன்முறை நாட்டில் பரவுகிறது. ஆசிரமத் தலைவர் மகள் பத்ராவை அரசகுமாரன் கற்பழித்துவிடுகிறான். ஆசிரமத் தலைவரின் தொண்டன் சௌமியன் அரசகுமாரனை எதிர்க்கிறான். இறுதியில் முடியாட்சி வீழ்த்தப்பட்டுக் குடியாட்சி ஏற்படுத்தப்படுகிறது. இதில் குடியாட்சி வலியுறுத்தப்படுகிறது.

நல்ல தீர்ப்பு

ிறை நாட்டின் படைத்தலைவன் மகள் கிள்ளையும் அமைச்சர் மகள் சாலியும் பீலிநாட்டு ஆடற்பெண் நிலவு என்பவளிடம் நடனம் கற்க விரும்புகின்றனர். பிறைநாட்டு இளவரசி முல்லை கிள்ளையிடம் அன்பு செலுத்துகிறாள். இது சாலிக்குப் பிடிக்கவில்லை. அரசியின் மோதிரம் காணாமற் போனபோது, அதைத் கிள்ளைதான் எடுத்தாள் எனச் சாலி குற்றம் சாட்டுகிறாள். கிள்ளை, பீலி நாட்டில் ஓராண்டு வாழ வேண்டுமெனத் தண்டனை வழங்கப்படுகிறது. கிள்ளை, நிலாவிடம் நடனம் கற்க இது நல்ல வாய்ப்பாக அமைகிறது. இதை உணர்ந்த சாலி தானே திருடியதாக மாற்றிப் பேசுகிறாள். மோதிரம் கிடைத்துவிடுகிறது. இருவருமே திருடவில்லை என்பதையும் அவர்களின் நடன ஆர்வத்தையும் அறிந்த அரசன் அவர்கள் நிலாவிடம் நடனம் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்கிறான். இது கலை ஆர்வத்தைப் புலப்படுத்தும் நாடகமாக உள்ளது.

சத்திமுத்தப் புலவர்

பாண்டிய அரசனும் அரசியும் சோலைக்குச் செல்கின்றனர். பல்வேறு காட்சிகளை ரசிக்கின்றனர். நாரை ஒன்றைப் பார்க்கின்றனர். அதன் தோற்றம் அவர்களைக் கவர்கிறது. அதன் வாய்க்கு உவமை சொல்ல முயல்கின்றனர். அரசி, கத்தரிக் கோலை உவமையாகச் சொல்கிறாள். வறுமையில் சத்திமுத்தப் புலவர் பொருள் பெறுவதற்காக அரசனைத் தேடி அப்போது அங்கு வருகிறார். நாரையொன்றைக் காண்கிறார். உடனே "நாராய்! நாராய்! செங்கால் நாராய்!" என அழைத்து அரசனிடம் தம் நிலையைக் கூறுமாறு பாடுகிறார். அதன் வாயைப் பிளவுபட்ட பனங்கிழங்குடன் ஒப்பிட்டுப் பாடுகிறார். இந்த உவமையை அருகிலிருந்த மன்னனும் கேட்கிறான். மகிழ்கிறான். பரிசு தருகிறான். புலவர் திறனையும் புரவலர் கொடையையும் இலக்கிய ஆர்வத்தையும் விளக்குகிறது இந்நாடகம்.

அம்மைச்சி

கா்சியில் இருக்கும் தமிழ்ப் பெண்ணான அம்மைச்சியை அடையப் பார்ப்பனர்கள் முயல்கின்றனர். தோல்வி அடைகின்றனர். தங்களுக்குக் கிட்டாத அம்மைச்சியின் வீட்டின் மீது தேரைச் செலுத்தி அழிக்கின்றனர். தமிழச்சியான அம்மைச்சியின் வீடு அழிவது கண்டு கவிஞர் வீரராகவ முதலியார் வருந்துகிறார். பார்ப்பனர்களின் கொடுமையை இந்நாடகம் விளக்குகிறது.

ரஸ்புடீன்

இரசிய நாட்டை சார் மன்னன் ஆள்கிறான். மன்னனை ரஸ்புடீன் என்பவன் இயக்குகிறான். லெனின் இதை எதிர்த்துப் போராடுகிறார். புரட்சியை உண்டாக்குகிறார். ரஸ்புடீன் வீழ்ச்சியடைகிறான். இரசிய நாடு விடுதலை அடைகிறது.

இவ்வாறு பாரதிதாசன் பல நாடகங்களைத் தம் கொள்கைகளுக்கு ஏற்பக் கற்பனையாகவும், இலக்கியச் செய்திகளின் அடிப்படையிலும், வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலும் எழுதியிருக்கிறார்.

3.4.2 அறிஞர் அண்ணாவின் நாடகங்கள்

அறிஞர் அண்ணா பெரும்பாலும் சமூகச் சீர்திருத்த நாடகங்களையே எழுதியுள்ளார். சமீன்தார் காலக் கதைகளின் ஊடாக மடங்களின் செயல்பாடுகளையும் சாதி வேறுபாடுகளையும் விமரிசித்துள்ளார். அவர் எழுதிய வரலாற்று நாடகம் சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட ந்து சாம்ராஜ்யம் என்பது.

அறிஞர் அண்ணா

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்

வீரன் சிவாஜி மராட்டிய மண்டலத்தை உருவாக்கி முடிசூடக் கருதியபோது ஆரியர்கள் உண்டாக்கிய குழப்பங்களை இந்நாடகம் எடுத்துக்காட்டுகிறது. ஆரியச் சதிகளால் வீரம் மிக்க சமுதாயம் விழுந்து விட்டதை அண்ணா எடுத்துக்காட்டித் தமிழகத்தை எச்சரிக்கிறார். சந்திரமோகன் என்பவன் சிவாஜியின் துணைவன். ஆரியரின் சூழ்ச்சி குறித்து சிவாஜிக்கு எச்சரிக்கிறான். காகபட்டரின் சூழ்ச்சியால் மராட்டியம் ஆரியருக்கு அடிமையாகிறது. சந்திரமோகன் நாடு கடத்தப்படுகிறான். சிவாஜி உண்மையை உணர்ந்து நண்பனுடன் இணைகிறான். பகுத்தறிவை வலியுறுத்தும் வகையில் சிவாஜியின் இறுதிக் கூற்று அமைகிறது. சந்திரமோகனிடம் அவன், “வீரனே! அஞ்சா நெஞ்சு படைத்த நீ, மக்களிடம் பரவியிருக்கும் மயக்கத்தைப் போக்கு. வாளால் அரசுகளை அமைத்து விடலாம்! ஆனால் அது நிலைக்க அறிவு தேவை! அந்த ஆயுதத்தை வீசு! நாடு முழுவதும் வீசு! பட்டி தொட்டிகளில் எல்லாம் வீசு! மக்களை வீரர்களாக்கு! சந்திரமோகனா, சகலரையும் சந்திரமோகன்களாக்கு! ஜெயம் பெறுவாய்!” என்று கூறுகிறான்.

இந்நாடகம் இயக்க மாநாடுகளிலும், பிற இடங்களிலும் பல முறை நடிக்கப்பட்டது. அறிஞர் அண்ணா, காகபட்டராக நடித்தார். இதில் சிவாஜியாக வேடம் தாங்கிய கணேசன் சிவாஜிகணேசன் என்று அழைக்கப்பட்டார்.

3.4.3 கலைஞர் கருணாநிதியின் நாடகங்கள்

கலைஞர் கருணாநிதி சமூக சீர்திருத்த நாடகங்களை எழுதிப் புகழ் பெற்றவர். இலக்கியக் குறிப்புகளைக் கொண்டு கற்பனையாகவும் வரலாற்று நாடகங்களைப் படைத்துள்ளார். சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ், அனார்கலி முதலான ஓரங்க நாடகங்களையும் படைத்துள்ளார். இவரது மணிமகுடம், இரத்தக் கண்ணீர் முதலான நடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

கலைஞர் கருணாநிதி

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

மணிமகுடம்

இந்நாடகம் மேரிகாரெல்லி என்பவர் எழுதிய டெம்பொரெல்லா என்னும் ஆங்கிலக் கதையைத் தழுவி எழுதப்பட்டது. மணிமகுட புரியில் ஏழைகள் வாழும் பகுதியை அழித்துவிட்டுப் பார்ப்பனர்கள் ஆலோசனைப்படி ஒரு கோயில் கட்டுவது என அரசன் முடிவு செய்கிறான். இதை மக்கள் எதிர்க்கிறார்கள். புரட்சி வெடிக்கிறது. இது ஆரியச் சூழ்ச்சியையும், ஏழைகள் எழுச்சியையும் உணர்த்துகிற நாடகம். கற்பனையான இவ்வரலாற்று நாடகம் எஸ்.எஸ்.ராஜேந்திரன் குழுவினரால் நூற்றுக்கும் மேற்பட்ட முறை நடிக்கப்பட்டது.

இரத்தக் கண்ணீர்

இரத்தக் கண்ணீர் நாடகமும் கற்பனை வரலாற்று நாடகம். சாமியார் ஒருவரின் திருவிளையாடல்களை விளக்குகிறது இந்நாடகம். பழுதூர் இளவரசன் சுகதேவன், முத்தாயி என்ற பெண்ணை விரும்புகிறான். முத்தாயியோ முத்தனை விரும்புகிறாள். முத்தனைப் பழுதூர் இளையராணி விரும்புகிறாள். முத்தாயியும் முத்தனும் காதலிக்கிறார்கள். சுகதேவன் முத்தாயியைக் கவர முயல்கிறான். முத்தனை ஒற்றன் என்று குற்றம் சாட்டிக் கொன்று விடுகிறான். முத்தாயி, தனக்குப் பிறக்கும் மகனைக் கொண்டு பழிவாங்குவேன் என்று சபதம் செய்கிறாள்.

3.4.4 ப.கண்ணனின் நாடகங்கள்

திரைப்பட உரையாடல்களை எழுதியுள்ள ப.கண்ணனின் நாடகங்கள் பகுத்தறிவுச் சிந்தனை கொண்டவை. இவரது வரலாற்று நாடகங்களான நந்திவர்மன், பகைமை வென்றான், பாண்டிய மகுடம் முதலானவை குறிப்பிடத் தக்கன.

நந்திவர்மன்

இந்நாடகம் தேவி நாடக சபையால் நடத்தப் பெற்றது. இது வானொலி நாடகமாகவும் ஒலிபரப்பப்பட்டது. நந்திவர்மனும் பட்டத்தரசி சங்காதேவியும் நல்ல கலைஞர்கள். சங்கா சமண மதம். நந்திவர்மன் சைவ மதம். சாளுக்கிய மன்னன் பங்கயன் பல்லவ நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறான். நந்திவர்மனின் தம்பி சந்திரவர்மன் இதற்குத் துணை செய்கிறான். சங்காவும் நந்தியும் வேறு மதத்தவர்கள் என்ற பிரச்சினையைக் கிளப்புகிறான். அண்ணனை அறம்பாடிக் கொல்ல முயல்கிறான். கலம்பகம் பிறக்கிறது. கலம்பக அரங்கேற்றத்தை ஏற்பாடு செய்து சிதையில் இருந்து பாடலைக் கேட்கிறான். சிதை எரிகிறது. அரசன் இறக்கிறான். நந்தியின் மகன் நிருபதுங்கன் சந்திரவர்மனைக் கொல்கிறான்.

பகைமை வென்றான்

குலோத்துங்க சோழன் காலப் பின்னணியைக் கொண்டு எழுதப்பட்டது இந்நாடகம். இது கலிங்கத்துப்போர் பற்றியது. சோழனுக்கும் இலங்கை மன்னனுக்கும் நடந்த போரையும், இலங்கை அரசனுக்கும் சோழன் மகளுக்கும் இடையிலான காதலையும் மையமாகக் கொண்டது இந்நாடகம்.

பாண்டிய மகுடம்

வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் நிகழ்ந்த அரசுரிமைப் போரை மையமாகக் கொண்டது இந்நாடகம். இருவருக்கும் இடையிலான போட்டியால் பிற நாட்டு ஆதிக்கம் பாண்டிய மண்டலத்தில் ஏற்படுகிறது. மாலிக்கபூர் படையெடுத்து வருகிறான். வேணாட்டரசன் இரவிவர்மன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றுகிறான். வீரபாண்டியன், பாண்டிய நாட்டைப் பாண்டியரே ஆள முயற்சி மேற்கொள்ள வேண்டுமெனச் சுந்தர பாண்டியனிடம் கூறுவதுடன் இந்நாடகம் நிறைவுபெறுகிறது.

3.4.5 ஏ.கே.வேலன் நாடகங்கள்

சாம்பாஜி, கங்கைக்கு அப்பால், காவேரிக் கரையினிலே, பகைவனின் காதலி முதலான வரலாற்று நாடகங்களை இவர் எழுதியிருக்கிறார்.

சாம்பாஜி

மத வெறியும் மாது வெறியும் மாவீரனையும் வீழ்த்திவிடும் தன்மையன என்பதை உணர்த்துகிறது இந்நாடகம். மராட்டிய மன்னன் சிவாஜியின் மகன் சாம்பாஜி. அவன் பெண்பித்து மிக்கவனாக இருக்கிறான். ஒளரங்கசீப் அவனை ஆட்சியிலிருந்து துரத்துகிறான். சிர்கே என்பவன் காட்டிக் கொடுக்க ஒளரங்கசீப் சாம்பாஜியைப் பிடித்து விடுகிறான். சாம்பாஜி ஒளரங்கசீப்பிற்கு முன்னால் தன்னை மாவீரனாகக் காட்டிக் கொள்கிறான். இதைக் கண்டு ஒளரங்கசீப்பின் மகள் அவனைக் காதலிக்கிறாள். சாம்பாஜி இறந்த பின் அவள் விதவை நிலையினை அடைகிறாள். அறிஞர் அண்ணாவின் சந்திரமோகன் நாடகத்தின் தொடர்ச்சியாக இந்நாடகம் அமைந்துள்ளது.

கங்கைக்கு அப்பால்

இராசேந்திர சோழனது வடநாட்டுப் படையெடுப்பின் வெற்றியை விளக்குவது இந்நாடகம். தமிழர்களின் வீரத்தை உணர்த்துவதாக நாடகம் அமைந்துள்ளது. கங்கை கொண்டவனாக இராசேந்திரன் ஆவதைச் சித்திரிக்கிறது இந்நாடகம்.

காவேரிக் கரையினிலே

குலோத்துங்க சோழன் நிகழ்த்திய தலைக்காட்டுப் போரை இந்நாடகம் சித்திரிக்கிறது. காவிரியின் கரையில் உருவான வல்லரசுகளை நினைவூட்டுவது போல நாடகம் அமைந்துள்ளது. கங்கை நாட்டுப் பெண் பைரவி சோழனைப் பழிவாங்க நடனப் பெண்ணாகச் சோழநாடு வருகிறாள். கொல்லிமலையிலுள்ள இருளப்பன் அவளுக்கு உதவுகிறான். அவள் விருப்பப்படி புலிக்கொடியை அறுத்தெறிகிறான். பல திருப்பங்களுக்கு அவன் காரணமாகிறான். இறுதியில் இருளப்பன் வேடத்தில் வந்தவன் குலோத்துங்கன் என்பது வெளிப்படுகிறது. அவன் கன்னரதேவி என்னும் பைரவியை மணக்கிறான்.

பகைவனின் காதலி

கரிகாலன் தன் பகைவன் இருங்கோவேளோடு மோதி அடைகின்ற வெற்றியை இந்நாடகம் புலப்படுத்துகிறது.

3.4.6 சி.பி.சிற்றரசு நாடகங்கள்

வரலாற்று நாயகர்கள் பலரைப் பற்றி நூல்கள் எழுதியுள்ள சி.பி.சிற்றரசு பல வரலாற்று நாடகங்களை எழுதியுள்ளார். இவர் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களைப் படைத்துள்ளார்.

வரலாற்று நாடகங்கள்

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

தங்க விலங்கு

மா்த்தாண்டபுரத்து மன்னன் பார்வை இழக்கிறான். தேனார்ஜி என்னும் ஆரியன் அவனை ஆட்டிப் படைக்கிறான். தேனார்ஜியின் தங்கை தேவிகாவும் இதற்குத் துணை செய்கிறாள். ஆரியர்கள் யாகம், வேதம், சாஸ்திரம் என்பவற்றோடு பெண்களையும் பயன்படுத்தித் தமிழர்களை அடிமைப்படுத்துகிறார்கள் என்று காட்டுகிறது இக்கற்பனை நாடகம்.

இரத்த தடாகம்

இந்நாடகம் பாண்டிய நாட்டில் நின்ற சீர்நெடுமாறன் சமணர்களை அழித்த வரலாற்றைக் கூறுகிறது. சைவநெறி பரப்புவதற்காகத் திருஞானசம்பந்தரும் பாண்டியனும் சதிசெய்து எண்ணாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றியதாக நாடகம் கூறுகிறது.

3.4.7 தில்லை வில்லாளன் நாடகங்கள்

ஆரியரின் வஞ்சம், தமிழர்களின் எழுச்சி முதலானவற்றை மையமாகக் கொண்டு இவர் நாடகங்களைப் படைத்திருக்கிறார். பேசும் ஓவியம், திரை முதலான நாடகங்கள் குறிப்பிடத் தக்கவை.

பேசும் ஓவியம்

மகேந்திரன் என்னும் அரசன் தன் மனைவி மரகதவல்லி என்பவளை நாடுகிறான். இதற்குக் காரணமானவர் குரு கோவிந்தானந்தர். புகழ் பெற்ற ஓவியன் குமணன் குருவை எதிர்க்கிறான். குமணன் ஓவியக் காட்சி நடத்துகிறான். ஓவியங்களின் மூலமே தன் கருத்தைப் பரப்புகிறான். புரட்சி வெடிக்கிறது.

திரை

இந்நாடகம் ராஜா தேசிங்கு பற்றியது. சோதிடர் பைய ராமகிருஷ்ணய்யர், ராஜா தேசிங்கு தன் மனைவியை மூன்று ஆண்டுகள் பார்க்காமல் இருக்க வேண்டும் என்கிறான். பார்த்தால் நாட்டில் பஞ்சம் வரும் என்று அச்சுறுத்துகிறான். போர் மூள்கிறது. போருக்குப் போகும் முன் ராஜா தேசிங்கு மனைவியைப் பார்த்துவிடுகிறான். போரில் தேசிங்கு இறக்கிறான். மனைவி தீக்குளித்து இறக்கிறாள். சோதிடன் தன் பேச்சை மீறியதால் இந்த விளைவு என்கிறான். அரசியின் தோழி சோதிடனின் சோதிடத்தைப் பொய்யெனக் காட்ட விரும்புகிறாள். அவன் தனக்கு நல்ல எதிர்காலமிருப்பதாகச் சொல்ல அவனைத் தீயில் தள்ளிக் கொன்று சோதிடத்தைப் பொய்யாக்குகிறாள். சோதிடம் பொய் என்பதை இந்நாடகம் உணர்த்துகிறது.

3.4.8 பிற நாடகங்கள்

அரங்கண்ணலின் ரஸ்புடீன், கே.ஏ.மதியழகனின் பவளநாட்டு எல்லை, கா.காளிமுத்துவின் மன்னர் திருமலை, கண்ணதாசனின் ராஜ தண்டனை, சீவகங்கை சீமை, தமிழ்க்குடிமகன் எழுதிய செம்பியன் செல்வி, பி.சி.கணேசன் எழுதிய சோமநாதபுரத்துச் சிலை முதலான நடகங்களும் குறிப்பிடத் தக்கவை.

ிராவிட இயக்கத்தவர்கள் கொள்கை விளக்கம், மொழிப்பற்று, அரசியல் பிரச்சாரம், மூடநம்பிக்கை ஒழிப்பு, ஆரிய எதிர்ப்பு முதலானவற்றை வரலாற்று நாடகங்கள் மூலமாகப் பரப்பினார்கள்.

எஸ்.எஸ்.தென்னரசு நாடகம்

எஸ்.எஸ்.தென்னரசு எழுதிய வரலாற்று நாடகம் சந்த மழை என்பது. இது புத்த பெருமானின் வாழ்க்கையை விளக்குகிறது. நாடகம், ஆரியக் கொள்கைகளைத் தாக்குகிறது. பிராமணர்கள் பித்தலாட்டக்காரர்கள் என்று புத்தர் கூறுவதாக நாடகம் அமைந்துள்ளது.

கே.ஜி.இராதாமணாளன் நாடகம்

இவருடைய அரக்கு மாளிகை நாடகம் பிராமணர்களின் சூழ்ச்சி பற்றியது. சாணக்கியன், மௌரிய அரசு நிலைக்கப் பாடுபடுகிறான். ஆரியர்கள் இதை ஒழிக்க நினைக்கின்றனர். மௌரிய அரச வழியில் வந்தவன் பிருகத்ரதன். இவன் ஆரிய ஆதரவாளன். சமண புத்த மதங்களைச் சார்ந்தவர்களின் தலைகளை வெட்ட ஆரியர் பதஞ்சலி கட்டளையிடுகிறார். தனக்கு முழுமையாக ஆதரவளிக்காத பிருகத்ரதனைக் கொல்ல அக்னிமித்திரன் என்பவனைப் பதஞ்சலி ஏவுகிறார். பிருகத்ரதன் கொல்லப்படுகையில் அக்னிமித்திரனிடம் ‘அரசாட்சி என்பது அரக்கு மாளிகை போன்றது. உனக்கும் இந்நிலை வரும்’ என்று எச்சரிக்கிறான்.