4.4 தேசிய நாடகங்கள்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா முதலானவர்களின் விடுதலைப் போராட்ட முயற்சி ஒடுக்கப்பட்டது. இதனால் விடுதலை உணர்வு எழுச்சி பெற்றது. அன்னிபெசன்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் முதலானவற்றைப் பரப்ப நாடகம் தலைப்பட்டது. வீரேசலிங்கம் பந்துலு, பெரியார், வரதராஜுலு, திரு.வி.க. முதலானோரின் காந்தியச் சிந்தனைகள் பரவின. இவையும் நாடகத்தில் வெளிப்பட்டன. ஜாலியன் வாலாபாக் படுகொலை நாடகத்தை அரசியல் மயப்படுத்தியது. சத்தியமூர்த்தி முதலானோர் தேசிய நாடக முயற்சிகளைத் தூண்டினார்கள்.

4.4.1 தேசிய உணர்வு

நாடகங்களில் கிடைத்த பணம் விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தரப்பட்டது. பரந்துபட்ட பாமர மக்கள் தமது நாடகங்களுக்கான பார்வையாளர்கள் என்பதை நடிகர்கள் உணர்ந்தார்கள். அன்றிருந்த ஒரே மக்கள் தொடர்புச் சாதனமான நாடகத்தை விடுதலைப் போராட்டத்திற்குப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்க மாற்றம் எனலாம். நாடகக் கலைஞர்கள் மக்களுக்கு உண்மைகளைச் சொன்னார்கள்; சிக்கல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்று எடுத்துக்காட்டினார்கள். நாடகக் கலைஞர்களுக்கு இருந்த நெஞ்சுரம், தியாக மனப்பான்மை, சமூகப் பொறுப்பு முதலானவை பாராட்டத் தக்கன.

பாடல்கள்

புராணம் வரலாறு சமூகம் என எல்லா நாடகங்களிலும் தேசவிடுதலைப் பாடல்கள் இடம்பெறச் செய்தார்கள். விடுதலை வீரர்கள் பற்றிய பாடல்கள் இடம்பெற்றன. பாரதியார் பாடல்களும் பாடப்பட்டன. மதுரகவி பாஸ்கரதாஸ், உடுமலை முத்துசாமிக் கவிராயர், நாமக்கல் கவிஞர், சுத்தானந்த பாரதியார் முதலானோரின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன. ரவுலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை, ஒத்துழையாமை இயக்கம் என எல்லாமே பாடல் பொருளாயின. கொக்கு விரட்டும் வள்ளி, மானம் காக்க வாதிடும் திரௌபதி, மயானம் காக்கும் அரிச்சந்திரன், நாரதர், பாண்டவர் என எல்லாரும் விடுதலைப் பாடல்களைப் பாடினர். எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ், எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், சி.எம்.கமலம், எஸ்.ஆர்.ஜானகி, எம்.ஆர். கமலவேணி, ஒளவை தி.க.சண்முகம் முதலானோர் விடுதலை இயக்கப் பாடல்களைப் பாடினர். பின்பாட்டுக்காரர்களும் இடைவேளையில் பாடல்களைப் பாடினர்.

தேசியச் சின்னங்கள்

விடுதலைப் போரை அடையாளப் படுத்துகிற சின்னங்களையும் அரசியல் முழக்கங்களையும் நாடகங்களில் பயன்படுத்தினார்கள். காந்தி குல்லாய், சர்க்கா (இராட்டை) கதராடை முதலானவை காட்சிகளில் இடம்பெற்றன. அலிபாதுஷா என்ற வரலாற்று நாடகத்தில் அரசன் அவையில் வீரர்கள் மூவர்ணக் கொடியை நினைவூட்டுவது போல மூன்று வண்ணங்களிலும் உடையணிந்து இருப்பதாகக் காட்டப்பட்டது.

முதல் தேசிய நாடகம்

பண்டித கோபாலாச்சாரியார் எழுதிய ஸ்ரீ ஆர்யசபா (1894) என்பதுதான் முதல் தேசிய நாடகம் எனலாம். காங்கிரசு இயக்கத்தின் நோக்கம், குறிக்கோள், செயற்பாடுகள் முதலானவற்றை மக்களுக்குப் புலப்படுத்துவதற்காக எழுதப்பட்ட நாடகம். இதில் ஐந்து அங்கங்கள் இருந்தன. ஒவ்வோர் அங்கத்திலும் இரண்டு காட்சிகள் இடம் பெற்றன. ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்ற காட்சிகள் இதில் உண்டு. கொள்கை விளக்கம் தவிர இதில் விடுதலை உணர்வு இல்லை. இதில் கதாநாயகி, “அந்நிய ஆடையினால் நாம் வருடம் தோறும் எழுபது கோடி ரூபாய்களுக்கு மேல் வெளிநாட்டவர்களுக்குக் கொடுத்து வருகிறோமென்று தாங்கள் அன்று கடற்கரையில் பிரசங்கம் செய்தது முதல் நான் கதரணியவே விருப்பம் கொண்டேன். அப்பாவின் கோபத்திற்கு அஞ்சியே அணியவில்லை” என்று பேசும் வசனம் கொள்கை விளக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

அரசியல் மயம்

1928 ஆம் ஆண்டில் தமிழ்நாடு நடிகர் சங்கம் உருவாக்கப்பட்டது. அரசியல் நடவடிக்கைகள் முடுக்கப்பட்டன. கள்ளுக்கடை மறியல், உப்புச் சத்தியாகிரகம் முதலான நடவடிக்கைகளும் நாடகக் கலைஞர்களால் மேற்கொள்ளப்பட்டன. நடிகர்கள் கதராடை அணிந்தனர். 1931 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நடிகர்கள் மாநாட்டில் காங்கிரசுக்கு உதவுவது என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு, ராஜாஜி முதலானோர் நடிகர் சங்க அலுவலகம் சென்று நடிகர்களைச் சந்தித்தனர்; நடிகர்களைப் பாராட்டினர். தேச பக்தி (1937) என்ற நாடகத்திற்குக் கு.காமராசு தலைமை தாங்கினார். தேசிய உணர்வுள்ள நாடகங்கள் மிகுதியாக நடத்தப்பட்டன. தேசிய நாடகங்களை எழுதித் தயாரித்து நடத்தியவர்களில் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் குறிப்பிடத் தக்கவர். தேசிய நாடகம் தயாரித்து நடத்தியவருள் குறிப்பிடத் தக்கவர்கள் டி.கே.எஸ். சகோதரர்கள்.

விடுதலைக்குப் பின் தேசிய நாடகங்கள்

நாட்டு விடுதலைக்குப் பின் தேசிய உணர்வு நாடகங்கள் சில எழுதப்பட்டு வெளிவந்தன. சில மேடை நாடகங்களாகவும் நடிக்கப்பட்டன. பால சஞ்சீவி படைத்த தண்ணீர் விட்டோ வளர்த்தோம், ரா.வே.யின் முதல் முழக்கம், தே.ப.பெருமாளின் சுதந்திர தீபம், பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு (காந்தியம்), அருணகிரியின் சேவாசிரமம் (காந்தி, வினோபா கொள்கைகள்), எஸ்.பெருமாளின் தீபம் எரியட்டும் (நாட்டுப்பற்று), சூ.இன்னாசியின் தேசத்தியாகி (நாட்டுணர்வு), அரு.சோமசுந்தரனின் அருள்மணீயம் (நாட்டுப்பற்று) ப.நீலகண்டனின் நாம் இருவர் (தேசிய உணர்வு) முதலான நாடகங்கள் குறிப்பிடத் தக்கன.

4.4.2 தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்

தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் இன்றைய சமாச்சாரம் என்ற நாளிதழை நடத்தி வந்தார். அதன் மூலம் மக்களுக்குச் செய்திகளைப் பரப்பி வந்தார்; காங்கிரசு இயக்கத்தில் செயல்பட்டு வந்தார். சமகாலத் தேசிய நிகழ்ச்சிகளை வெளியிட இதழை விட நாடகம் ஏற்ற ஊடகம் என்று உணர்ந்தார். மக்களிடம் எளிமையாகச் செய்திகளைச் சேர்க்கும் சாதனமாக நாடகத்தை வளர்த்தெடுத்தார். பதிபக்தி என்ற நாடகம் குடியின் கொடுமையை உணர்த்தியது. தேசியக் கொள்கைகளுள் ஒன்றான மதுவிலக்கை விளக்கும் வகையில்-மதுவின் தீமையை உணர்த்தும் வகையில் வசனங்கள் அமைந்தன. வேலைக்காரன் கூற்றாக ‘அவுங்களுக்கு நாளுக்கு நாளு பசியின்றதே பூடுது. அதனாலேதானே நம்ம காந்தி மகாராஜா குடி அடியோட கூடாதுன்னு சொல்றாரு. பாருங்க குடியில பணம் மாத்தரமா போவுது! அறிவு கெட்டுப் போவுது. உடம்பு மெலிஞ்சு போவுது. கடைசியிலே உயிருக்கே ஒலையும் வச்சிடுது. பாவம் ! இந்தப் பாழாப்போன குடியால எத்தனை குடும்பம் அழிஞ்சது! அழியுது” என்று குடியின் தீமை உணர்த்தப்படுகிறது.

பாலாம்பாள் நாடகம் காந்தியக் கொள்கைகளை வெளியிட்டது. கவர்னர்ஸ் கப் நாடகம் சூதாட்டமான குதிரைப் பந்தயத்தின் தீமையை உணர்த்தியது. கதரின் வெற்றி, தேசியக்கொடி முதலான நாடகங்களில் நேரடியாகத் தேசிய இயக்கக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டன. இவ்விரு நாடகங்களும் லண்டன் நகரில் நடத்தப்பட்டன. தேசியக் கொடி நாடகம் நாகபுரியில் நிகழ்ந்த போராட்டத்தைப் புலப்படுத்தியது. நாகபுரியில் ஆங்கிலேயர்கள் வாழ்ந்த தெருவில் தேசியக் கொடியைப் பறக்கவிடக் கூடாது என்று காவலர்கள் தடை செய்தனர். தேசியத் தொண்டர்கள் தேசியக் கொடியுடன் நாள்தோறும் அந்தத் தெருவில் செல்வதைப் போராட்டமாக்கினர். எண்ணற்ற தொண்டர்கள் இப்போராட்டத்தில் சிறை சென்றனர். இந்த அடிப்படையில்தான் தேசியக்கொடி நாடகம் உருவாக்கப் பட்டது.

பிறர்

பாவலரின் தேசபக்தி, பதிபக்தி, கதரின் வெற்றி முதலான நாடகங்களை டி.கே.எஸ். குழுவினரும் நடத்தினார்கள். நாடகப் பார்வையாளர்கள் நாடகம் முடிந்து செல்கையில் ஒரு செய்தியுடன் அல்லது உணர்வுடன் செல்ல வேண்டும் என்பதில் ஒளவை தி.க.சண்முகம் அழுத்தமான ஆசை கொண்டிருந்தார். அவர் நடத்திய தேசபக்தர் சிதம்பரனார், அந்தமான் கைதி முதலான நாடகங்களும் குறிப்பிடத் தக்கவை.

எஸ்.டி.சுந்தரம் படைத்த வீர சுதந்திரம் என்ற நாடகம் விடுதலை வீரர்களின் வாழ்வைச் சித்திரித்தது. வாஞ்சி நாதன், லஜபதி ராய், பகத்சிங், குமரன் முதலானோரின் எழுச்சி மிக்க வாழ்வைச் சித்திரித்தது. கோவை அய்யாமுத்து எழுதிய இன்பசாகரன் நாடகம் தொடர்ச்சியாக ஆறு மாதக் காலம் நவாப் ராஜமாணிக்கம் குழுவினரால் நடத்தப்பட்டது.


தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.

காசி விசுவநாத முதலியார் எழுதிய நாடகத்தின் பெயர் என்ன?

விடை

2.

ஜே.ஆர்.ரங்கராஜுவின் நாவல்களில் எவையெவை நாடகமாக்கப் பட்டன?

விடை

3.

முதல் தேசிய நாடகம் எது?

விடை

4.

பம்மல் சம்பந்தனாரின் நாடகக் குழுவின் பெயர் என்ன?

விடை

5.

கதரின் பக்தி நாடகத்தை எழுதியவர் யார்?

விடை