4.7 நவீன நாடகங்கள் |
தொடக்கம், உச்சம், வீழ்ச்சி, முடிவு என்பதான நேர்கோட்டு வடிவத்தை மீறிய அமைப்புடைய நாடகங்கள் அறுபதுகளின் இறுதியிலும் எழுபதுகளிலும் உருவாயின. நாடகங்களின் உள்ளடக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டது. மேலை நாட்டில் வேர்கொண்ட நகர்சார் நாடகக் கலைக்கும் இம்மண்ணில் வேர்கொண்ட நாட்டுப்புற நாடக மரபுகளுக்கும் இணைப்பு ஏற்பட்டது. சமூக அரசியல் காரணங்களாலும் தத்துவார்த்தத் தேடல்களாலும் படைப்பாளன் மனநிலையில் ஏற்படும் கலகத் தன்மை சோதனை நாடகங்களான நவீன நாடகங்களைத் தோற்றுவித்தது எனலாம். |
வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்கார் மூலம் இங்கு அறிமுகமான சோதனை நாடக முயற்சிக்கு மூன்றாம் அரங்கு என்று பெயர். உடனடி விளைவுகளை மனத்தில் கொண்ட இச்சிறு நாடகங்கள் வீதி நாடகங்களாக நடத்தப்பட்டன. கூத்துப்பட்டறை, வீதி நாடக இயக்கம், நிஜ நாடக இயக்கம், பரிக்ஷா, அரூபம், தேடல், அரங்கம், ஆடுகளம், சென்னைக் கலைக்குழு, மௌனக்குரல், சென்னைப் பல்கலை அரங்கம் முதலான பல இயக்கங்கள் உருவாயின. |
|
ஒப்பனை, மேடையமைப்பு, நடிப்பு முறை, காட்சி அமைப்பு, வசனங்கள் என அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டது. பார்வையாளர்கள் தாங்கள் நாடகத்தைப் பார்க்கிறோம் என்று உணரும் வகையில் நாடக நிகழ்வு அமைந்தது. பெரும்பாலும் குறியீடுகளாலும் உருவகத் தன்மையாலும் கருத்துகள் புலப்படுத்தப்பட்டன. |
|
மனித வாழ்க்கையிலுள்ள அபத்தங்களை வெளிக்கொணர்தல், சமகாலப் பிரச்சினைகளை அலசுதல்,அரசியல் சமுதாயச் சீர்கேடுகளை எடுத்துக்காட்டுதல், தனிமனித, சமுதாயப் போராட்டங்களின் உரிமையைப் புலப்படுத்துதல், பழைய புராணங்கள், இதிகாசங்கள், வரலாறு முதலானவற்றில் உள்ள நிகழ்ச்சிகளைச் சமகாலப் பிரச்சினைகளோடு ஒப்பிடுதல், அவற்றை மறுஆய்வு செய்தல், உருவாக்கி வைத்திருக்கும் கலாச்சார மதிப்புகளையும் வாழ்க்கை மதிப்புகளையும் கேள்விக்குள்ளாக்குதல் என உள்ளடக்கங்கள் அமைந்தன. இன்றைய வாழ்வில் துன்பங்களையும் சிக்கல்களையும் கவனியாமல் விட்டுவிலகிச் செல்லும் கதைப்பொருள் என்பது இந்த நாடகங்களில் இல்லை. |
|
சுற்றுச்சூழல் (கூத்துப்பட்டறை) என்னும் நாடகம் நகர மக்கள் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் படும் அவதியைக் காட்டுகிறது. மாநகரம் (சென்னைக் கலைக்குழு) சென்னை வாழ்க்கையின் சீர்கேடுகளை நிகழ்ச்சிகளாகத் தந்தது. விவசாயத் தொழிலில் ஏற்படும் பிரச்சினைகளைச் சொல்வது ஜேம்ஸ்பாண்ட் நாடகம். |
|
கணிகை ஒருத்தியின் கதையாக அமைந்து ஆணினத்தின் கொடுமைகளைப் புலப்படுத்துவது போர்வை போர்த்திய உடல்கள் நாடகம். காவல் நிலையத்திலேயே பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளான நிகழ்வைக் கூறுவது கண்ணகி நாடகம். உளவியல் அடிப்படையில் வாழ்க்கைச் சிக்கலை அணுகி நிர்மலா என்னும் பெண்ணின் வாழ்க்கைச் சிக்கலை உணர்த்துவது மழை. |
|
பெரிய இடத்தில் இருப்பவர்களின் அட்டூழியத்தையும், ரவுடிகளாக இருப்பவர்களின் அக்கிரமங்களையும், இவற்றுக்கிடையே பாமரர் படும் துன்பத்தையும் காட்டுவது ஞாநியின் முட்டை நாடகம். கீழ வெண்மணியில் தலித் விவசாயிகள் எரிக்கப்பட்ட நிகழ்வைக் காட்டுவது நியாயங்கள். |
|
சுவரொட்டிகள் உண்மைகளை உணர்த்துவதற்கு மாறாக உள்ளத்தைக் குழப்பும் வாசகங்களைக் கொண்டிருக்கின்றன எனக் காட்டுவது சுவரொட்டிகள் நாடகம். மனத்தின் அழகை மதிக்காமல் உருவ அழகை ரசிக்கும் மனிதர்களைக் கேலிசெய்கிறது ஆஸ்தான மூடர்கள் நாடகம். |
|
பல குழுக்களாக இருந்து மக்கள் நலனில் சிறிதும் அக்கறை கொள்ளாமல் தமக்குள் தாமே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு, அரசியலை ஒரு பொழுதுபோக்காக்கி அவரவர் வெற்றி தோல்விகளைக் குறிக்கோளாகக் கொண்டு அப்பாவிப் பொதுமக்களை வாக்களிக்கச் சொல்லி அவர்களைப் பலிகடா ஆக்கும் அரசியல்வாதிகளின் இயல்புகளைச் சுட்டுவது நாற்காலிக்காரர் நாடகம். தகுதியான தலைவனைத் தேடுதல் பற்றியது வெத்துவேட்டு. பஸ்கட்டண உயர்வை எதிர்த்து மக்கள் எழுச்சியோடு நடத்திய ஒரு போராட்டத்தைத் தனது மையமாகக் கொண்டது பலூன். பாராளுமன்ற ஜனநாயகத்தின் குறைகளை வெளிச்சமிட்டுக் காட்டுவது கபடி மேட்ச் நாடகம். அவசரநிலைப் பிரகடனத்தை விமர்சனம் செய்தது என் பிரியத்துக்குரிய நாடகம். |
|
வயிறு, பயங்கள், காலம் காலமாக, மூர்மார்க்கெட், ஸ்ரீமான் பொதுஜனம், பலியாடுகள், சத்திய சோதனை, மூடிய அறை, பல்லக்குத் தூக்கிகள், வெளிச்சம், நீ ஆண் நீ பெண், மனுஷா மனுஷா, நற்றுணையப்பன், வெறியாட்டம், மிருகம், தீனிப் போர், நாங்கள் நியாயவாதிகள் முதலானவை நவீன நாடகங்களில் குறிப்பிடத் தக்கவை. |
|
நாட்டு விடுதலைக்குப்பின் இருபதாண்டுகளாக நல்வாழ்வு ஏற்படாத சூழலில் இளைஞர்களின் மனக்குமுறல்களை வெளியிட நவீன நாடகங்கள் பயன்பட்டன. வேலையில்லாத் திண்டாட்டம், பசிக்கொடுமை, பாலியல் வன்முறை, ஊழல்கள், சாராயக் கொடுமை, பதவி ஆசைச் சண்டைகள், போலித்தனம், சாதிமதச் சண்டைகள், எல்லைப் பிரச்சினைகள், மொழிச் சிக்கல்கள், வன்முறை வெறியாட்டம் முதலான சீர்கேடுகளுக்கு எதிரான மனப்போக்கை உருவாக்க இவை உதவின. |