5.0 பாட முன்னுரை

நாடகம் என்ற இலக்கிய வடிவம் முதலில் நடிப்பதற்காக உருவாக்கப்பட்டது. பின் படிப்பதற்கான நாடகங்கள் எழுதப்பட்டன. வானொலி தொடங்கப்பட்ட பிறகு கேட்கும் நாடகங்கள் உருவாயின. படித்தவர் பாமரர்கள் என எல்லாருமே வீட்டிலிருந்தபடியோ, இருக்குமிடத்திலிருந்தோ சுவைக்கக் கூடிய ஓர் இலக்கிய வடிவம் வானொலி நாடகம். தமிழ்நாட்டில் மட்டுமின்றி டில்லி, திருவனந்தபுரம் போன்ற நகரங்களிலிருந்தும் ஈழம், மலேசியா முதலான நாடுகளிலிருந்தும் வானொலி நாடகங்கள் ஒலிபரப்பப்படுகின்றன. மக்களுக்குத் தேவையான கருத்துகள், பண்பாட்டுச் செய்திகள், அரசின் முன்னேற்றத் திட்டங்கள் முதலானவற்றைச் சொல்கிற எளிய வடிவமாக வானொலி நாடகம் விளங்குகின்றது. இத்தகைய வானொலி நாடகம் பற்றிய செய்திகளை விளக்குவதாக இப்பாடப் பகுதி அமைந்துள்ளது.