5.3 நாடக நெறிமுறைகள்

வானொலி நாடக நிகழ்ச்சிகள் அனைத்திற்குமே சில குறிக்கோள்கள் உள்ளன. மக்களுக்குத் தேவையான செய்திகளை எடுத்துரைத்தல் (Information), கல்வியளித்தல் (Education), களிப்பூட்டுதல் (Entertainment) என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டே நிகழ்ச்சிகள் தயாரிக்கப் படுகின்றன.

கூறத் தக்கன

நல்லவையும் தீயவையும் கலந்து நிறைந்திருக்கும் சூழலில் நல்லனவற்றை அழுத்தமாக வானொலி நாடகம் காட்டுகிறது; மாறிவரும் சமூக மதிப்பீடுகளையும் மக்களுக்கு உணர்த்துகிறது.

கூறத் தகாதன

குறிப்பிட்ட இனத்தவரையோ சமயத்தவரையோ புண்படுத்தும் கருத்துகள் வானொலி நாடகத்தில் இடம் பெறுவதில்லை; சட்டங்கள், நீதிமன்றங்கள், மக்களின் பழக்க வழக்கங்கள் முதலானவற்றைக் கேலி செய்வதில்லை; கீழ்த்தரமான உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை; வன்முறையையும் பாலுணர்ச்சியையும் தூண்டுவதில்லை; கண்ணியக் குறைவான சொற்களுக்கு இடமளிப்பது இல்லை; பெண்களை இழிவுபடுத்துவது, ஊனமுற்றோரை இழிவுபடுத்துவது போன்ற செய்திகளை இடம்பெறச் செய்வது இல்லை.