6.2 தொலைக்காட்சி நாடகங்களும் பிற ஊடகங்களும்

தொலைக்காட்சி நாடகம் பொது அரங்கில் பார்க்கப்படுவதில்லை. இது வீட்டில் இருந்தபடியே பார்க்கக் கூடியதாக இருக்கிறது. எனவே இதை ‘வீட்டுத் தொடர்புச் சாதனம்’ எனலாம். வானொலி நாடகம், மேடை நாடகம், திரைப்படம் முதலானவற்றிலிருந்து தொலைக்காட்சி நாடகம் வேறுபடுகிறது.

6.2.1 வானொலி நாடகமும் தொலைக்காட்சி நாடகமும்

வானொலியும் தொலைக்காட்சியும் மின்னியல் முறையில் நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. வானொலி நாடகம் உரையாடல்களையும் இசையையும் ஒலிகளையும் கொண்டு இயங்கும் ‘கேட்கும்’ (Audio) ஊடகமாக இருக்கிறது. தொலைக்காட்சி நாடகம் காட்சிகளையும் உரையாடலையும் பிற ஒலிகளையும் கொண்டு இயங்கும் ‘காணும் கேட்கும்’ (Audio visual) ஊடகமாக இருக்கிறது. வானொலி நாடகத்தில் நடிகர்கள் உரையாடலைப் பார்த்துப் படிப்பதன் மூலம் குரலால் நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். தொலைக்காட்சி நாடகத்தில் தொடக்கத்தில் உரையாடல்களை மனப்பாடம் செய்து பேசி நடித்தார்கள். ஒலிப்பதிவு (Dubbing) வசதி வந்த பின்பு ஓரளவு உரையாடலைத் தெரிந்து பேசி நடிக்கிறார்கள். பின் நடிகர்களே பேசி ஒலிப்பதிவு செய்கிறார்கள். அல்லது இரவல் குரல்களைப் பயன்படுத்தி ஒலிப்பதிவு செய்கிறார்கள். வானொலி நாடகத் தயாரிப்பு, தயாரிப்பாளர் ஒருவர் கையில் உள்ளது. தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பில் பலரது உதவியும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன.

6.2.2 மேடை நாடகமும் தொலைக்காட்சி நாடகமும்

மேடை நாடகம் நகர்ப்புறங்களிலும் கிராமங்களிலும் மேடை அமைத்து நடத்தப்படுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், சமுதாய மன்றங்கள், பொழுதுபோக்கு மன்றங்கள்(சபா) முதலான இடங்களில் அது நடத்தப்படுகின்றது. வண்ணத் திரைச்சீலைகள், ஒலிவாங்கி வசதிகள், ஒளி வசதிகள் ஆகியவற்றுடன் நடத்தப்படுகின்றது. மேடை நாடக நடிகர்கள் வசனங்களை முழுமையாக மனப்பாடம்செய்து அவர்களே பேசுகிறார்கள். ஓரங்க நாடகமாயினும் முழு நாடகமாயினும் மக்கள் முன்னிலையில் மேடை நாடகம் நடத்தப்படுகிறது. சுவைஞர்கள் நேரில் நாடகத்தைப் பார்க்கிறார்கள்; தாங்கள் அமர்ந்த இடத்திலிருந்து தெரிகிற ஒரே கோணத்தில் பார்க்கிறார்கள். கூட்டத்துடன் அமர்ந்து கூட்ட உணர்வோடு பார்க்கிறார்கள்.

தொலைக்காட்சி நாடகத்தைச் சுவைஞர்கள் தொலைவிலிருந்து (அதாவது நாடகம் பதிவு செய்யும் இடத்திற்குத் தொலைவிலிருந்து) பார்க்கிறார்கள். தொலைக்காட்சி நிலையத்திலிருந்து வரும் ஒளிச் சைகைகளைத் தொலைக்காட்சிப் பெட்டியின் வழியாகப் பார்க்கிறார்கள். தனியாகவோ, குடும்பத்தினரோடோ பார்க்கிறார்கள். உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ, படுத்துக் கொண்டோ பார்க்கிறார்கள். சாப்பிடுதல், சமையல் செய்தல் முதலான வேறு வேலைகளைச் செய்துகொண்டும் பார்க்கிறார்கள். அண்மை, சேய்மைக் காட்சிகளால் பல அளவுகளிலும் கோணங்களிலும் நாடகப் பாத்திரங்களையும் காட்சிகளையும் பார்க்கிறார்கள். மேடை நாடகத்தில் பார்க்க முடியாத பல காட்சிகளைப் (விமானம், கப்பல், மலை, நெருப்பு, ஆறு) பார்க்கிறார்கள்.

6.2.3 திரைப்படமும் தொலைக்காட்சி நாடகமும்

தொலைக்காட்சியும் திரைப்படமும் கண்ணுக்கும் காதிற்கும் உரியவை; இரண்டிலும் தொழில் நுட்ப வல்லுநர்களின் ஒத்துழைப்புத் தேவைப்படுகிறது. தொலைக்காட்சிப் பெட்டியின் திரையமைப்பின் உயர அகலம் 3 : 4 என்ற அளவில் உள்ளது. திரைப்படத்தின் திரை பெரியது. தொலைக்காட்சித் திரை சிறியது என்பதால் அதற்குச் ‘சின்னத்திரை’ என்று பெயரிட்டுள்ளார்கள். பிம்ப வெளிப்பாட்டில் திரைப்படமும் தொலைக்காட்சியும் ஒத்தவை. ஆனால் உருவாக்கம், ஒளிபரப்பு முறை முதலானவற்றில் இரண்டும் வேறுபடுகின்றன. அரங்கம், கதாபாத்திர உருவாக்கம், உரையாடல் ஆகியவற்றிலும் வேறுபடுகின்றன.