6.3 தனித்தன்மை |
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பணக்காரர் முதல் ஏழைகள் வரை வேறுபாடின்றி ரசிக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டு தொலைக்காட்சி நாடகங்கள் அமைகின்றன. பெரும்பாலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் கூட நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் சக்திக்கு ஏற்பவே தயாரிக்கப்படுகின்றன. இதனால் நிகழ்ச்சிகளின் தன்மைகள் நடுத்தர வர்க்கத்தினரை ஈர்க்கும் வகையில் அமைகின்றன. நாடகக் காட்சிகளில் இடம்பெறும் அரங்குகள், உடை, ஒப்பனை, முகபாவம், குரல் ஏற்ற இறக்கம் என எல்லாமே நடுத்தர வர்க்கத் தன்மையின் அடிப்படையில் உருவாக்கப் படுகின்றன. தொலைக்காட்சி நாடகங்களின் இத்தகைய தனித்தன்மைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. |
தொலைக்காட்சி நாடகங்கள், வானொலி நாடகங்கள் போன்றே தொடர்ச்சியாக நுகரப்பட வேண்டியவை. புத்தகத்தில் நாடகத்தைப் படிக்கின்றபோது புரியாத இடங்களைத் திரும்பப் படிப்பது போன்று தொலைக்காட்சி நாடகத்தைத் திரும்பப் பார்க்க முடியாது. புத்தகத்தில் முக்கியமான நிகழ்ச்சிகளைப் படிக்கும்போது அவற்றைப் பற்றி மனத்திற்குள்ளேயே அலசி ஆராய்ந்துவிட்டுப் பின்னர்த் தொடர்ந்து படிப்பது போலத் தொலைக்காட்சி நாடகத்தை விட்டு விட்டுப் பார்க்க முடியாது. ஆதலால் அதற்கேற்ற வகையில் நாடகங்களின் காட்சிகளும் உரையாடல்களும் சிக்கலின்றி எளிமையாக அமைக்கப்படுகின்றன. தொடர் நாடகங்கள் ஒவ்வொரு நாளும், முந்தைய நாள் நிகழ்வை நினைவூட்டும் வகையில் முந்தைய நாளின் இறுதிக் காட்சித் துணுக்குகளுடன் தொடங்குவது உண்டு. |
|
மக்களின் வாங்கும் சக்திக்கு ஏற்ற தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. பணச் செலவு மிக்க தொழில் நுட்பங்களைக் கொண்ட பெட்டிகளைத் தயாரிக்க முடிவதில்லை. இதனால் பொருள் செலவு செய்து பெரிய அளவில் காட்சி அமைப்புகளுடன் தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்து வழங்குவது சாத்தியமில்லை. தொலைக்காட்சிப் பெட்டியில் தெரியக்கூடிய வகையிலான கதை அம்சங்கள், காட்சி அம்சங்கள் மட்டுமே இடம்பெற முடியும். |
தொலைக்காட்சியில் இடம்பெறும் தனி நாடகங்கள், திரைப்படங்களைப் போல ஒரு கருவை மையமாகக் கொண்டு அமைபவை. தொலைக்காட்சித் தொடர் நாடகக் கதை திரைப்படத்தின் கதையைப் போல ஒரே செய்தியை மையமிட்டு அமைவது இல்லை. தொலைக்காட்சி நாடகங்களில் கிளைக்கதைகள் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன. கதைக்குள் கதை, இன்னொரு கதை என்று கதை விரிகிறது. |
தொலைக்காட்சி குடும்பப் பொழுதுபோக்குச் சாதனம் என்பதால் மக்களுக்குப் பிடித்தமான குடும்பக் கதைகளே இடம் பெற வேண்டியுள்ளது. நுகர்வோரின் மதிப்பீடுகள், இலட்சியங்கள், சிக்கல்கள், நிலைமைகள் முதலானவையே கதைகளில் இடம் பெறுகின்றன. திருமணச் சிக்கல்கள், காதல் சிக்கல்கள், குடும்ப உறவில் சிக்கல்கள், வேலைப் பிரச்சனைகள் போன்றவையே இடம் பெறுகின்றன. |
ஒளிபரப்பிற்கான கால அவகாசத்தையும் ஒதுக்கீட்டையும் பொறுத்துக் கதையை நீட்டுவதும் குறுக்குவதும் உண்டு. இதனாலும் கதையின் தன்மை பாதிக்கப் படுகிறது. தொலைக்காட்சி நடிகர்களின் நிலைமைகளைப் பொறுத்தும் கதை மாறுபடுகிறது. தொடரின் இடையில் ஒரு பாத்திரத்தில் ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் நடிக்க வைக்கப்படும்போதும் இத்தகைய மாற்றம் நேர்கிறது. |
பேச்சுக்கு முக்கியத்துவம் தருவதால் கதையில் சிக்கலுக்குமேல் சிக்கலாக உருவாக்குகிறார்கள். தீர்வு வரும்போல இருக்கும் நேரத்திலும் புதிய சிக்கல் ஒன்றை உருவாக்கிக் கதையை நீட்டுவார்கள்; விவாதத்தை வளர்ப்பார்கள். சில தொடர்களில், பேசியதையே வேறு வேறு சொற்களில் பேசுவதையும் காண முடிகிறது. |
|
தொலைக்காட்சித் தொடர்கள் பல அலைவரிசைகளில் ஒளிபரப்பாகின்றன. ஒருதொடர் பார்வையாளர்களைப் பிணித்து வைக்காவிட்டால் வேறு அலைவரிசைக்கு மாறிவிடுகிறார்கள். மேடை நாடகம், திரைப்படம் பிடிக்காதவர்கள் அரங்கை விட்டு வேறு அரங்கிற்குச் செல்ல முடியாது. ஆனால் அலைவரிசையில் இது சாத்தியமானது. எனவே தங்கள் அலைவரிசையைப் பார்வையாளர் மாற்றாமலிருக்க, பரிசுத் திட்டங்களால் ஈர்க்கிறார்கள். நேரத்தை மாற்றுகிறார்கள். கதையை மாற்றுகிறார்கள். நடிகர்களை மாற்றுகிறார்கள். இயக்குநர்களை மாற்றுகிறார்கள். மக்களைப் பிடித்து வைக்கிறார்கள். |
தொலைக்காட்சி நாடகம் திரைப்படத்தை விட மிக அதிகமாக அண்மைக் காட்சிகளைக் (Close-up shots)கொண்டிருக்கிறது. சிறிய திரையில் நடிகர்களின் முகபாவங்கள் தெளிவாகத் தெரிவதற்காகவே இந்த உத்தி. பேச்சு, முகபாவம் முதலானவற்றுக்கே தொலைக்காட்சித் தொடரில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் பின்னணிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. |
|
தொலைக்காட்சியின் பிம்பங்கள் சிறியவை அல்லது எளியவை. வீட்டில் குடும்பத்தாருடன் பார்த்து மகிழ்வதால் அந்த பிம்பங்களுடன் நமக்கு நெருக்கம் ஏற்படுகிறது. தொலைக்காட்சி நாடகங்களில் வரும் பாத்திரங்களை நாம் நம் குடும்ப உறுப்பினர்களாகக் கருதத் தொடங்குகிறோம். இன்ன கிழமையில் இன்ன நேரத்தில் இன்ன தொடர் வரும் என்ற எதிர்பார்ப்பு வளர்க்கப்படுகிறது. இந்த நெருக்கத்தை உருவாக்கும் வகையில்தான் எல்லாரும் வீட்டில் இருக்கும் நேரங்களில் தொலைக்காட்சி நாடகங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. |
தொலைக்காட்சி நாடகத்தின் தொடர்த் தன்மை காரணமாக ஒவ்வொரு தொடரிலும் (episode) உச்சக் கட்டத்தை உருவாக்குகிறார்கள். இதனால் தேவையின்றியே உறவுகளிலும் விவாதங்களிலும் சூழல்களிலும் திருகல்களை ஏற்படுத்தி உச்சத்தை வரவழைக்கின்றனர். தொடர் முடியும் நேரத்தில் யாரோ திடீரென நுழைதல், தாக்க வருதல், யாராவது கீழே விழுதல், வாகனம் மோத வருதல், புதிய சிக்கல் ஒன்று உருவாதல் என்ற உச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். தொடர் கதைகளில் இத்தகைய தன்மை உள்ளதை நாம் அறிவோம். அதுபோன்று பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டித் தொடரைத் தொடர்ந்து பார்க்கச் செய்கிறார்கள். |
திரைப்படத்தில் உள்ளது போலப் பாத்திரங்கள் ஆடுவதும் பாடுவதும் தொலைக்காட்சி நாடகங்களில் இடம்பெறுவதில்லை. ஆயினும் தலைப்பு (Title) போடுமிடத்தில் பாடலையும் ஆடலையும் இடம்பெறச் செய்கிறார்கள். பெரிய அளவில் சண்டைக் காட்சிகளும் இடம்பெறுவதில்லை. நகைச்சுவைக்கெனத் தனியான பாத்திரங்கள் இல்லை. கதையே நகைச்சுவையாக இருப்பதுண்டு. திரைப்படத்தில் உள்ளது போல ஆபாசக் காட்சிகளும் கதாநாயகன் கதாநாயகி முதலானோரின் நெருக்கக் காட்சிகளும் இடம் பெறுவதில்லை. ஆனால் அழுகைக் காட்சிகளையும் சாவுக் காட்சிகளையும் மிகுதியாகத் தந்து பார்வையாளர்களின் உணர்வைப் பாதிக்கச் செய்கின்றனர். மேடை நாடகக் காட்சி நேரத்தைவிடத் தொலை நாடகக் காட்சி நேரம் குறைவாகவும், விரைவாகவும், மாறிமாறியும் அமைகிறது. திரைப்படக் காட்சிகள் போலத் தொலைக்காட்சி நாடகக் காட்சிகள் ஒரே ஓட்டமாக ஓடுவதும் இல்லை. |
1. |
இந்தியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்ட நகரம் எது? |
விடை |
2. |
தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் இரண்டின் பெயர்களைச் சுட்டுக. |
விடை |
3. |
தொலைக்காட்சிக்குச் ‘சின்னத்திரை’ என்ற பெயர் ஏன் ஏற்பட்டது? |
விடை |
4. |
தொலைக்காட்சி நாடகத்திற்கும் வானொலி நாடகத்திற்கும் இடையேயான முக்கிய வேறுபாட்டை எடுத்துக்காட்டுக. |
விடை |
5. |
தொலைக்காட்சி நாடகங்களில் உச்சக் கட்டங்கள் நிறைய வருவதன் காரணம் என்ன? |
விடை |