6.4 தயாரிப்பு |
தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பு பல நிலைகளைக் கொண்டது. நாடகக் கதை அல்லது கரு, திரைக்கதை, உரையாடல், நடிகர்கள், அரங்கம், ஒப்பனை, வரைகலை, ஆடை அணிகள், ஒளியமைப்பு, ஒலியமைப்பு, படப்பிடிப்பு, வெளிப்புறப் படப்பிடிப்பு, இயக்கம் எனப் பலவற்றின் ஒருங்கிணைப்புத் தேவைப்படுகிறது. தொலைக்காட்சி நாடகம் ஒரு கூட்டு முயற்சி. எழுத்தாளர், இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஒலிப்பதிவாளர், தொகுப்பாளர், அரங்கப் பொறுப்பாளர், ஒப்பனைக்காரர், பிற தொழில்நுட்ப ஊழியர்கள் என அனைவரின் பணியையும் தயாரிப்பாளர் ஒருங்கிணைக்கிறார். |
நாடகத் தயாரிப்பு நிலையில் தூர்தர்ஷனுக்கும் தனியார் தொலைக்காட்சிக்கும் வேறுபாடு உள்ளது. அரசுசார் தொலைக்காட்சியில் நாடகத் தயாரிப்பாளர்கள் தாங்கள் ஒளிபரப்பக் கருதும் நாடகக் கதை அல்லது கருவைத் தீர்மானிக்கிறார்கள். எழுத்தாளர்களைக் கொண்டு நாடகம் எழுதச் செய்து அதைத் தயாரிக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் சமூக உணர்வைத் தூண்டும் நாடகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சிகள் தயாரிக்கப்பட்ட தொடர்களை வாங்கி ஒளிபரப்புவதால் இந்தச் சிக்கல் இல்லை. இவர்கள் பெரும்பாலும் குடும்பக் கதைகளையே தேர்ந்தெடுக்கிறார்கள். அவையும் பெரும்பாலும் பெண்களை மையமாகக் கொண்டு, அவர்களின் பிரச்சினைகளைச் சற்று மிகை உணர்ச்சிப் போக்கில் காட்டுவன. அண்மைக்காலத்தில் அரசு தொலைக்காட்சியிலும் தயாரிக்கப்பட்ட தொடர்களை வாங்கி ஒளிபரப்புகிறார்கள். |
|
அரசுசார் தொலைக்காட்சியில் கதையைத் தேர்ந்தெடுக்கும்போது அரங்கிலேயே தயாரிக்கும் அமைப்புடைய கதைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். வெளிநாட்டில் படம்பிடிப்பதாகவோ, செலவு மிகுந்த அரங்க அமைப்பில் படம்பிடிப்பதாகவோ இருப்பின் தவிர்ப்பார்கள். நாடகப் பாத்திரங்களின் எண்ணிக்கையும் அளவாக இருக்க வேண்டும். எந்தத் தனி நபரையும் சமூகத்தையும் தாக்குவதாகக் கதை இருக்கக் கூடாது. தனியார் தயாரிப்புகளை வாங்கும் போதும் அரசு கொள்கைகளுக்கு முரண்படாத தொடர்களையே வாங்குகிறார்கள். |
அரசுசார் தொலைக்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடகப் பிரதியை நடிகர்களுக்குக் கொடுத்து மனப்பாடம் செய்யக் கால அவகாசம் தருவார்கள். பின்னர் நாடக ஒத்திகை நடைபெறும். அதன்பின் ஒளிபரப்பு நாட்களை முடிவு செய்வார்கள். அரங்கத்தை நிர்மாணிப்பார்கள். தொழில்நுட்ப இயக்குநர், ஒலியமைப்புப் பொறியாளர், அரங்க வடிவமைப்பாளர், அரங்க மேலாளர், ஒப்பனையாளர், வரைகலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் முதலானோருடன் கலந்து பேசித் தயாரிப்பாளர் தேவைகளை இறுதிப்படுத்துவார். நாடகப் பதிவின் போது தயாரிப்பாளர் பொறுப்பேற்றுப் பதிவைத் தொடங்கி நிறைவு செய்வார். பின் குறிப்பிட்ட நாளில் ஒளிப்பதிவு நிகழும். |
தனியார் தொலைக்காட்சியில் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் நாடகங்களுக்கு ஒளிபரப்பு நேரம் ஒதுக்கப்படுகிறது. இவ்வளவு நாட்கள் என ஒதுக்கப்படுகிறது. விளம்பரதாரர்களும் இத்தகைய ஒதுக்கீட்டைப் பெற்றுத் தனியார் நாடகத் தயாரிப்புகளை வாங்கி ஒளிபரப்புகிறார்கள். ராடன் டிவி. விகடன் டெலிவிஸ்டாஸ், மின்பிம்பங்கள், ஏ.வி.எம் நிறுவனம் முதலான நிறுவனத்தார் நாடகங்களைத் தயாரிக்கின்றனர். தொலைக்காட்சித் தொடர்களை இயக்குவதற்கென்றே இயக்குநர்களும் உருவாகியிருக்கிறார்கள். சி.ஜே. பாஸ்கர், சுந்தர் கே. விஜயன், திருமுருகன், திருச்செல்வம், ஸ்ரீபிரியா, பி.ஆர். விஜயலட்சுமி, நாகா, ஹரிபாஸ்கர் முதலானோர் குறிப்பிடத் தக்கவர்கள். |