1.1 கண்ணதாசன்

தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது சிறுகூடல்பட்டி என்னும் சிற்றூர். இங்கு வாழ்ந்த சாத்தப்பன்-விசாலாட்சி பெற்ற எட்டுப் பிள்ளைகளுள் ஒருவர் முத்தையா. இலக்கிய ஆர்வத்தால் தம் பெயரைக் கண்ணதாசன் என்று புனைந்து கொண்டார். பிறந்த நாள்: 24.6.1927.

  • ஆர்வமும் ஆற்றலும்

இளமையிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இலக்கியப் படைப்பில் ஆர்வம் மிகுதி. தந்தை பெரியாரின் சமூகச் சிந்தனைகளும், அறிஞர் அண்ணாவின் தமிழும், அரசியல் கருத்துகளும் இவரை ஈர்த்தன. சிறந்த மேடைப் பேச்சாளர்; திராவிட இயக்க முன்னணித் தலைவர்களுள் ஒருவர் ஆனார்.


  • சாதனைகள்

தமிழ்த் திரைப்பட உலகில் நல்ல தமிழும், பகுத்தறிவுக் கருத்துகளும் நுழைந்த காலப்பகுதி அது. பாரதிதாசன், உடுமலை நாராயணகவி, கம்பதாசன் இவர்களைத் தொடர்ந்து திரைத்துறையினுள் கண்ணதாசன் புகுந்தார். அழியாத இலக்கியங்கள் என்று பாராட்டப்படும் ஆயிரக் கணக்கான திரைப்பாடல்களை எழுதினார். இவரது திரைப்பட உரையாடல்களில் இலக்கியத் தரம் இருந்தது.

  • அரசியலும் கொள்கையும்

அரசியலில் திராவிட இயக்கத்திலிருந்து அதற்கு எதிரான தேசிய இயக்கத்திற்கு மாறினார். இந்தக் கொள்கை மாற்றம் இவரது இலக்கியப் படைப்புகளில் இருவேறு முரண்பட்ட நிலைகளை ஏற்படுத்தி விட்டது. நாடு, இனம், மொழி, சமயம் பற்றிய கருத்துகளில் இந்த முரண்பட்ட நிலைகளைக் காணலாம்.

  • படைப்புகள்

ஆறு கவிதைத் தொகுதிகள்; ஆயிரக் கணக்கான திரைப்பாடல்கள்; மாங்கனி, ஆட்டனத்தி ஆதிமந்தி என்னும் குறுங்காவியங்கள்; இயேசு காவியம், கிருஷ்ண அந்தாதி, தைப்பாவை ஆகியவை இவரது கவிதைப் படைப்புகள். வனவாசம், மனவாசம், அர்த்தமுள்ள இந்து மதம் இவை இவரது உரைநடைப் படைப்புகளில் சிறந்தவை. செப்புமொழி, குட்டிக் கதைகள் ஆகிய தொகுப்புகள் புகழ்பெற்றவை.

பல திரைப்படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல் தீட்டியுள்ளார். பல புதினங்களைப் படைத்துள்ளார். சேரமான் காதலி இந்திய அளவில் சிறந்த இலக்கியப் படைப்புக்கு வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருது பெற்றது.

தென்றல், தென்றல்திரை, கடிதம், கண்ணதாசன் முதலிய சிறந்த இலக்கிய இதழ்களை நடத்தினார். கண்ணதாசன் தமிழின் தலைசிறந்த இலக்கிய இதழ்களுள் ஒன்றாகும்.

  • மறைவு

அமெரிக்க சிகாகோ நகரில் 17.10.1981 அன்று உயிர் நீத்தார்.