இதயத்தில் நிறைந்தவர்கள் இறக்கும் போது இதயம் துடிக்கும்
துடிப்பை உணர்ச்சி குன்றாது எடுத்துரைக்க எல்லாருக்கும் முடிவதில்லை. ஆனால்
கவிஞனால் முடிகிறது. கண்ணதாசன் அந்தக் கலையில் வல்லவர்.
திரைக்கவிஞர் இவர். இசைக்கலை இவர் இதயத்தின் நாதம்.
நாதசுர இசைமேதை ஒருவன் இறந்தான். நெஞ்சம் தாங்குமா? திருவாவடுதுறை இராஜரத்தினம்
இறந்தபோது கண்ணதாசன் இரங்கல் கவிதை பாடினார். இதன் ஒவ்வொரு வரியும் கண்ணீர்ச்
சரமாக இருந்தது. கலைவாணர் என்.எஸ்.கே. மரணப் படுக்கையில் கிடந்தபோது பார்க்கச்
சென்றார் கண்ணதாசன். அப்போது ‘எனக்கும் அதைப்போல் ஒரு இரங்கல் கவிதை பாட
வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாராம் கலைவாணர்.
கல்வி வள்ளல் அழகப்பா மறைந்தபோது இவர் பாடிய இழப்புக்
கவிதை வரலாற்றின் பக்கங்களில் காய்ந்து போகாத கண்ணீராய் இருக்கிறது.
முதலாளி மார்களிலே முழுமுதலைக்
கல்விக்கே முடிந்து வைத்த
முதல்ஆளை நீ கொன்றாய்! மற்றவர்கள்
வாழ்கின்றார், முதல் அடிக்க.
சதிகாரச் சாவே, நின் வயிற்றினிலே
சர்வகலா சாலை காண
இதமான ஆள்வேண்டும் என்றோ எம்
பெருமகனை எடுத்துச் சென்றாய்?
(முழுமுதல் = செல்வம் முழுவதையும்;
முடிந்து வைத்த = கல்விக்காகவே மூட்டைகட்டிக் கொடுத்துவிட்ட;
இதமான ஆள் = (கல்லூரி கட்டுவதற்குப்) பொருத்தமான இனிய மனிதர்).
என்று ‘சாவைச்’ சட்டையைப் பிடித்து உலுக்குகிறார்.
பல கல்வி நிலையங்களும், காரைக்குடி பல்கலைக் கழகமும்
இன்று வள்ளல் அழகப்பா பெயர் சொல்லி நிற்கின்றன. வள்ளல் அழகப்பா
(முதல்தொகுதி) என்னும் இந்த இரங்கல் கவிதை அவற்றைவிட உயர்வான ‘சொல் மண்டபமாக’
அமைந்து அவர் பெயர் சொல்லி நிற்கிறது.
‘முழுமுதல்’ என்றால் இறைவன் என்றும் பொருள் உண்டு.
கல்விக்காக உதவும் பணம் கடவுளுக்குச் சமம் என்னும் நயமான பொருளையும் இக்கவிதைச்
சொல் தருகிறது பாருங்கள்!
ஒப்பற்ற தலைவர் ஜவஹர்லால் நேரு
இறந்தபோது கண்ணதாசன் பாடிய இரங்கல் கவிதை மறக்க முடியாதது. “சாவே உனக்கொருநாள்
சாவு வந்து சேராதோ சஞ்சலமே நீயும் ஒரு சஞ்சலத்தைக் காணாயோ?” என்ற வரிகள்
அவலத்தின் உச்சத்திற்கு நம்மை அழைத்துச் செல்பவை.
அண்ணா, பெரியார், பட்டுக்கோட்டை, கலைவாணர் ஆகியோர்
இறந்தபோது இவர் பாடிய இரங்கல் பாக்கள் உயிர்த்துடிப்பு உள்ளவை.
சீசர் என்ற தன் வளர்ப்புநாய் இறந்தபோதும் இரங்கல்பாப்
பாடினார்.
இருந்து பாடிய இரங்கல் பா என்ற
தலைப்பில் தனக்கே இரங்கல்பாப் பாடிக் கொண்ட முதல் கவிஞர் கண்ணதாசன் தான்.
(4 ஆம் தொகுதியில் உள்ளது) |