கண்ணதாசனின் உவமைகளிலே ஒரு புதுமை இருக்கும். மாலைப்
பொழுது, மலைகளிடையே மறையும் சூரியன், காதல் உணர்வுடன் ஓர் இளைஞன் இக்காட்சியைக்
காண்கிறான்.
மார்பகத்தின்
ஆடைக்குள் கடிதம் வைக்கும்
மங்கையரின் கைபோல, மலைகள் ஊடே
தேர் உருட்டிக் கதிர் சென்றான்....
(இரவே போதும், முதல்தொகுதி)
என்று இதை அழகான உவமையால் சொல்கிறார் கண்ணதாசன்.
மாங்கனியின் சிரிப்பு எப்படி ஒலிக்கிறது?
வெள்ளிக்காசு
ஒருபிடியைக் கீழே கொட்டி
விட்டாற்போல் அலட்சியமாய்ச் சிரித்து,,,,,,
என்கிறார் கண்ணதாசன்.
ஆட்டன் அத்தியை அடித்துப் போகும் வெள்ளம் எப்படிப்
பெருகி வந்தது தெரியுமா? கதை கட்டத்தை வெள்ள ஓட்டத்துடன் சேர்த்து
உவமையால் காட்டுகிறார்.
காவிரி
வெள்ளம் கணிகை மா மருதிகொண்ட
கவலைபோல் மேலும் பல்கும்....
(பல்கும் = பெருகும்)
காதலில் தோற்றுக் கண்ணீர் வடித்தபடி இருக்கும்
மருதியின் துயரத்தைப் போல் மேலும் மேலும் வெள்ளம் பெருகுகிறது என்கிறார்.
உவமையை வடிவம் மாற்றிப் புதிய முறையில் சொல்வது
இவரது தனிச்சிறப்பு. ‘மாங்கனி’ காவியத்தில் நடனமாடும் மாங்கனியை வருணிக்கிறார்.
‘வாள் போன்ற விழி’ என்பது பழமையான மரபு உவமை. கண்ணதாசன்
சொல்லும் முறையில் சிறிய மாற்றம் செய்து இதைப் புதுமையாய்ப் பொலிய வைக்கிறார்.
விழியை வாளாக உருவகம் செய்துவிட்டு இமைக்கு வாள் உறையை உவமை காட்டுகிறார்.
“கொலை வாளுக்கு உறைபோல விழிவாளுக்கு இமை”. |