தமிழனின் இயல்பான நடவடிக்கைகளான திருமணம், சாவுச்சடங்கு,
இறைவழிபாடு ஆகிய எல்லாவற்றிலும் பிறமொழி நுழைவு கண்டு கொதிக்கிறார் முடியரசன்.
மணவினையில் தமிழ்உண்டா? பயின்றார் தம்முள்
வாய்ப்பேச்சில் தமிழ்உண்டா? மாண்ட பின்னர்ப்
பிணவினையில் தமிழ்உண்டா? ஆவணத்தில்
பிழையோடு தமிழ்உண்டு. கோயில் சென்றால்
கணகணஎன்று ஒலியுண்டு ; தமிழைக் கேட்கக்
கடவுளரும் கூசிடுவர் ; அந்தோ ! அந்தோ !
அணுஅளவும் மொழியுணர்ச்சி இல்லா நாட்டில்
ஆத்திகரே இறையுணர்ச்சி வளர்வது எங்கே?
(நாணுகின்ற = வெட்கப்படுகிற; மனப்போக்கர்
= எண்ணம் கொண்டவர்; தென்படுமோ = காணப்படுமோ; பாங்குடன்
= முறையோடு; வீற்றிருக்கும் = அமர்ந்து இருக்கும்; ஈங்குஅதற்காய்
= இங்கே அதற்காக; மணவினை = திருமணச் சடங்கு; பிணவினை
= சாவுச்சடங்கு; ஆவணத்தில் = பதிவு ஏடுகளில்; கூசிடுவர்
= தயக்கம் கொள்வார்கள்; ஆத்திகர் = கடவுள் பக்தர்கள்)
தாய்மொழியில் வழிபாடு செய்யாவிட்டால் கடவுள் பக்தி
கூட அழிந்து போகும் என்று எச்சரிக்கை செய்கிறார். தமிழ்காக்கப் போர் செய்ய
அழைக்கிறார். அதற்குச் சிங்கம் போன்ற வீரர் வேண்டும்; உணர்வும், மானமும்
வேண்டும்; மொழி உரிமைப் போரில் உயிர் கொடுத்த வீரர்களான தாலமுத்து,
நடராசன் கொண்டிருந்த துணிவு வேண்டும் என்கிறார்.
அவளும் நானும என்னும் கவிதையை,
கணவன் - மனைவி உரையாடுவதுபோல் அமைத்துள்ளார்.
“மணநாளில் தமிழ்ஒலியே கேட்கவில்லை. கோயில் உள்ளேயும்
தமிழ் ஒலி இல்லை. பிள்ளை பெற்றோம், கிறுக்கரைப்போல் பிறமொழியில் பெயர் வைத்தோம்”
என்று மனைவி இடித்து உரைக்கிறாள். கணவர் உணர்ந்து திருந்துகிறார். வஞ்சினம்
(சபதம்) உரைக்கிறார்.
தஞ்சம்என வந்தவரின் சூழ்ச்சி யாலே
தமிழ்வழங்காக் கோயில்உள்ளே தலையைக் காட்டேன்
எஞ்சிஉள்ள குழந்தைக்குத் தமிழ்ப்பேர் வைப்பேன்
இப்படியே என்வீட்டைத் தமிழ்வீடு ஆக்க
வஞ்சினமும் கொள்கின்றேன்.........
மனைவி நகைத்து நல்வழிப் படுத்துகிறாள். “கோயில்
உங்கள் சொத்து. நுழையாமல் இருந்தால் தமிழ் பிழைத்துவிடாது. உரிமையை வென்று
அடைய வேண்டும். வீண்பேச்சு வேண்டாம். வீரம் இல்லையா?” என்று கேட்கிறாள்.
அவர் இதை, “தோழர்களே உங்களிடம் சொல்கின்றேன். என்ன செய்யலாம்?” என்று கேட்டுக்
கவிதையை முடிக்கிறார்.
|