பாரதி குழந்தையைப் பிள்ளைக் கனியமுது என்றார்.
அவர் பேரனாகத் தம்மைச் சொல்லும் முடியரசன் பிள்ளைச்
செல்வத்தின் பெருமையை அன்புத் தமிழில் பேசிப் பேசிக்
கனிகிறார்.
குழந்தை இன்பம் என்னும் கவிதையில் மனைவியுடன்
பேசுகிறார்.
தென்றல் தொடும் இன்பம்; குழல்யாழின் இசை இன்பம்; இயற்கைப் பொருள் எல்லாம் அழகின் வடிவில் தரும் காட்சி இன்பம் இவை எவையுமே
குழந்தை தரும் இன்பத்துக்கு இணை ஆகாது என்கிறார். மனைவியிடமே, அவள் தரும் காதல்
இன்பம்கூட மழலை தரும் இன்பத்துக்கு இணை இல்லை என்கிறார். அவள் ஊடல் கொள்கிறாள்
என்று முடிகிறது கவிதை.
நண்பர்களே ! இங்கு ஒரு தாய் தன் இன்பத்தைக் குழந்தை
இன்பத்தை விட உயர்ந்தது என்று நினைக்கிறாள். ஊடல் (சிறுகோபம்) கொள்கிறாள்.
தந்தை முடியரசனோ குழந்தை இன்பமே உயர்ந்தது என்கிறார். தாயைவிடத் தம் குழந்தைமேல்
அன்பு கொள்ளும் தந்தையாக இங்கு முடியரசன் உயர்ந்து நிற்கிறார் அல்லவா?
தோற்றுவிட்டேன் என்னும் கவிதையைத்
தமிழ்மொழியில் மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று என்றே சொல்லலாம். தம் குழந்தையிடம்
பேசுவதுபோல் இக்கவிதையை எழுதியுள்ளார்.
போர்க்களத்தில் எதிர்நிற்க எவரும் காணேன்
பூரித்தேன், வீரத்தால் செருக்கும் கொண்டேன்
தார்க்கழுத்தில் வன்புயத்தில் முகத்தில் எங்கும்
தளிர்அடியால் நீமிதித்தாய் தோற்று விட்டேன்
- என்று தொடங்கித் தம் குழந்தையிடம் தாம்பெற்ற
தோல்விகளைப் பட்டியல் இடுகிறார்.
(பூரித்தேன் = பெருமை கொண்டேன்;
தார்க்கழுத்து = மாலையணிந்த கழுத்து; வன்புயம்
= ஆற்றல் மிக்க தோள்; தளிர்அடி = தளிர் போன்ற காலடி)
குழந்தையின் மழலையின் முன் தோற்கிறார். கருணையில்லாத
கல்நெஞ்சம், குழந்தையின் பார்வையால் உருகித் தோற்கிறது.
பெரியவர்கள் சொல் கேளாத, பணிவு அற்ற முரட்டுத்தனம்
குழந்தை இடும் கட்டளைக்குப் பணிந்து தோற்கிறது. தன் மனைவியின் கண்களுக்கு ஒப்பான
அழகு உலகில் எதுவுமில்லை என்று எண்ணியிருந்த கணவனின் இறுமாப்பு, தன் குழந்தையின்
கவலை படியாத அழகு மலரான கருவிழியின் முன் தோற்றுவிட்டது.
இறுதியில் -
“இலக்கிய, இலக்கண, அகராதிகள் எல்லாம் கற்றிருக்கிறேன்.
இருந்தும், பேசமுயன்று உன் நா உந்தும் போது வெளியே குதிக்காமல் இதழ் ஓரத்தில்
சுழலுமே அந்த மழலை மொழி? அதன் பொருள் உணர முடியாமல் உன்னிடம் தோற்றுவிட்டேன்"
என்று பாடுகிறார்.
‘தோற்றுவிட்டேன்’ என்று பாடியே ஒரு மிகச்சிறந்த கவிதையைப்
படைப்பதில் வென்றுவிட்டார் முடியரசன். நண்பர்களே ! நீங்கள் சொல்லுங்கள் இங்கே
வென்றவர் கவிஞர் முடியரசனா? அன்பான தந்தை முடியரசனா? |