உவமையின் செறிவான வடிவமே உருவகம். இருபொருள்களின்
இடையே உள்ள ஒப்புமையை விளக்காமல், இரண்டும் வேறல்ல, ஒன்றுதான் என்று ஒற்றுமைப்படுத்திக்
கூறினால் அது உருவகம் ஆகிறது. முடியரசன் அழகிய உருவகங்களைப் படைத்திருக்கிறார்.
இயற்கைத்தாய் என்னும் கவிதையில்
தம்மைக் குழந்தையாகவும் இயற்கையைத் தாயாகவும் உருவகம் செய்து பாடுகிறார். இக்கவிதை
முழுதுமே உருவகங்களால் நிறைந்து உள்ளது.
அழுக்காறாம் எறும்பு ஊரும், பொய்மை என்னும்
அறுகால்சேர் ஈக்கள் மொய்க்கும்,
இழுக்குஏறா நல்அறிவுப் பசிதோன்றும்
இத்தனையும் தாங்க ஏலாது
அழுதிடுவேன் ; விரைந்தோடி என்பால்வந்து
அன்புஎன்னும் முலைசுரந்த
பழுதுஇல்லா முப்பாலை ஊட்டிடுவாள்
பார்புரக்கும் தாய்மை வாழ்க ! (அழுக்காறு = பொறாமை; இழுக்கு ஏறா =
குற்றம்இல்லாத;
ஏலாது = முடியாமல்; பழுது இல்லா =
குறைஇல்லாத;
பார்புரக்கும் = உலகத்தைக் காக்கும்)
மனிதனை வந்து அடைந்து வருத்தம் உண்டாக்கும் பொறாமை,
பொய்மை, அறிவுப்பசி இவை மூன்றும், குழந்தையைத் தொல்லை செய்யும் எறும்பு, ஈ,
வயிற்றுப்பசி இவையாக உருவகம் செய்யப்படுகின்றன. இவற்றின் தொல்லையால் மனிதன்
வருந்துவது குழந்தையின் அழுகையாகக் குறிப்பிடப்படுகிறது. முப்பால் என்னும்
திருக்குறள் இந்தத் தொல்லைகளைப் போக்கும். அதையே இயற்கைத்தாய் ஊட்டும் பாலாக
உருவகம் செய்கிறார் முடியரசன். மிக அழகான தொடர் உருவகமாக இது விளங்குகிறது.
இதில் ‘அறுகால்’ என்பது ‘ஆறுகால்களை உடைய’ என்றும்,
‘கால்கள் இல்லாத’ என்றும் இருபொருள் தரும். பொய் என்பது கால் இல்லாதது தானே?
அது அறுகால் ஈயாகச் சொல்லப்படுகிறது. இங்கு இருபொருள் (சிலேடை) நயத்தையும்
சுவைக்கிறோம்.
இயற்கையின் எழுச்சி என்னும் கவிதையில்
இதே இயற்கை அரசியாக உருவகப் படுத்தப் பெறுகிறது. தாயாக இருக்கும்போது உலகை
எல்லாம் வாழ வைக்கிறாள் இயற்கைப் பெண். அவளே அரசியாக உலா வரும்போது அழிவுக்குத்
தான் வழி அமைக்கிறாள். புயல் மழையை அவளது உலாவாக உருவகம் செய்கிறார் முடியரசன்.
விளக்கு, தந்திக் கம்பங்கள் வளைந்து தலை வணங்குகின்றன.
கம்பிகள் - தோரணங்கள். வீடுகள், மரங்கள் விழுந்து வணங்குகின்றன. குடிசைகளை
அரசி காணக் கூடாதென்று பெருமரங்கள் விழுந்து வயிற்றில் மறைத்துக் கொள்கின்றன.
காற்றில் பறந்த கூரை ஓடுகள் தூவிய மலர்களாய் உதிர்கின்றன. பறவைகள் வாய்மூடி
நிற்கின்றன. பறக்கும் குடிசைகள் வாண வேடிக்கை காட்டுகின்றன. கதிரவனும், நிலவும்
ஒளிந்து நின்று பார்க்கின்றன. மூன்று நாட்கள் ஒரே ஆரவாரம். அவள் ஊர்வலம் வந்து
சென்ற பின்னும் அவலக் குரல்கள். இழப்பின் துயர ஓலங்கள்!
இக்கவிதை வெறும் இயற்கை வருணனை அன்று. தனிமனிதனின்
அதிகாரத்தையும், தனி உடைமை அரசு அமைப்பையும், அவற்றால் சிதையும் மனித வாழ்க்கையையும்
இங்கு இயற்கைக் கொடுமையாக உருவகம் செய்கிறார் முடியரசன். |