3.1 ந. பிச்சமூர்த்தி

தமிழ்நாட்டில் கலைகள் செழித்த மாவட்டம் தஞ்சாவூர். இதில் கும்பகோணம் நகரில் 15-8-1900-இல் இவர் பிறந்தார்.

பெற்றோர் நடேச தீட்சிதர் - காமாட்சி அம்மாள். தந்தை ஹரிகதை, நாடகம், ஆயுர்வேதம், சாகித்யம், தாந்திரீகம் ஆகிய துறைகளில் வல்லவராய் இருந்தவர். எனவே கலை, சமயம், பண்பாடு, கல்வி, தொண்டு இவற்றில் ஊறி இருந்த ஒரு குடும்பப் பின்னணியில் பிச்சமூர்த்தி வளர்ந்தார். தத்துவத்தில் இளங்கலைப் பட்டமும், சட்டக் கல்வியில் பட்டமும் பெற்றார்.

  • சிறுகதை                                                                    

முதலில் ஆங்கிலத்தில் சிறுகதைகள் எழுதினார். பின்னர்த் தமிழில் எழுதத் தொடங்கினார். பிக்ஷு, ரேவதி என்னும் புனைபெயர்களில் எழுதினார். மணிக்கொடி என்னும் இலக்கிய இதழில் சிறப்பாக எழுதிய தொடக்கக் காலப் படைப்பாளிகளில் ஒருவர் ந. பிச்சமூர்த்தி. சிறந்த சிறுகதை எழுத்தாளராகப் போற்றப் படுகிறவர்.

  • புதுக்கவிதை

பாரதியின் கவிதைகள் மற்றும் வசன கவிதைகள், அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் புல்லின் இதழ்கள் என்னும் கவிதை ஆகியவற்றால் தூண்டுதல் பெற்றுப் புதுக்கவிதை எழுதத் தொடங்கினார்.

1934 முதல் 1944 வரை புதுக்கவிதைகள் எழுதினார். பதினைந்து ஆண்டுகள் எதுவும் எழுதவில்லை. மீண்டும் 1959-இல் தொடங்கி எழுத்து இலக்கிய இதழில் எழுதினார். தம் இறுதி நாள் வரை எழுதினார். 83 சிறந்த கவிதைகள் படைத்தார். இவற்றுள் 7 குறுங்காவியங்கள். பல சிறுகதைகளும், கட்டுரைகளும் சிறுவர் கதைகளும் நாடகங்களும் படைத்துள்ளார்.

4-12-1976-இல் சென்னையில் மறைந்தார்.