3.2 வசனமும் கவிதையும்


நண்பர்களே ! நாம் எண்ணத்தை மொழியாக வெளியிடுகிறோம். நம் எண்ண ஓட்டம் இரண்டு வழிகளில் அமைகிறது. ஒன்று, காரண காரியத்தோடு உலகின் உண்மைகளை அறியத் துடிக்கும் அறிவுவழி. இன்னொன்று உலகையும் வாழ்வையும் சுவைக்கத் துடிக்கும் நம் உணர்வின் வழி. மொழியாக வெளிப்படும் எண்ணம், அறிவின் வழியில் நடந்தால் அது வசனம் (உரைநடை) ஆகிறது. அந்த எண்ணம் உணர்வின் பாதையில் ஓடினால் அது கவிதை ஆகிறது.

ஒரு சான்று காட்டினால் இது இன்னும் தெளிவாக உங்களுக்குப் புரியும்.

‘தீ சுடும்’ என்பது அறிவியல் உண்மை. இப்படிச் சொன்னால் அது வசனம்.

‘தீ இனிது’ என்கிறார் பாரதி. தீ இனிமையானதா? இனிக்குமா? இது அறிவியலுக்கு ஏற்காது. இந்த வார்த்தைகள் அறிவு நிலையில் வெளிப்பட்டவை அல்ல. உணர்வு நிலையில் வெளிப்பட்டவை என்று புரிந்து கொள்கிறோம். இது பல கற்பனைகளை எழுப்புகிறது. எனவே, இது கவிதை.

வார்த்தை, நம் அறிவுடன் மட்டும் பேசும்போது அது வெறும் செய்தியை மட்டும் சொல்கிறது. வசனமாக நின்று போகிறது. வார்த்தை, நம் உணர்வுடன் பேசும்போது உணர்ச்சியைத் தூண்டுகிறது. கற்பனையைத் தூண்டுகிறது. கவிதை ஆகிறது.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்ன? வசனம் கவிதை இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாடு வடிவத்தில் இல்லை; பண்பில்தான் உள்ளது.

  • மரபும் மீறலும்

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாதவர்கள் தொன்று தொட்டு இலக்கணங்களால் வரையறுக்கப்பட்ட வடிவங்களில் தான் கவிதை உள்ளது என்று நம்பினர். நம் மொழியில் மட்டும் அல்ல, உலகின் எல்லா மொழியிலும் இந்த நம்பிக்கை வேர் ஊன்றி இருந்தது. வகுக்கப்பட்ட அந்த மரபான யாப்பு வடிவங்களில் எழுதப்படாத எதையுமே கவிதை என்று ஏற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்காவில் தோன்றிய வால்ட் விட்மன் என்னும் கவிஞன் இந்த மரபை மீறிக் கவிதைகள் படைத்தான். புல்லின் இதழ்கள் என்ற அக்கவிதைகள் உணர்வுடன் பேசின. அதுவரை வசனம் என்று நம்பிவந்த ஒரு வடிவத்தில் அவை கவிதைகளாக, உணர்ச்சி வெள்ளங்களாக வெளிப்பட்ட போதுதான் உலகம் நாம் மேலே கண்ட உண்மையை உணர்ந்தது. வசனம் கவிதை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு பண்பில்தான் உள்ளது என்பதை ஏற்றது.

பாரதி, வால்ட் விட்மனின் ‘புல்லின் இதழ்கள்’ படித்தார். தமிழின் மரபு ஆன யாப்பு வடிவங்களில் மட்டும் அன்றி, நாட்டுப்புற இசைப்பாடல் வடிவங்களிலும் கவிதை படைத்த உணர்ச்சிக் கவிஞர் அவர், அவரே, ‘புல்லின் இதழ்கள்’ போல் புதிய நடையில் காட்சிகள் என்னும் கவிதைகளை எழுதினார்.

3.2.1 புதுக்கவிதை என்ற பெயர்

மாறுதல் காலம் என்பதால், பாரதியின் ‘காட்சிகளும்’ விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’, வசன கவிதைகள் என்ற பெயரில் சுட்டப்பட்டன.

இந்த இரண்டையும் படித்தார் பிச்சமூர்த்தி. அதுவரை சிறுகதை மட்டுமே எழுதிவந்தவர் அவர். அவ்வசன கவிதைகளால் கவரப்பட்டுத் தாமும் கவிதை எழுதத் தொடங்கினார். மரபான கவிதை வடிவங்களில் இல்லாத அக்கவிதைகளை, அன்று இலக்கணம் கற்ற பண்டிதர் பலர் எதிர்த்தனர். அவை கவிதைகளே அல்ல என்று வாதிட்டனர்.

அவற்றின் சொல்லில், நடையில், உள்ளடக்கப் பொருளில் இருந்த புதுமை பலரைக் கவர்ந்தது. 1959-இல் தோன்றிய ‘எழுத்து’ என்னும் இதழில் பலர் புதிதாக எழுதத் தொடங்கினர். அவர்கள் பிச்சமூர்த்தியைப் பின்பற்றினர். தங்கள் கவிதைகளைப் ‘புதுக்குரல்கள்’ என்றனர். அதுவரை ‘வசன கவிதை’ என்று கூறிவந்த பொருந்தாத பெயர் மறைந்தது. ‘புதுக்கவிதை’ என்ற பெயர் பிறந்தது.

  • வித்திட்டவர்

இந்தப் புதுமைக்கு விதை போட்டுத் தொடங்கி வைத்தவர் பாரதிதான். உண்மையில் புதுக்கவிதையின் தந்தை அவர்தான். ஆனால் அவர் தொடராமல் விட்டதைத் தொடர்ந்து வளர்த்துச் சிறந்த கவிதைகளை எழுதிக் குவித்த பிச்சமூர்த்திக்கு அந்தப் பெருமை வந்து சேர்ந்துவிட்டது.

காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாறி வரும் வாழ்க்கையின் புதிய புதிய உள்ளடக்கங்களைத் தானும் ஏற்றுப் புதுக்கவிதை வளர்ந்து வருகிறது.