தொன்மம் பற்றி முந்திய பாடங்களில் அறிந்திருக்கிறோம்.
புராணம், பழங்கதைகள் இவற்றில் வரும் பாத்திரங்களோ, நிகழ்வுகளோ கவிதையில் ஓரிரு
வார்த்தைகளில் சுட்டிக் காட்டப்படும். இவ்வாறு சுட்டினால், பக்கம் பக்கமாக
விவரிக்க வேண்டிய தேவையே இல்லாமல் சொல்ல வந்த கருத்தை அது உணர்வோடு விளக்கிவிடும்.
இதனால் உலகெங்கும் சிறந்த கவிஞர்கள் இந்தக் கலைத்திறனை விரும்பிக் கையாளுகின்றனர்.
இது தொன்மம் எனப்படுகிறது.
அப்துல் ரகுமானின் கவிதைகளில் தொன்மம் மிகுதியாக
இடம் பெறுகிறது.
‘ஆறாவது விரல்’, ‘சிலுவை’ - இவை பைபிள் தொன்மங்கள்.
முன்னரே இக்கவிதை உங்களுக்கு விளக்கப்பட்டிருக்கிறது.
இராமாயணத்தின் பல பாத்திரங்கள், கோவலன், கண்ணகி,
நெற்றிக்கண், வாமனன், பாற்கடல், விசுவரூபம், துச்சாதனன், கவுரவர் முதலிய பிற
தொன்மங்கள் இவரது கவிதைகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. சுருங்கச் சொல்லி விளங்க
வைப்பதற்கு இவருக்கு மிகவும் பயன்பட்டுள்ளன.
இந்திய நாட்டுத் தேர்தல்கள், மக்களாட்சி பற்றிய கவிதை
ஐந்தாண்டுக்கு ஒருமுறை. இதில் நளன் கதைத் தொன்மம் இடம் பெறுகிறது.
சுயம்வரம் என்பதை அறிவீர்களா? அரச குமாரிகள்
தமக்குப் பிடித்த மணாளரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஏற்பாடு அது. (சுயம்
= தானாக; வரம் = வரிப்பது, தேர்ந்தெடுப்பது). அப்துல் ரகுமான் இன்றைய
இந்தியத் தேர்தல் - மக்களாட்சி முறையை ஒரு புது வகைச் சுயம்வரமாகப் பார்க்கிறார்.
இந்தச் சுயம்வரத்தில் ஏமாற்றப் படுகிற மங்கையாக இந்திய மக்களைக் காட்சிப்படுத்துகிறார்
கவிஞர். இந்த நாட்டில் பேராசை பிடித்த, சுயநலக்காரப் பதவி வெறியர்களே அரசியல்
அரங்கில் மேல்நிலை பெறுகிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது
ஒன்றுதான் நோக்கம். எல்லாரும் நல்லவர் போல வேடம் போடுகிறார்கள்.
நளன் கதையில், நளனை மணக்க விரும்பினாள் தமயந்தி.
சுயம்வரத்தில் அவனுக்கு மாலையிட்டு மணந்து கொள்ள மண்டபத்துள் நுழைந்தாள். இவள்
நளனை விரும்புவதை அறிந்து கொண்ட தேவர்கள் நளனைப் போலவே தங்கள் உருவை மாற்றிக்
கொண்டு (போலி வேடமிட்டு) இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். தமயந்தி தன் அறிவுக்
கூர்மையால் உண்மையான நளனைக் கண்டறிந்து மாலையிட்டு மணந்து கொண்டாள். இவ்வாறு
சுயம்வர நிகழ்ச்சி புராணத்தில் சொல்லப்படுகிறது.
இன்றைய சுயம்வரத்தில் உண்மை நளன் எவருமே இல்லை. எல்லாருமே
போலி நளன்கள். கையில் வாக்குச்சீட்டு என்ற மாலையோடு தவித்து நிற்கும் குருட்டுத்
தமயந்திதான் வாக்காளர்கள். அதாவது தெளிந்த அறிவு இல்லாத ஏமாளிகள். எப்படி நல்ல
ஆட்சி அமையும்? ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் சுயம்வரக் கவிதையை
இப்போது படியுங்கள்: புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி
(பால்வீதி, ப. 70) பக்கம் பக்கமாய் விவரிக்க வேண்டிய செய்தியை இரக்கம்,
எள்ளல் உணர்வுகளுடன் நான்கு வரிகளில் சொல்லி விடுகிறார்.
நண்பர்களே, கவிதைகளை உருவாக்கும் கலையில் தேர்ந்த
கலைஞரான அப்துல் ரகுமானின் படைப்பு ஆக்கக் கலைத்திறன்களைச் சில சான்றுகள் வழி
அறிந்து கொண்டீர்கள். |