3.4
தூதுப் பொருள்களும் தலைவியும்
தமிழைத் தூது அனுப்பும்
தலைவி, தூதுப்பொருள்களில் பிற பொருள்களைத் தூது அனுப்பாததற்கு உரிய
காரணங்களைக் குறிப்பிடுகின்றாள். அதைப்போல, தூது செல்லும் தமிழ்
தூது போகும் போது எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்றும் குறிப்பிடுகின்றாள்.
3.4.1 தூது அனுப்பாததன் காரணம்
தமிழ் மொழியைத் தூது அனுப்புவதற்காகத்
தேர்ந்தெடுத்த தலைவி, பிற பொருள்களை ஏன் தூது அனுப்பவில்லை என்ற
காரணங்களையும் கூறுகின்றாள்:
அன்னத்தைத் தூதாக அனுப்பலாம்.
ஆனால், அந்த அன்னம் இன்னும் சிவபெருமானைக் கண்டு அறியவில்லை என்பார்கள்.
(அதாவது, பிரம்மன் அன்ன வடிவம் எடுத்துப் பறந்து சென்றும் சிவபெருமானின்
முடியைக் காணாத நிலையை இவ்வாறு கூறுகின்றாள்.)
வண்டை அனுப்பலாம். ஆனால்
சிவபெருமான் காமம் செப்பாதே என்று
கூறினால் அது திகைக்கும். (‘காமம் செப்பாது' என்னும் குறுந்தொகைப்
பாடலின் அடி இங்கே குறிப்பிடப்படுகிறது. கொங்குதேர்
வாழ்க்கை என்று தொடங்கும் அப்பாடலை இயற்றியவர் இறையனார்.)
மானைத் தூதாக அனுப்பலாம்.
அது சிவபெருமானின் புலித்தோல் ஆடையைக் கண்டு அஞ்சிச் செல்லாது நின்றுவிடும்.
குயிலைத் தூதாக அனுப்பலாம்.
ஆனால் அதுவும் காக்கையின் இனமே ஆகும். மதுரையில் சோம சுந்தரக் கடவுளை
வணங்கிக் காக்கை முதலியவற்றை வெல்லும் ஆற்றல் படைத்தது கரிக்குருவி.
எனவே அது கரிக்குருவியைக் கண்டு அஞ்சும்.
மனத்தைத் தூதாக அனுப்பலாம்.
அந்த மனம் மனத்திற்கு எட்டாத சிவபெருமானிடம் நெருங்காது. ஆகவேதான்,
தான் தமிழைத் தூதுப் பொருளாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறுகின்றாள்:
- ஒண்கமலத்து |
அன்னம் தனைவிடுப்பேன் அன்னம்தான்
அங்குஅவரை
இன்னம்தான் கண்டுஅறியாது என்பரே - மன்எந்தாய்
|
அப்பால்ஓர் வண்டை அனுப்பின்
அவர்காமம்
செப்பாதே என்றால் திகைக்குமே - தப்பாது |
மானைப்போய்த் தூதுசொல்லி வாஎன்பேன்
வல்லியப்பூந்
தானைப் பரமர்பால் சாராதே - ஏனைப் பூங் |
கோகிலத்தை நான்விடுப்பேன் கோகிலமும்
காக்கைஇனம்
ஆகிவலி யானுக்கு அஞ்சுமே - ஆகையினால் |
இந்தமனத் தைத்தூதாய் ஏகுஎன்பேன்
இம்மனமும்
அந்தமனோ தீதர்பால் அண்டாதே |
(கண்ணி, 106-111)
(விடுப்பேன்
= அனுப்புவேன்; செப்பாதே
= கூறாதே; வல்லியப் பூம் தானை
= புலித்தோல் ஆடை; பரமர்
= ஈசர்; சாராதே =
சேராது; கோகிலம் =
குயில்; வலியான்
= கரிக்குருவி; ஏகு = செல்;
மனோதீதர் = மனத்திற்கு எட்டாதவர்)
3.4.2 செய்யக் கூடாதவை
தூது விடும் தலைவி தூதுப்
பொருளாகிய தமிழிடம் சிவபெருமானிடம் தூது செல்லும் போது இவை இவற்றைச்
செய்யக் கூடாது என்று அறிவுறுத்துகின்றாள்.
நல்ல நூல்களைக் கற்றும்
அவை கூறும் உண்மைப் பொருளைக் காணாதவர்; காசு, பணம் ஆகியவற்றிற்காக
உன்னை விற்பவர்கள் ஆகியோரை நீ அடையாதே. கற்றவர்களை இகழ்பவர்கள்,
சொற்களின் பொருள் சுவையைக் கேட்டு இன்புறாதவர்கள், நாய் போன்று கோபம்
கொள்பவர்கள் ஆகியோர் அருகே போகாதே. மாணவர்கள் ஆசிரியர்களிடம் நூல்களைக்
கேட்டுக் கற்கும் முறைப்படி கற்காதவர்களிடம் சேராதே என்று அறிவுரைகள்
கூறுகின்றாள். இது,
கற்பார் பொருள்காணார்
காசுபணம் காணில்உனை
விற்பார் அவர்பால்நீ மேவாதே - கற்றாரை
எள்ளிடுவார் சொல்பொருள்கேட்டு இன்புறார் நாய்போலச்
சள்ளிடுவார் தம்அருகே சாராதே - தெள்ளுதமிழ்ப்
பாயிரம்முன் சொன்னபடி படியாமல் குழறி
ஆயிரமும் சொல்வார்பால் அண்டாதே
(கண்ணி : 184-186)
(மேவாதே
= சேராதே; சள்ளிடுவார்
= குரைப்பார்; அண்டாதே
= நெருங்காதே)
எனக் காட்டப்படுகிறது.
மேலும், படிக்காதவர் இடத்தே
போகாதே. அன்பில்லாதவர்கள் இந்திரனைப் போன்று வாழ்ந்தாலும் அவரிடம்
செல்லாதே. அவர்களிடம் சென்று உண்ணாதே.
- கல்லார்பால்
ஏகாதே அன்பிலார் இந்திரன்போல் வாழ்ந்தாலும்
போகாதே அங்கே புசியாதே
(கண்ணி : 194-195) |
(புசியாதே
= உண்ணாதே)
என்றும், உன்னைச் சேர்ந்து இருந்தும் உன்னை மதியாதவர்கள்,
தெருக்களைச் சேராதே.
-
சேர்ந்து உன்னை
நம்பாதார் வீதி நணுகாதே
(கண்ணி : 193-198) |
(நம்பாதார்
= மதியாதவர்கள்)
என்றும் அறிவுரைகள் கூறுகின்றாள். |