5.1 இன்பத்தின் சிறப்புகள்
அறம், பொருள், இன்பம்,
வீடு ஆகிய நான்கும் உறுதிப் பொருள்கள் ஆகும். இவற்றுள் இன்பமே
சிறந்தது என்ற கருத்து அமையப் பாடப்படுவது மடல் இலக்கியத்தின் பண்புகளுள்
ஒன்று ஆகும். எனவே, பெரிய திருமடலிலும்
இன்பத்தின் சிறப்புகள் கூறப்படுகின்றன. மடல் ஏறுவதாகக் கூறும் பெண்
இன்பத்தின் சிறப்புகளைக் கூறுவதாக இப்பகுதி அமைந்துள்ளது. இன்பத்தின்
பெருமைகளைக் கூறுவதற்கு முன்பு அறம், பொருள், வீடு ஆகியவை பற்றியும்
இந்த நூல் குறிப்பிடுகிறது.
5.1.1 வீட்டின் தன்மை
உறுதிப் பொருள்கள் அறம்,
பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு ஆகும். இவற்றுள் கடைசியாக அமைவது
வீடு. இது உடல் அழிந்த பின்பு உண்டாவது. வீட்டை அடையத் தவம் செய்ய
வேண்டும். பழங்களையும் காய்ந்த சருகுகளையும் உண்ண வேண்டும். இலைகளால்
பின்னப்பட்ட குடிசைகளில் வாழ வேண்டும். குளங்களில் நீராட வேண்டும்.
மோட்சம் அல்லது வீடு
என்பதைக் கேட்டு உள்ளோம். ஆனால் சொர்க்கத்துக்குச் சென்றவர்களைக்
காட்ட முடியாது. அப்படிக் காட்ட முடியாமல் வீடு என்பது ஒன்று உண்டு
என்று கூறுவது அறியாமை என்று தலைவி கூறுகிறாள்.
தொல்நெறிக்கண் சென்றார் எனப்படும் சொல்அல்லால்
இன்னதுஓர் காலத்து இனையார் இதுபெற்றார்
என்னவும் கேட்டுஅறிவது இல்லை - உளதுஎன்னில்
மன்னும் கடும்கதிரோன் மண்டலத்தின் நல்நடுவுள்
அன்னதுஓர் இல்லியின் ஊடுபோய் வீடுஎன்னும்
தொல்நெறிக்கண் சென்றாரைச் சொல்லுமின்கள்;சொல்லாதே
அன்னதே பேசும் அறிவு இல் சிறுமனத்துஆங்கு
அன்னவரைக் கற்பிப்போம் யாமே
(அடிகள்: 29-36)
(தொல்நெறி = பழமையான நெறி;
இனையார் = இன்னார்; என்னவும் = என; மன்னும்
= நிலைபெறும்; கடுங்கதிரோன்
= வெப்பமான கதிர்களை உடைய சூரியன்; இல்லி
= சிறு ஓட்டை; அன்னதே =
அதையே) என்கிறாள்.
5.1.2 அறம், பொருள் ஆகியவற்றின் தன்மைகள்
வீடு பற்றிக் கூறிய தலைவி;
அறம், பொருள் ஆகியவை பற்றியும் அடுத்துக் கூறுகின்றாள். அறம் செய்தவர்கள்
இந்திரனின் தேவருலகம் செல்வர். தேவர்களால் வாழ்த்தப் பெறுவார்கள்.
சிங்கங்கள் பொறித்த இருக்கையில் அமர்வார்கள். தேவர் உலகப் பெண்கள்
விசிறி வீசுவார்கள். பெண்கள் உபசரிப்பார்கள். அங்கே கற்பக மரங்கள்
நிறைந்த காட்டின் வளங்களைக் காணலாம். பெண்கள் அங்கு விளையாடுவர்.
அங்குள்ள மண்டபத்தின் தரையில் இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.
தேவருலகப் பெண்கள் வீணை வாசிப்பர். பெண்கள் பூக்களின் தாதுக்களைச்
சூடிக் கொள்வார்கள். மந்தார மலர்களால் ஆன மாலையை அப்பெண்கள் அணிந்து
கொள்வார்கள். அப்பெண்களைத் தொட்டு விளையாடும் பேறு புண்ணியம் செய்தவர்க்குக்
கிடைக்கும். அவர்களே அப்பெண்களின் அழகிய பார்வையைப் பெறுவர். இவையே
அறம் செய்தவர் அடையும் பயன்கள். சிறந்த பொருளால் கிடைக்கும் பயன்களும்
இவையே ஆகும் என்கிறாள். மேலும், அறத்தின் பயன் நிலையில்லாதது. எனவே
நிலையான இறைக் காமமே நாம் வேண்டும் வழிமுறை என்கிறாள்:
அன்ன அறத்தின் பயன்ஆவது ; ஒண்பொருளும்
அன்ன திறத்ததே ; ஆதலால் - காமத்தின்
மன்னும் வழிமுறையே நிற்றும்நாம் (அடிகள் : 73-75) |
(அன்ன = அத்தகைய; ஒண்பொருள்
= சிறந்தபொருள்; அன்ன திறத்ததே
= அத்தகைய தன்மை உடையது; மன்னும்
= நிலைபெறும்; வழிமுறை = வழியில்;
நிற்றும் = நிற்போம்)
5.1.3 காமத்தின் தன்மைகள்
தலைவி நான்கு பொருள்களில்
காமமே (இன்பமே) சிறந்தது என்பதை விளக்குவதாகக் காட்டுகின்றாள். வட
நூல் மரபின்படி காமத்தின் எல்லையை மீறாதவர்கள் அதன் வலிமையை நன்கு
உணராதவர்கள் ஆவர் என்கிறாள். இதற்குப் பல சான்றுகளையும் தருகின்றாள்.
காமத்தின் எல்லையை மீறாதவர்கள் பொதிய மலையின் சந்தனக் குழம்பின்
தன்மை, புல்லாங்குழலின் இனிமையான ஓசை ஆகியவற்றை அறியாதவர்கள் ஆவர்.
இராமன் தந்தையின்
சொற்படி காட்டிற்குச் சென்றான். அக்காடு கொடுமையானது. அக்காட்டிற்கு
இராமன் சென்றபோது அன்னம் போன்ற நடையை உடைய சீதை இராமனைத்
தொடர்ந்து காட்டிற்குச் செல்லவில்லையா?
வேகவதி என்ற பெண்
தன் காதலனைக் காணாது தவித்தாள். தன் அண்ணன் தடுத்தும்கூடக் கேட்காமல்,
தன் காதலனைத் தேடி அடைந்தாள். இறுதியில் தன் காதலனைக் கண்டு அவன்
கைகளைப் பிடித்து, அவன் மார்பைத் தழுவிக்கொண்டாள்.
அருச்சுனன் சிறந்த
வீரன். நாககன்னி உலூபி. இவள் நாக மன்னன் கௌரவ்யனின்
மகள். இவள் அருச்சுனனிடம் கொண்ட காதலால் அவனைத் தழுவிக்கொண்டாள்.
அவன் நகரம் சென்று அவனுடன் வாழ்ந்தாள்.
பாணாசுரன் என்பவன்
மன்னன். அரக்கர்களில் ஒப்பற்றவன். இவன் மகள் உஷை. இவள் சிறந்த
அழகி. கண்ணபிரானின் அன்புப் பேரன் அநிருத்தன். அவனை
உஷை தன் தோழி சித்திரலேகை என்பவளின் மாயத்தால் பெற்றாள்.
அவனுடன் இன்பம் அனுபவித்தாள்.
இதைப் போன்ற பல உதாரணங்களை
நான் கூறமுடியும். இமவான் என்பவனின் மகள் உமை. இவள்
தன் தலை மயிரைச் சடையாக்கித் தவம் செய்தாள். தன் உடல் வாட, ஐந்து
புலன்களையும் அடக்கிக் கடுமையான தவம் செய்தாள். இதனால் சிவபெருமானைக்
கணவனாக அடைந்தாள். இந்த உமை சிவபெருமானைத் தன் மார்பில் பொருந்தும்படி
தழுவவில்லையா? இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளைத் தலைவி கூறுவதாகக்
காட்டிக் காமத்தின் வலிமையைக் கூறுகிறார், திருமங்கையாழ்வார்.
|