2.5.3
தன்மை அணி தஞ்சைவாணன் கோவை உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி
என்று உத்திகள் நிறைந்த ஒரு சிறந்த புனைவியல் நூலாக உள்ளது. எனினும் இயல்பு
நவிற்சி ஆகிய தன்மை அணியும் இதில் மிகுதியாக உள்ளது. அலங்காரங்கள் இன்றிப் பொருளின் இயல்பை நேரில் பார்ப்பது
போலத் தோன்றுமாறு, உள்ளதை உள்ளபடி விளக்குவது தன்மை அணி ஆகும். இந்த நூல் ஓர்
அகப்பொருள் நூல் ஆகும். அதனால் இதில் உண்மையான வாழ்க்கை நிகழ்ச்சிகளே மிகுதியும்
விளக்கப்பட்டுள்ளன. தலைவியின் அழகையோ, பாட்டுடைத் தலைவனாகிய அரசனின் நாட்டையோ
விளக்கும்போது தான் உவமை, உருவகம் போன்ற அணிகள் தேவைப்படுகின்றன. மற்றபடி ஒவ்வொரு
பாடலும் அகவாழ்க்கை நிகழ்ச்சிகளைக் கூறுவதால் பல பாடல்களில் இத்தன்மையணி இடம்
பெறுகிறது என்று கூறலாம். தலைவி தலைவனைச் சந்தித்து விட்டுச் செல்லுகிறாள்.
அவள் எப்படிச் செல்லுகிறாள் தெரியுமா? ‘அகில் புகை ஊட்டிய நீண்ட கூந்தலை ஒருகையில் ஏந்திக்
கொண்டும், மற்றொரு கையில் தான் அணிந்துள்ள துகிலை ஏந்திக் கொண்டும், இரண்டு
கால்களிலும் அணிந்த சிலம்புகள் ஒலிக்க நடக்கிறாள் இவ்வாறு, தலைவி நடமாடுவதை
இயல்பான காட்சியாக வருணிக்கிறார் புலவர்.அகிலேந்து
கூந்தல் ஒருகையில் ஏந்தி அசைந்து ஒருகை
துகில்ஏந்தி ஏந்தும் துணைச் சிலம்பு ஆர்ப்ப (அகில் =அகிற்புகை; துணை = இரண்டு; ஆர்ப்ப
=ஒலிக்க)
|