3.1.2 உலாவின்
அமைப்பு முறை |
உலாச் செய்திகள் கண்ணிகளால் அமைந்தவை. கண்ணி என்பது
இரண்டு கண்போல் இணைந்த இரண்டு வரிகளால் அமைவது. உலா இலக்கியத்தின் முற்பகுதியில்
உலாவரும் பாட்டுடைத் தலைவனது குலம், குடிப்பிறப்பு, மரபு, அழகு, கொடை, அணி
அணியும் முறை, அறிவு, ஆண்மை, அன்பு, நகர வரவேற்பு, களிறு ஊர்தல் ஆகியன கூறப்பெறும்.
தலைவன் சிறப்புக் கூறுங்கால் பத்து வகைச் சிறப்புகள் எடுத்துரைக்கப்படும்.
இதனைத் தசாங்கம் என்பர். பிற்பகுதியில் அவனைக் கண்ட பேதை, பெதும்பை, மங்கை,
மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற ஏழு வகைப் பருவ மகளிரின் (பொதுமகளிர்)
அழகும், பண்பும், காதலும், மயங்கும் முறையும் எடுத்துரைக்கப்படும். இதில்
புலவர் திறம் பளிச்சிடும் இடம் பெதும்பை மகளிர் நிலை பற்றிப் பாடுவதாகும்.
இதனாலேயே ‘பேசுமுலாவிற் பெதும்பை புலி’ எனப் பகரப்படுகிறது. நச்சினார்க்கினியர், உலா இலக்கியத்தில் வரும் காதல்
மகளிர் பரத்தையரே; குலமகளிர் அல்லர் என்பர்.
பெருங்கதையும் உலா பற்றிக் கூறுமிடத்தில் உத்தம மகளிர்
ஒழிய எனக் கூறிக் குல மகளிரை நீக்கும். பேராசிரியர் உரையும் தோற்றமும்
பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக்
கூறப்படாது எனக் கூறும். கடவுள், அரசன், வள்ளல், தலைவன் ஆகியோரைப் பாட்டுடைத்
தலைவனாகக் கொண்டு பாடும் மரபினை உலா இலக்கியத்தில் காணலாம். ஒரு நாளில் ஓர்
ஊர்தியில் ஒரு தலைவன் வர, ஏழு பருவப் பெண்கள் இதயம் நெகிழ்வது இலக்கணமாக
இருக்க, ஒரு தலைவன் ஏழு நாட்களில் ஏழுவித ஊர்திகளில் வர, ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பருவ மகளிர் காமுறுவதாகக் கூறும் கற்பனையை மதுரைச் சொக்கநாதர்
உலாவில் காணலாம்.
|