பார் புகழும் மன்னனாக விளங்கும் விக்கிரம சோழன் நாள்தோறும்
எண்ணற்ற தானங்களைச் செய்தான். அன்னம், ஆடை, பொன், பூமி, பசு முதலியவற்றை உயர்ந்தோர்க்குக்
கொடுப்பது தானம். இவை முறையே அன்னதானம், வஸ்திரதானம், சொர்ண தானம், பூதானம்,
கோதானம் என வடமொழியில் கூறப்படும். நீராடிக் கடவுட் பூசை முடித்தபின் ஏழைகளுக்கு
அன்னம், ஆடை முதலியன வழங்கினான். மிக்குயர்ந்த தானத்துறை முடித்து
வந்தான் என்கிறார் ஒட்டக்கூத்தர்.
கூத்தப்பெருமானையே குலதெய்வமாகக் கொண்டவன் இவன். வருவாயில்
பெரும்பகுதியைத் தில்லைக்கோயில் திருப்பணிச் செலவிற்கே தந்தனன் எனத் திருமழபாடிக்
கல்வெட்டுக் கூறுகின்றது. பூமகள் புணர பூமாது மிடைந்து என்று தொடங்கும்
கல்வெட்டு மெய்க்கீர்த்திகள் இச்செய்தியை நன்கு விளக்குகின்றன. கூத்தப்பெருமான்
திருக்கோயில் வெளிச்சுற்று முழுவதும் விக்கிரம சோழன் திருமாளிகை என்றும்
திருவீதிகளுள் ஒன்று விக்கிரமசோழன் தென்திருவீதி என்றும் இம்மன்னன்
பெயரால் வழங்கப்படுகின்றன. தில்லைக் கூத்தப் பெருமான் திருக்கோயிற்பணியில்
இவன் உள்ளம் பெரிதும் ஈடுபட்டிருந்தது என்பதை இதனால் உணரமுடிகின்றது.
புலவரைப் புரக்கும் பண்பாளனாக விக்கிரமசோழன் விளங்கியதைக்
காண்கிறோம். விக்கிரமசோழன் ஒட்டக்கூத்தருக்கு ஒரு காலத்தில் விருதுக்கொடியும்
சின்னமும் பரிசிலாக அன்புடன் அளித்தனன். அதனைப் பெற்றபோது ஒட்டக்கூத்தர், “மிகவும்
இழிந்த என் தமிழ்க்கவிக்கு இத்துணைச் சிறந்த கொடியும் சின்னமும் வேண்டுமோ?
உயர்ந்த தெய்வத்தன்மை வாய்ந்த புலவர்க்கு அளிக்கும் பரிசில் அன்றோ; இப்பரிசிலைப்
பெறத் திருஞானசம்பந்தரே தகுதியுடையவர் அல்லாது யான் தகுதியுடையேன் அல்லேன்”
என்று அடக்கமாகப் பாடுவதிலிருந்து புலவரைப் புரக்கும் உயர்ந்த பண்பாளனாக விக்கிரமசோழன்
விளங்கியதைக் காணலாம்.
|